என்நண்பர்ஆத்மாநாம்/கல்பனாரத்தன்

முதல் பதிப்பு : டிசம்பர் 2008
பக்கங்கள் : 152
விலை: ரூ 100

ஸ்டெல்லா புரூஸ் 2008 மார்ச் ஒன்றாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் இறுதியாக எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அவரது உயிர் நண்பர் அழகியசிங்கர் நூலாக வெளியிட்டுள்ளார்.

“வேட்கையும் இச்சையும் பிதுங்கும்
மனிதர்களின் ஊடே
காற்று நிறைந்த வயிறாய்
உடல் தனியே சென்று கொண்டிருந்தது”

ஸ்டெல்லா புரூஸின் கதைகளை தேடித்தேடி படித்த வாசிப்பனுபவங்களின் ஞாபக ஓட்டங்களை இப்புத்தகம் மீட்டெடுத்திருக்கிறது. ஆனந்தவிகடனில் ஸ்டெல்லா புரூஸ் தொடர்கதைகள் ஒரு முறைதான் பூக்கும், அது ஒரு நிலாக்காலம், மீண்டும் அந்த ஞாபகங்கள் எனத் தொடர்ந்து வாசித்த காலங்கள் வசந்தமானவை.

பிரிய கவிஞன் ஆத்மாநாவினுடனான அவரது அனுபவங்களை முதலில் பகிர்ந்து இருக்கிறார். அதன்பின் கிட்டத்தட்ட அவரின் சுயவாழ்க்கை அனுபவங்கள்.

ஆத்மாநாமுக்கும் அவரக்குமான பன்னிரண்டு வருட ஆழமான நட்பு, இருவரும் சேர்ந்து செல்லும் புத்தகக் கடைகள், இலக்கியக் கூட்டங்கள், இசைக் கச்சேரிகள், தேடித்தேடி இசைத்தட்டுகள் வாங்கி விடியவிடிய இசையில் திளைத்திருந்தது போன்ற ரசமான அனுபவங்கள் உள்ளன.

விருதுநகர் குடும்பம், அந்த சமூகத்துடனான இணக்கமின்மை, தன்னைப் புரிந்த அப்பா, எதையோ தேடிய பயணமாய் ஓடுகிறது அவர் வாழ்க்கை. புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமிருந்த அவரது சின்னம்மாவுடனான உரையாடல்கள், அதில் வெடித்த சிதைவுகள் எல்லாம் அவரது மென்மையான மனதை பிளவு கொள்ள வைக்கின்றன.

காமராஜருடனான அவரது அப்பாவின் நாப்பதாண்டு கால நட்பு ஆச்சரியப் படுத்துகிறது.

பவித்ரமான வாழ்பனுபவங்கள் வேறு ஒரு தளத்துக்கு நம்மை எடுத்துச் செல்கிறது. இன்னும் நிறைய காலங்கள் இருந்து நிறைய படைப்புகளை அவர் வழங்கி இருக்கலாம் என மனது ஒரு புறம் ஏங்கினாலும், அவரது காதல் மனைவி ஹேமாவுடனான அவர் வாழ்வு ஒரு அன்பு தோய்ந்த கவிதை. அதை இருவரும் திகட்டத் திகட்ட அனுபவித்து வாழ்ந்திருக்கின்றனர்.

ஹேமாவின் தங்கை பிரேமாவை தன் மகளாகக் கவனித்துக் கொள்கிறார். பிரேமாவின் மரணம் இருவரையும் நொறுங்கச் செய்கிறது.

உடல்நலம் சரியில்லாத தன் மனைவி ஹேமாவை ஒரு குழந்தை போல கவனித்து, தாதியாய் பணிவிடை செய்தாலும் மரணம் ஹேமாவைப் பறித்ததும் வாழ்வே சூனியமாகிறது. அவருடைய பிரிவைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்.

ஒரு பித்து நிலையில் பக்கங்களைப் புரட்டப் புரட்ட வாழ்க்கையின் வெவ்வேறு பக்கங்களில் எழுதித் தீர்த்த வரிகளைத் தாண்டி ஏதேதோ உணர வைக்கிறார். வாழ்க்கை பற்றிய முன் நிர்ணயங்களை தகர்த்து விட்டார்.

நெஞ்சமெல்லாம் கனத்து, உடலும் மனமும் காரணமின்றி தத்தளிக்கின்றன.

கண்களில் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் நிறைகிறது.
பிரியத்துக்குரிய, ஆதர்ஸ கலைஞன் ஸ்டெல்லா புரூஸின் எழுத்துகளுக்கு அன்பு ததும்பும் நினைவஞ்சலியாய் இந்தக் கண்ணீர்த் துளிகள் உதிரத்தை இளக்கி உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.

எண்ணங்கள் அற்ற மௌனத்தை மௌனமாக கடந்து கொண்டிருக்கிறேன்..

One Comment on “என்நண்பர்ஆத்மாநாம்/கல்பனாரத்தன்”

  1. எது எப்படி இருந்தாலும் தற்கொலைகளை யாரும் நியாயப்படுத்துவதை என்னால் சகிக்க முடிவதில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இம்மாதிரி தற்கொலைகள் அதிகம் என்று தெரிகிறது. தன்னம்பிக்கையை வளர்க்க இயலாத இலக்கியமும் தன்னம்பிக்கையை மேற்கொள்ள முயலாத இலக்கியவாதிகளும் ஒரு சமுதாயத்திற்கு என்னத்தை வழங்கிவிட முடியும்?

Comments are closed.