16 வயதே ஆன சீன மன்னருக்கு/நியாண்டர் செல்வன்

1922

16 வயதே ஆன சீன மன்னருக்கு பெண் தேடுகிறார்கள். ஒரு சம்பிரதாயத்துக்கு தலைநகரில் உள்ள இளம்பெண்களின் புகைப்படங்கள் எல்லாம் அவர் முன் குவிக்கபடுகின்றன.

மன்னரின் கண்கள் 11 வயதான ஷூ எனும் பெண்ணின் புகைப்படத்தின் மேல் படிந்தது. “அவளை கொண்டுவாருங்கள்”

அதன்பின் அங்கே பல்லக்கு விரைந்தது. ஷூ எனும் அந்த 11 வயது சிறுமி தூக்கிவரப்பட்டாள். அவளை மணந்த அதே நாளில் பட்டத்து ராணியாக வான்ராங் எனும் மங்கோலிய இளவரசியையும் மணந்தான். ஷூவுக்கு “மன்னரின் துணைவி” (Royal Consort) என்ற பட்டம் வழங்கபட்டது

என்னதான் துணைவி என்றாலும் அவள் மன்னர் மற்றும் பட்டத்து ராணிக்கு சரிசமமாக உட்காரக்கூட முடியாது. பட்டத்து ராணி, மற்றும் மன்னர் முன்ன்நிலையில் தரையில் மண்டியிட்டு தலை கவிழ்ந்தபடியே இருக்கவேண்டும். ஆனால் மன்னர் “துணைவி மகாராணி முன் மண்டியிடவேண்டாம்” என கட்டளை பிறப்பித்தார்.

அவ்வளவுதான். சக்களத்தி சண்டை துவங்கியது. விரைவில் அரண்மனை அரசியலில் அந்த சிறுமி தனித்துவிடபட்டாள். மன்னர் அவளை பார்க்க வருவதை நிறுத்தினார். வான்ராங்கின் மகிழ்ச்சி நீண்ட்நாள் நீடிக்கவில்லை. வேறு, வேறு துணைவிகள் வந்துகொண்டே இருந்தார்கள்.

அதன்பின் புரட்சி வெடித்தது. கம்யூனிஸ்டுகள் ஆட்சியை கைப்பற்றினார்கள். மன்னர் அனாதையானார். மற்ற துணைவியர் எல்லாம் ஓடிவிட, வான்ராங் மற்றும் ஷூ மட்டுமே அவருடன் விசுவாசமாக இருந்தார்கள். மூவரும் மகிழ்ச்சியாக, எளிய குடிமக்களாக சிலகாலம் வாழ்ந்தார்கள்.

அதன்பின் சீனாவை ஜப்பானியர் பிடிக்க, ஜப்பான் ஆட்சி செய்த பகுதிக்கு சென்று அங்கே பொம்மை மன்னராக இருக்க முனைந்தார் மன்னர்

மன்னர் முன் மண்டியிட்டே அமர்ந்து இருக்கவேண்டிய ஷூ அப்போதுதான் எதிர்த்து வாயை திறந்தாள்..”ஜப்பானியரை நம்பவேண்டாம்” என்றாள். கோபமடைந்த மன்னர் அவளை பொது இடத்தில் சாட்டையால் அடித்தார். இதே அரண்மனை, ஆட்சிபோகம் எல்லாம் இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு. இப்படி மன்னர் முன் வாயை திறந்த அரசியே சீன வரலாற்றில் அதுவரை கிடையாது.

அதன்பின் மூவரும் சின் ஜிங் நகரத்துக்கு சென்றார்கள். அடுத்த 20 ஆண்டுகள் ஜப்பானியர் பிடியில் இருந்த சீனாவில் மன்னராட்சி நடந்தது. வான்ராங் மீண்டும் பட்டத்து ராணி ஆனாள்

ஒருநாள் யதேச்சையாக வான் ராங் நடக்கையில் ஷூ கீழே காறித்துப்ப , அவ்வளவுதான். அது மரியாதை குறைவு என சொல்லி அவளை வான்ராங் பிடித்து அடிக்க…

“எத்தனை நாள் இந்த வாழ்க்கை வாழ்வது” என சொல்லி ஷூ தப்பி வெளியேறினாள். வெளியேறி மன்னர் மேல் விவாகரத்து வழக்கு தொடர்ந்தாள். சீனாவில் யாருமே செய்ய துணிந்திராத, கேள்வியே படாத புரட்சி, புதுமை அது

ஒட்டுமொத்த சீனாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டு விவாகரத்து பெற்று ஒரு பள்ளி ஆசிரியரை மணந்துகொன்டாள். தனிக்காட்டு ராணியானதில் வான்ராங்குக்கு ஒரே மகிழ்ச்சி.

ஆனால் போரில் ஜப்பானியர் தோற்றார்கள். அவளது கணவன் அவளை விட்டுவிட்டு ரஷ்யாவுக்கு தப்பிஓடினான். சீன புரட்சிபடைகளிடம் பிடிபட்ட வான்ராங் சிறையில் உயிர்நீத்தாள்

ஷூ மட்டுமே கடைசிவரை தன் கணவனுடன் வாழ்ந்து சாதாரண ஒரு இல்லத்தரசியாக மறைந்தாள் ஷூ.

“ஒய்யாரக்கொண்டையிலே தாழம்பூவாம்
அதன் உள்ளே இருப்பது ஈறும், பேனாம்” என்ற கதையாக

மகாராணி வாழ்க்கையை விட சாதாரணவாழ்க்கையின் எளிமை எத்தனை சிறப்பானது என்பது அவளுக்கு மட்டுமே தெரியும்.

~