ஒரே கதை இருவர் எழுதியது

அழகியசிங்கர் எழுதியது :

காலையில் நீலா வீட்டுக் கதவைத் தட்டியவுடன் அஞ்சலிக்குக் குழப்பம். என்ன குழப்பம் என்றால் இன்னும் நீலா எழுந்திருக்கவில்லையா
என்ற குழப்பம். இத்தனை நேரம் அலுவலகம் கிளம்ப அவசரப்படுவாள் நீலா. கேள்விக்குறியுடன் கதவு முன்னால் நின்று கொண்டிருந்தாள் அஞ்சலி. கொஞ்ச நேரம். மேடம் மேடம் என்று சத்தம் போட்டு கூப்பிட்டாள். உள்ளேயிருந்து எந்தப் பதிலும் இல்லை. சந்தேகப்பட்டு கதவை உற்றுப் பார்த்தாள்.கதவு வெளியே வெளியில் இருந்து லாக் செய்யப்பட்டிருந்தது. அவளுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. எங்கே இந்தக் காலை நேரத்தில் லீலா போயிருப்பாள் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் அஞாசலி. எங்கேயும் போவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
உடனே பக்கத்தில் இருப்பவர்களைக் கூப்பிட்டு கதவைத் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டாள். இறுதியில் போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் முயற்சியில் கதவு உடைத்து திறக்கப்பட்டது. உள்ளே பார்த்தால் நீலா அலங்கோலமான உடையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தாள்.

நாகேந்திர பாரதி எழுதியது :

‘ஐயோ மேடம்’ என்று அலறியபடி ஓடிச்சென்று நீலா உடலைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் அஞ்சலி . ‘ ‘அந்த கோபால் மோசமானவன் . அவனுடன் பழக வேண்டாம் என்று சொன்னேனே . கேட்டீர்களா . கடைசியில் இப்படி ஆகி விட்டதே’ என்று அலறுவதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் முரளி மனதில் பொறி தட்டியது .
. ‘ பாவம் சார், கூடவே வேலை பார்க்கிறவங்களாம். சேர்ந்து தான் தினசரி ஆபீஸ் போவாங்களாம் . இவங்க வந்துதான் கூட்டிட்டுப் போவாங்களாம் ‘ என்று பரிதாபப்பட்ட கான்ஸ்டபிள் கந்தசாமியை ‘ உஸ் ‘ என்று சொல்லி அடக்கி விட்டு , அஞ்சலியைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் தெரிய வந்தது இது .

அஞ்சலியின் சீனியர் நீலா ஆபீசில் . ஆனால் இந்தக் கிளைக்கு மாறுதல் ஆகி வந்து சேர்ந்தது சில மாதங்கள் முன்புதான். நீலாவின் அழகும் அறிவும் யாரைத்தான் கவராது , அலுவலகத்தில் அத்தனை பேரும் அவள் நண்பர்கள் தான். அஞ்சலியும் தான்.அஞ்சலியின் வீடு நீலாவின் வாடகை வீட்டுக்கு அருகில் இருப்பதால் தினசரி அவளை வந்து பிக்கப் செய்து நீலாவின் ஸ்கூட்டரில் சேர்ந்து செல்வது அஞ்சலியின் வழக்கம். நீலா தனது பெற்றோர்களை சில மாதங்களில் பெரிய வீடு பார்த்து அழைத்து வருவதாகச் சொல்லிக் கொண்டு இருந்தாள் . அது வரை அஞ்சலி இவ்வாறு மாலை சேர்ந்து வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு போவதும். காலையில் வந்து சேர்ந்து போவதும் நீலாவுக்கும் பிடித்துப் போயிற்று. .

அலுவலகத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே நீலாவின் வாளிப்பில் மயங்கிய மேனேஜர் கோபாலின் ஆசை வார்த்தைகளில் மயங்கி அவன் வலையில் விழுந்து விட்டாள் நீலா . கோபாலும் நீலாவும் காதலித்து வந்தனர். கோபால் இது போல் வேறு சில இடங்களில் பல பெண்களைக் காதலித்து காரியம் முடிந்ததும் சில நெருக்கமான போட்டாக்களை வெளியிடுவதாகப் பயமுறுத்தி அவர்களைக் கை விட்ட கதையை அஞ்சலி பலமுறை சொல்லியும் நீலா காதில் போட்டுக் கொள்வதாகவே இல்லை. இந்தக் காரியம் அவன் தான் செய்திருக்க வேண்டும் என்று அடித்துச் சொன்னாள் அஞ்சலி அழுதபடி .

‘நீ சொன்ன தகவல்களுக்கு ரெம்ப நன்றி அஞ்சலி , நீலாவைக் கொலை செய்த குற்றத்திற்காக உன்னைக் கைது செய்கிறேன் ‘ என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும் அதிர்ந்து போய் நின்றாள் அஞ்சலி .

அவளுக்குத் தெரியாது. வந்ததில் இருந்தே அஞ்சலி செய்து கொண்டு இருந்த வேலைகளை இன்ஸ்பெக்டர் கூர்ந்து கவனித்தது . கை ரேகைத் தடயங்களைக் குழப்பும் முயற்சியில் எவ்வளவு திறமையாகச் செயல் பட்டுக் கொண்டு இருந்தாள் அஞ்சலி . வெளியில் தொங்கிய பூட்டை இழுத்து இழுத்துப் பார்த்து தனது ரேகைகளையும் சேர்த்துப் பதிய வைத்துக் கொண்டு இருந்தாள் .

உள்ளே சென்றதும், நீலாவைக் கட்டிப் பிடித்து அழும் சாக்கில் , இவர்கள் போராடி அவளைக் கொலை செய்த முயற்சியின் இடங்களில் எல்லாம் , முக்கியமாகக் கழுத்துத் பகுதியில் தேவைக்கு அதிகமாகவே தனது விரல்களைத் தேய்த்ததும் , அவளது அலங்கோலச் சேலையைச் சரி செய்வது போல் தனது கைரேகைப் பதிவுகளை மறுபடி மறுபடி அழுத்தி அழுத்திக் கொண்டு இருந்ததும், தாங்கள் . ‘ யாரும் பாடியைத் தொட வேண்டாம் ‘ என்று சொல்லும் முன்பே அவசரம் அவசரமாய் நடந்ததை முரளியின் கழுகுக் கண்கள் கவனிக்கத் தவறவில்லை .

இன்னும், தொடர் விசாரணையில் அவர் சந்தேகப்படும் அஞ்சலி , கோபால் மேல் கொண்ட ஒருதலைக் காதல் விஷயங்களும், அவன் நீலாவின் மேல் கொண்ட காதலால் ஏற்பட்ட பொறாமையும் , கோபாலைப் பற்றிப் பொய்யாக எவ்வளவோ விஷயங்கள் சொல்லியும் நீலா மனம் மாறாததால் , இன்று காலை தனது ஒருதலைக் காதலை நீலாவிடம் சொல்லி அவள் விட்டுக் கொடுக்க மறுத்து தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் நடந்த கைகலப்பின் முடிவில் அவள் கழுத்தை நெறித்துக் கொன்ற கொலையும், இதில் தன்னைக் காதலிக்க மறுத்த கோபாலையும் சேர்த்து மாட்டி விட அஞ்சலி போட்ட திட்டமும் உண்மை ஆகத் தானே போகின்றன.

திரும்பிப் பார்த்த போது கான்ஸ்டபிள் கந்தசாமி ,அபூர்வ சகோதரர்கள் திரைப்பட கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர் ஜனகராஜை ‘ சார்ர்ர் ‘ என்று பார்ப்பது போல் பார்ப்பதின் பொருள் புரிந்து புன்னகைத்தார் இன்ஸ்பெக்டர் முரளி .