மணிக்கொடி ‘எழுத்தாளர் சி சு செல்லப்பா அவர்களின் கூடு சாலை சிறுகதை/நாகேந்திர பாரதி

நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே ., எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள கதை ‘மணிக்கொடி ‘எழுத்தாளர் சி சு செல்லப்பா அவர்களின் கூடு சாலை சிறுகதை. சிறு கதையில் இடம், நேரம், கருத்து மூன்றும் மிகவும் தெளிவாக , திறமையாக காண்பிக்கப்பட்டுள்ளன , கையாளப் பட்டுள்ளன. மிகவும் விறுவிறுப்பான வேகமான கதை .

இடம், மரங்கள் அடர்ந்த கூடு சாலை . சந்தை விட்டு மாட்டு வண்டிகள் விரைந்து வரும் சாலை. நேரம், மாலை மயங்கி இரவு ஆரம்பிக்கும் நேரம், கருத்து ; அந்த ஊரின் இரண்டு பெரிய மனிதர்களின் கவுரவப் பிரச்னைக்காக பழி வாங்கப்படும் வாயில்லா ஜீவன்கள் , வண்டி காளை மாடுகள் .
இரண்டு குன்றுகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில் வளைந்து வளைந்து செல்லும் அந்தக் கூடு சாலை யிலே நடக்கும் ஒரு மாட்டு வண்டிப் போட்டிக் கதையை , இரு மனிதர்களின் கவுரவப் போட்டிக் கதையை மிகவும் விறுவிறுப்போடு நாம் ரசிக்கும் படி எழுதி உள்ளார் ஆசிரியர்.

ஒரே ஊரில் வாழும் ஒரு மிராசுதாருக்கும் கவுண்டருக்கும் நடக்கும் கவுரவப் பிரச்சனையாக இதைக் காட்டி அதற்கு அந்த வண்டி மாடுகள், வண்டியோட்டிகளால் படும் பாட்டை உருக்கமாகக் காட்டி அந்த வாயில்லாச் சீவன்கள் மேல் நமக்குக் கருணை வரும்படி அவற்றை இவர்கள் படுத்தும் கொடுமைகளை எல்லாம் விரிவாக விளக்கி, கடைசியில் அந்த மாடுகளின் ரத்தம் பார்த்து அதன் உரிமையாளர்களுக்கே பரிதாபம் வந்து அவர்களின் கவுரவப் போட்டியை நிறுத்தி வைப்பதாகக் காட்டி முடிக்கிறார்

ஆனால் அந்த முடிவு வருவதற்கு முன்னால் , ஆசிரியர் காட்டியிருக்கும் காட்சிகள் அந்தப் பெரியவர்களின் கவுரவப் போட்டிக்கு நிழலாக மாறும் அந்த மாட்டு வண்டிப் போட்டியை நம் கண்முன் கொண்டு வந்து காட்டுகின்றன.

நிலவு வெளிச்சத்தில், மெல்லிய இருட்டில் அந்தச் சாலையை அவர் வருணிக்கும் விதமே அந்த இடத்திற்கு நம்மைக் கூட்டிச் சென்று விடுகிறது . அதைத் தொடர்ந்து அங்கே செல்லுகின்ற மாட்டு வண்டிகளின் வருணனை. தொடரும் பண்ணையார் , வண்டி ஓட்டி உரையாடல். அந்த வண்டியில் பூட்டியுள்ள மாடுகளைப் பற்றிய விபரங்கள். கூடு கொம்புச் செவலை , நீர்க்காலுக் கரம்பை, விரி கொம்பு – கவுண்டர் வீட்டு மாடுகள் . அவர் இப்போது வாங்கியிருக்கும் எடக்காடன் , பண்ணையார் வண்டியில் இப்போது பூட்டியிருக்கும் மயிலைக் காளை , புது மாடு பில்லை என்று மாடுகளின் வகைகளைப் பற்றி ஆசிரியர் விரிவாக விளக்கும் போது அவர் மாடுகளைப் பற்றி எந்த அளவு ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று புரிகிறது .

அதற்குப் பிறகு மாடுகளை வெறி பிடித்த படி பந்தயத்தில் ஓட வைக்கும் கொடூர விபரங்கள் . சாட்டை அடி , இளுவை இழுத்து விடுறது , விலாப்பக்கத்திலே முழங்கையை மடக்கிக் குத்துறது , பிடி கயிறை வெடுக்குன்னு சுண்டி இழுக்கிறது , சாட்டையைத் திருப்பி மட்டை அடியா போடுறது , வாலைப் பிடிச்சு நுனிக்கு மேலே நறுக்குன்னு கடிக்கிறது , முள்ளை எடுத்து அடி வயித்தில் குத்துறது ,அப்பா, பயங்கரமான விபரங்கள், அந்த வண்டி ஓட்டி மாடுகளைப் படுத்தும் பாட்டில் அவை வெறி பிடித்தது போல் வேதனையோடு ஓடும் விபரங்களில் , வார்த்தைகளின் வேகம் . அப்பப்பா

வண்டிச் சக்கரங்களின் கடகட சப்தம். கப் கப் என்று நடை வீசி கால் பரவுவது தெரியாமல் , கண்ணுக்குத் தெரியாத நடை வேகம், காளைகள் இரண்டும் கிடுகிடுவென ஆடின. உடல்கள் பதறின. பாய்வதிலேயே அவைகளின் கவனம் . சாலையே அதிரும்படி மிதி போட்டுப் போயின . சரளைகளில் பட்ட காற் குளம்புகளின் காலடியில் தீப்பொறிகள் சிதறித் தெறித்தன .

இப்போது இரண்டு வண்டிகளும் பக்கத்து பக்கத்தில் , கவுண்டரின் மாட்டு வண்டி ஓட்டும் மூக்கன், அவன் வண்டிச் சக்கரத்தின் நடு மூக்கு பண்ணையார் வண்டி மாட்டின் கழுத்தில் உரச, ரத்தம் .பண்ணையார் வண்டி ஓட்டி வீராச்சாமி , மிராசுதார் வண்டி மாட்டின் மேல் சாட்டையை பிசாசு மாதிரி வீசி விளாச அதன் முதுகிலும் ரத்தம். வர்ணனைகளில் நம்மையே பதற வைத்து விடுகிறார் சி சு செல்லப்பா அவர்கள்.

இப்போது கிளைமேக்ஸ் . தனது மாட்டின் காயம் பார்த்து மனம் இளகிய மிராசுதார், ஓரமா நிறுத்து, சாணி அப்பு காயத்திலே . என்று இறங்கி , வாய் ஓரம் நுரை ததும்பி , நாகம் போல் மூச்சு விட்ட காயம் பட்ட காளையை ஆசுவாசப்படுத்தி , ‘ நாசம், வண்டி , மாடு, வீம்பு எல்லாம்தான். நாமே எத்தனை தடவை தும்பு தெறிச்சு , முளைக்குச்சி உருவி, சாவி ஒடிஞ்சு எவ்வளவு துன்பப் படுத்தி இருக்கிறோம் ‘ என்று தன்னிலை உணர்ந்து வருந்துவது போல். அதன் பின் , மிராசுதார் வண்டியில் ஏறிப் புறப்பட , கவுண்டர் வண்டியும் பின்னால் மெதுவாகத் தொடர ஒன்றுமே நடக்காதது போல் அந்த வண்டிகள் இரண்டும் அந்த கூடு சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக போவதாக முடிக்கிறார் கதையை. புயலுக்குப் பின் அமைதி.

நடுவில் கதையில் வரும் மிராசுதார், கவுண்டர் வசனங்களிலும் , அந்த மாட்டு வண்டி ஓட்டிகள் வீராச்சாமி, மூக்கன் பேச்சுகளிலும் தெறித்த அந்த மூர்க்கமும், கவுரவமும் , அந்த அப்பாவி மாடுகளின் மேல் வன்முறையாகப் பாய்ந்து அவற்றின் ரத்தம் பார்த்து கொஞ்சம் ஓய்ந்து ‘ அசை நடையாகவே விடு ‘ என்று இரக்கமாக மாறுவதாக ஆசிரியர் முடித்திருந்தாலும், இரக்கமாக மாறுவதாக ஆசிரியர் முடித்திருந்தாலும் , ‘போட்டியில் ஜெயித்த மிருக வெறியும் , வாயில்லா ஜீவனின் ரத்தம் கண்ட இரக்கமும் ‘ கலந்த குரலில் மிராசுதார் பேசினார் . என்று ஒரு இடத்தில் எழுதுகிறார் ஆசிரியர்.. இது போன்ற உணர்வுகளை நுணுக்கமான உணர்த்தும் வசனங்களையும் , அந்த வண்டி ரேஸின் உக்கிர வர்ணனைகளையும் , நீங்கள் கதையைப் படித்துத்தான் அனுபவிக்க வேண்டும்.

கதையின் மாந்தர்களின் ரோஷ வேகத்தையும், கவுரவ வெறியையும் இவ்வளவு ஆக்ரோஷமாக இந்தக் கதையில் படித்து உணர்ந்த நமக்கு ‘ இந்த மனிதர்களின் மன மாற்றம் எத்தனை நாளைக்கு’ என்ற எண்ணம்தான் வருகிறது . இந்த போலிக் கவுரவ மனிதர்கள் மாறப் போவதில்லை.. அந்த மனிதர்களின் ரோஷம் மறுபடி பொங்கும், அந்த மாடுகள் மேல் பாயும், திரும்ப அந்த கூடு சாலையில் ரத்தம் தெறிக்கும், என்றே தோன்றுகிறது, நன்றி வணக்கம்.

——————————————-