மூன்று படங்கள்/ஜெ.பாஸ்கரன்

ஜெட் லேக் (LAG) இருந்ததால் எதிலும் கான்சென்ட்ரேட் செய்யமுடியவில்லை. அதிகாலை மூன்று மணிக்கு விழித்து, வெகுநேரம் படுக்கையில் புரண்டு, ஏதோ சாப்பிட்டு என்று ஒரு ‘மிதப்பான’ நிலை! எழுத, படிக்க இயலவில்லை. கண்களில் ஈரப்பசை ஒட்டினாற்போன்ற பிரமை. மிதந்தவாறே பேரனின் ஸ்கூல், பெயர்த்தியின் ‘டே கேர்’ செண்டர், காட்ஸ்கோ, வால்மார்ட் என காரில் பவனி வந்த நேரம் போக, ஹாலில் பார்த்த மூன்று படங்களைப் பற்றிப் பேசலாம் – சுருக்கமாகத்தான்!

போர்த்தொழில்:

முகநூலில் டீஸர் பார்த்தபோதே, பார்க்க நினைத்த படம். ஏமாற்றவில்லை. நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர்!

சீரியஸ் சீனியர் போலீஸ் ஆபீஸர் (சரத்குமார் அப்படியே பொருந்திப் போகிறார். சீரியஸ் சரி, எப்போதும் முகத்தில் ஒரு வருத்தமும் தெரிகிறதே அது ஏன்? நல்லவேளை ஒரு துக்கமான ஃப்ளாஷ் பேக் இல்லை) ஒரு சீரியல் கொலைகாரனைக் கண்டுபிடிக்கப் போகிறார். அவருக்குத் துணையாக ஒரு புதிய அதிகாரி – அகாதமியின் கோல்ட் மெடலிஸ்ட், வீட்டிலிருப்பவர்களுக்காகப் போலீஸ் ஆனவர் – பயந்தாங்கொள்ளி (அசோக் செல்வன் பாத்திரம் உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்) இருவரும் ஒவ்வொரு கொலையாகத் துப்பு துலக்குவது சுவாரஸ்யமாக, மிகையில்லாமல், விறுவிறுப்பகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு ஸைக்கோ தான் கொலைக்கான காரணம், அவனது சிறுவயது மனக் காயங்கள், எப்படி எதிர்பாராத ஒரு கொலை, அது கொடுக்கும் இன்பம் அவனை மேலும் மேலும் கொலை செய்யத்தூண்டுகிறது என்பதெல்லாம் வழக்கமான த்ரில்லர் சமாச்சாரங்கள்தான் என்றாலும், யார் என்பதை மிக சாமர்த்தியமாக மறைத்து கதையை நகர்த்தியிருக்கும் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா பாராட்டுக்குரியவர். பிரபலங்களின் மசாலாப் படங்களுக்குள் போய்விடாமல் இருந்தால், இன்னும் ஒரு சில நல்ல தமிழ்ப் படங்களுக்கு இவர் கியாரண்டி!

வழக்கமான இண்டர் டிபார்ட்மெண்டல் பாலிடிக்ஸ் இதிலும் உண்டு. ஜேக்ஸ் பிஜாயின் இசை அளவுடன் மிரட்டுகிறது. கலைச்செல்வனின் ஒளிப்பதிவு, ஶ்ரீகாந்த் சாரங்கின் எடிட்டிங் இரண்டும் ஒரு த்ரில்லருக்கான பரபரப்பையும், சுவாரஸ்யத்தையும் கூட்டுகின்றன.

“பயப்படுகிறவன் கோழையல்ல. பயந்து ஓடுகின்றவனே கோழை” இந்த வசனம் சொல்பவர் சரத். அதை உணர்ந்து தன்னை மாற்றிக்கொள்பவர் அசோக் செல்வன் – இருவரும் நல்ல ‘காம்போ’!

குழந்தைகளுக்கு முன்பு போரிடும் பெற்றோருக்கு ஒரு செய்தி சொல்லி முடிகிறது படம். சீனியர் ஆபீஸர், ஜூனியர் ஆபீஸரை அங்கீகரித்தாலும், அதே சீரியஸ் முகத்துடன் அவரைத் தன்னுடன் சேர்த்துக்கொள்வது இயல்பாக உள்ளது!

கொலை:

பாப்புலர் சிங்கராக வர விரும்பி, ஒரு மாடல் ஆக மாறும் வேளையில் தன் அபார்ட்மெண்டில் கொலை செய்யப்படும் லைலா (மீனாட்சி செளத்ரி), தானே தன் குரலில் தன் கொலை பற்றி சொல்கிறார்! இளம் போலீஸ் அதிகாரி சந்தியா(ரித்திகா சிங்) , முன்னாள் புலனாய்வு அதிகாரி விநாயக் (விஜய் ஆண்டனி) உதவியுடன் இந்தக் கொலைக்குக் காரணமானவனைக் கண்டுபிடிப்பதுதான் ஒன் லைன் ஸ்டோரி!

காதலன் சதீஷ் (சித்தார்த்த சங்கர்), புகைப்படக்காரர் அர்ஜுன் (அர்ஜுன் சிதம்பரம்), லைலாவின் பிஆர்ஓ பப்லு(கிஷோர் குமார்), மும்பை மாடலிங் நிறுவன மானேஜர் ஆதித்யா(முரளி சர்மா), நிறுவன ஓனர் (ராதிகா), எதிர்வீட்டு கம்ப்யூட்டர் ‘டெக்கி’ பையன் என எல்லோர் மீதும் சந்தேகம் வரும்படியான சூழல்கள், விசாரணைகள் – விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடுவது சிறப்பு. முன்னும் பின்னுமாக கதை சொல்வது சுவாரஸ்யம்தான் என்றாலும், பார்வையாளன் குழம்பிவிடும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது (அதுவும் ஜெட் லேக் ஆக்கிரமிப்பில் இருக்கும்போது!).

ராதிகாவும் ஒரு சின்ன ரோலில் வந்து போகிறார்.

எல்லா சீனியர் போலீஸ் ஆபீஸர்களுக்குமான உணர்ச்சியில்லாத ஒரு சோக முகம் விஜய் ஆண்டனிக்கு – அவருடைய பர்சனல் வாழ்க்கை சோகம் படத்துடன் ஒட்டவில்லை!

துவக்கக் காட்சியில் காட்டப்படும் கொலை, இறுதியில் திரும்பவும் வரும்போது, ஒரு எதிர்பாராத ‘ட்விஸ்ட்’ கொடுத்து முடித்திருப்பது வித்தியாசமான சுவாரஸ்யம்!

ஜெய்லர்:

ரஜினி ரசிகர்களுக்கான படம். இடைவேளை வரை தேவலாம். பிறகு கொஞ்சம் இழுத்தடிக்கிறார்கள். ரஜினியை சண்டை போட விடாமல், அவர் உதவியாளர்களை விட்டிருப்பது நல்ல உத்திதான் – ரசிகர்களுக்கு ஏமாற்றமே! நல்ல கதையுடன், நடிப்புக்கு நிறைய ஸ்கோப் கொடுத்து ரஜினியை யாராவது அணுக மாட்டார்களா என்ற ஏக்கமே மிஞ்சுகிறது.