அத்தையம்மா/மீனாட்சி சுந்தரமூர்த்தி

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் நிகழ்ச்சி எண்; 60

நூல்; அத்தையம்மா( சிறுகதைத் தொகுப்பு)

நூலாசிரியர்; சுரேஷ் ராஜகோபால்.

‘கணக்கு வாத்தியார்’

கதைச்சுருக்கம்;

            கதைசொல்லியின் வாழ்வில் நடந்ததோர் நிகழ்வுதான் இந்தக்கதை.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் இவர் , இவரது வகுப்பில் மொத்தம் 40 பேர் அதில் இருபது பேர் மாணவியர். இவர் படிப்பில் கெட்டிக்காரர் அதே சமயத்தில் இரட்டை வாலாகவும் உள்ளார் குறும்புத்தனத்தில்.

        கணக்கு வாத்தியார் வேதாந்தம் நல்ல நிறம் ஆனால் கசங்கிய சட்டை, பேண்ட்தான் எப்போதும் போட்டு வருவார்.  நல்லகுணம், நல்ல திறமை, நன்றாகப் பாடம் நடத்துவார் , அப்படியும் புரியாத மாணவர்களைத் தன் அறைக்கு அழைத்து தனியாகச் சொல்லிக் கொடுத்து விளங்க வைப்பார். அவர் வகுப்பில் பாடம் நடத்தும்போது வகுப்பு அமைதியாக இருக்கவேண்டும். எவராவது குறும்புத்தனம் செய்துவிட்டாலோ, கவனிக்காமலிருந்தாலோ அருகில் வந்து .நன்றாகக் கிள்ளி தண்டிப்பார். வளர்ந்த பெண்பிள்ளைகள் என்றுகூட நினைக்க மாட்டார். 

       அவருக்கு மாணவர்கள் ,’நலங்கிள்ளி’ என்றும் மாணவியர் ‘நெடுங்கிள்ளி’ என்றும் பட்டப்பெயர் வைத்திருந்தார்கள்.. அவரிடம் இன்னுமொரு கெட்ட பழக்கமிருந்தது .,பேசும்போது எதிரிலிருப்பவர் மீது எச்சில் தெறிக்கும். அதற்கு சாரி என்பார்.

ஒட்டுமொத்த வகுப்பிற்கும் அவர் கிள்ளுவது பிடிக்கவில்லை, அதனால் அவருக்குப் பாடம் கற்பிக்க முடிவு செய்து அதற்கு நம் கதைசொல்லியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒருநாள் அவர் வகுப்பில் நுழையும்போது வாயில் கை வைத்துக் கொண்டு ,’இன்று யார்மீது எச்சில் மழை பொழியப் போகிறதோ’ என்கிறார்,

கோபம் கொண்ட வேதாந்தம் இவரிடம் வந்து பலமாகக் கிள்ள ஆரம்பிக்கிறார் , இவர் வலியைப் பொறுத்துக் கொண்டு ,’ இதற்கப்புறம் சாரி  சொல்வீர்களா?’ என்கிறார் வாத்தியாருக்கு அவமானமாகப் போகிறது. 

அதற்குப்பின் அவர் யாரையும் கிள்ளுவதில்லை. ஆனால் இவரைப்பற்றி நன்றாகப் படித்தும் நல்ல ஒழுக்கம் இல்லை என்று சக ஆசிரியர்களிடம் சொல்லி வந்தார். ஒருநாள் ஆசிரியர்கள் அறைக்குச் சென்ற இவர் ஏனிப்படி என்னைப் பற்றிச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘உன்னிடம் படிப்பிருந்து என்ன பயன்? ஒழுக்கம் இல்லை ‘ என்றதோடு அன்று வகுப்பறையில்,

 ‘ஒழுக்கம் கெட்ட இவனோடு யாரும் பேசாதீர்கள்’ என்றும் சொல்கிறார் இவரிடம்,’உன்னை எப்படி ஒடுக்கறேன் பார்? என்கிறார்.

       ஒருநாள் இவரின் வீட்டிற்கு இவரின் தந்தையின் நண்பரோடு வருகிறார் கணக்கு வாத்தியார் வேதாந்தம். இவரைப் பார்த்து அஞ்சிய மாணவர் தந்தையிடம் தன்னைப் பற்றிச் சொல்லவே வந்ததாக எண்ணுகிறார். அவர் சொல்வதை நம்ப வேண்டாமெனச் சொல்லிவிட வேண்டுமென்று அப்பாவின் அலுவலக அறைக்குச் செல்கிறார். 

ஆனால் பேச்சு வரவில்லை, இவரின் தந்தை ,’ என்னடா ஆச்சு? இப்ப யாரோ வந்திருக்காங்க, அப்புறம் பேசலாம் என்று அனுப்பி விடுகிறார். அறையின் வெளியில் நின்று கொண்டு, உள்ளே சென்ற கணக்கு வாத்தியார் என்ன சொல்கிறார் என்று பார்க்கிறார்.

அப்பாவின் நண்பர்,

‘இவர் எனது நண்பர், அரசுப்பள்ளி வாத்தியார். இவர் மனைவிக்குச் சயரோகம், நாளைக்கு சிகிச்சைக்குப் போகிறார். அவசரமாக 20,000 ரூபாய் தேவைப்படுகிறது, நீங்கள் தரவேண்டும், நான் ஜாமீன் கையெழுத்துப் போடுகிறேன். பி.எப். லோன் வந்ததும் தந்திடுவார்  என்கிறார். கதை சொல்லியின் தந்தை வட்டிக்குப் பணம் தருபவர். அவர் சிறிது நேரத்திற்கு முன் தன் மகன் இதுபற்றிச் சொல்லவே வந்தான் போலுமென நினைக்கிறார். குமாஸ்தாவிடம் சொல்லி மகனை அழைத்துவரச் செய்கிறார்.

‘ஓ, இதற்குதான் சிபாரிசு பண்ண வந்தியா ..உங்க சாருக்குப் பணம் தரேன்’ என்கிறார்

இவரும் சந்தோஷம் அப்பா என்கிறார், 

கண்கலங்க விடைபெறுகிறார் கணக்கு வாத்தியார்.

நயங்கள்; 

1. ஆசிரியர் திறமையானவர். மாணவர்களுக்குப் பாடம் விளங்கச் செய்வதில் சோர்ந்து போகாதவர்,

2. மாணவன் படிப்பிலும் கெட்டி,, வம்பிலும் சுட்டி.,

3.நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி எனப் பட்டப்பெயர் வைப்பதில் கண்ணியம் மீறாமை.

4.புகார் சொல்ல வந்ததாக மாணவன் நினைக்க, கடன் வாங்க வாத்தியார் வந்தது,

5. முடிவில் சந்தர்ப்பம் மாணவனுக்குச் சாதகமாகி  ஆசிரியரைத் தன் தவறை உணர வைப்பது.

முரண்பாடுகள்;

1 நல்ல குணமிருந்தும்  ஆசிரியர் தன்முனைப்பு உடையவராக இருப்பது.

2. மன்னிக்கத் தெரியாமலிருப்பது. ஆசிரியரே மாணவன் மீது அவதூறு பரப்புவது.

3. ஆசிரியரின் மனைவிக்குச் சயரோகம், அது எச்சில் மூலம் பரவும் ஒரு தொற்று வியாதி, இதை அறியாதவராயிருப்பது.

4. சுகாதாரக்கேடு என்று உணர்ந்து மற்றவர் மீது எச்சில் தெறிக்கப் பேசும் பழக்கத்தை மாற்றிக் கொள்ளாதது.

5. தண்டனை தருவதில் முன் யோசனை தேவை, வளர்ந்த பெண்பிள்ளைகளைக் கிள்ளுவது உள்நோக்கம் எதுவும் இல்லாவிடினும் நாகரீகமில்லாத செயலே.

கதைபற்றி;

எளிய நடையில் நல்ல சொல் ஆளுமையோடு எழுதப்பட்ட அருமையான கதை பாராட்டுதற்குரியது.

One Comment on “அத்தையம்மா/மீனாட்சி சுந்தரமூர்த்தி”

  1. மிக்க நன்றி தங்கள் விமர்சத்துக்கு.
    கணீர் குரலில் மிகத்தெளிவாக பேசியது உங்கள் வலிமை.
    முரண்பற்றி தெளிவாக சொன்னது சிறப்பு.
    ஒவ்வொருவருக்கும் ஒரு வித குணம் இருக்கும், அதன் வெளிப்பாடே அனைவரையும் கிள்ளுதல், பேசும் போது எச்சல் தெறித்தால். தன் குறை தனக்குத் தெரியாதே.

Comments are closed.