கர்டாப தீபிகா/எம்.டி.முத்துக்குமாரசாமி



கழுதைகளைப் பற்றி சமஸ்கிருதத்தில் நூல் ஒன்று இல்லை என்பது நஸ்ருதீனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. சமஸ்கிருதத்தில் இல்லாத அறிவுத்துறை என்று எதுவுமே கிடையாதே அப்படி இருக்கையில் கழுதை வளர்க்கிற முல்லா நஸ்ருதீனுக்கு கழுதைகள் பற்றிய மூல நூல் எதுவும் தெரியாதென்றால் நஸ்ருதீனுக்குத்தானே அறிவுக் குறைவு என்று எல்லோரும் நினைப்பார்கள்? எனவே நஸ்ருதீன் தானே கற்பனையாய் ‘கர்டாப தீபிகா’ என்றொரு கழுதை பற்றிய நூல் சமஸ்கிருதத்தில் இருப்பதாய் சொல்ல ஆரம்பித்தார். யாருமே அதற்கு ஆட்சேபணை தெரிவிக்காததால் ‘கர்டாப (गर्दभ) தீபிகா’ என்றொரு நூல் இருப்பது உறுதியாகிவிட்டது.

கர்டாப தீபிகா அப்படியொன்றும் லேசுப்பட்ட நூல் இல்லை. வேதாந்த தரிசனத்தைக் கண்ட ஞானியே அந்த நூலையும் எழுதியிருக்கமுடியும். அவர் முக்காலத்தையும் அறிந்த ஞானியாகவும் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவது போல நார்ச்சத்து மிகுந்த உணவே கழுதைகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும் அதுவே அவற்றிற்கு உகந்த உணவாக இருக்க முடியும் என்று கர்டாப தீபிகாவின் முதல் சூத்திரத்திலேயே எழுதியிருக்கிறார். கர்டாப தீபிகாவுக்கு உரை எழுதிய ஐரோப்பிய ராஜ குலத்தில் பிறந்து இந்திய சன்னியாசியாய் வாழும் ரூல்டாஃப் ஹிம்லர் பாரத தேசமே நீரிழிவு நோயினால் பீடிக்கப்பட்ட நடுத்தரவர்க்கத்தினரால் நிரம்பியிருக்கும் என்ற தீர்க்கதரிசனமே கர்டாப தீபிகாவின் சாரம்சம் என்றும் சொல்லியிருக்கிறார்.

நடுத்தர வர்க்கத்தினர் போலவே கழுதை ஏகத்துக்கும் பொதி சுமக்க வல்லது. எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்யும். கழுதைகள் சமூகப் பிராணிகள். அவை தங்களை விட உயர்ந்த ஜாதியாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் குதிரைகளோடு எளிதில் சினேகம் கொள்ளக்கூடியவை. கழுதைகளின் சமூகவியலில் ‘சமஸ்கிருதமயமாதல்’ என்பது போல குதிரைமயமாதல் என்றொரு சமூகச்செயல்பாடு முல்லா நஸ்ருதீனால் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

கழுதைகள் அப்புராணிகள் என்பதால் அவற்றுக்கு அக இலக்கியம் மட்டும்தான் உண்டு வீர தீர பிரதாபங்களைச் சொல்லக்கூடிய புற இலக்கியங்கள் கிடையாது. நஸ்ருதீனுக்கு கழுதைகள் விளிம்பு நிலை பிராணிகளாக ஒதுக்கப்படுவதற்கு அவற்றைப் பற்றி குதிரைகளுக்கு இருப்பது போல வீர தீர பிரதாபங்கள் இல்லாமையே என்று கருதினார். அப்பாவி கழுதைகள் மென் குணங்கள் உடையவையாய் இருப்பதும் பழகும் மனிதர்களோடு வேப்ப மர பிசின் போல ஒட்டிக்கொள்வதுமாக இருப்பதால் அவை கடைத்தேற்ற இயலாத, இயற்கையால் கைவிடப்பட்ட மிருகங்கள் என்று ஒரு நாள் நஸ்ருதீன் தன் டைரிக்குறிப்பில் எழுதினார்.

நஸ்ருதீன் தன் கழுதைக்கு பெயர் சூட்டி அதன் வம்ச வரலாற்றினைப் பற்றி அவ்வபோது பேசுவது மூலமாக மட்டுமே தன் கழுதைக்கு மட்டுமாவது சமூக அந்தஸ்து உண்டாக்கமுடியும் என்று அறிந்தார். இந்த இந்திய மரபின் ஞானம் முல்லா நஸ்ருதீனுக்கு வெகு தாமதமாகவே வந்து சேர்ந்தாலும் ஒரு வழியாக வந்து சேர்ந்ததே என்பதே பெரிய ஆசுவாசம்தான் அவருக்கு.
முல்லா நஸ்ருதீனின் கழுதை பெயர் இப்போது முமுட்சு. மகாபாரதத்தில் சொல்லப்படும் குரு வம்சம் சந்திர வம்சம் ஆகியவற்றின் மூதாதைகள் போல முமுட்சுவின் ஆதி மூப்பரான லொட்டு லொசுக்கும் கூட மேய்ச்சல் நிலப்பகுதியில் நாடோடியாய் திரிந்தவர்தான். லொட்டு லொசுக்கு, புசுக்கு, கொடுக்கு, மொடுக்கு, சொடுக்கு, டபக்கு என்று நீளும் முமுட்சுவின் ராஜவம்சத்தில் மேய்ச்சல் நிலங்களுக்கான அடிதடி இல்லை, போரில்லை, சண்டையில்லை, சடங்குகள் இல்லை, சம்பிரதாயங்கள் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் லொட்டு லொசுக்கு வம்சத்தில் முமுட்சுவாக பிறப்பதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

முல்லா நஸ்ருதீனின் முமுட்சு பற்றிய சிந்தனைகள் அத்தனையுமே முமுட்சுவுக்கு இணை தேடப்போய் மணமகள் தேவை விளம்பரம் கொடுக்கப்போனபோது உண்டானதுதான் என்று வாசகர்கள் யூகிக்க இடமிருக்கிறது
—-
மீள் பகிர்வு