அன்பார்ந்த நண்பர்களே, படைப்பாளிகளே…/ஆகாச மூர்த்தி

தினவு என்னும் பெயரில் புதிய சிற்றிதழ் தொடங்கவிருக்கிறோம். கடந்த ஒருவருடமாக நெருங்கிய நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தோம். இன்று அறிவிக்கத் துணிந்தோம்.

கொஞ்சம் பதட்டமாகவும் உணர்கிறோம். ஒரு கலை இலக்கியச் சிற்றிதழ் தொடங்குவது என்பது அறிவியக்கத்தின் தொடர்ச்சி.
பொருளாதாரப் பின்புலமற்ற ஒருவனால், ஒரு சிலரால் எப்படி நடத்தமுடியும். நடத்த முடியும் என்று நவீன தொழில் நுட்ப வசதிகள் பதிலளிக்கின்றன.

ஆனால் உருவமும் உள்ளடக்கமும் எல்லாக் காலத்திலும் பெரும் உழைப்பைக் கொண்டதுதான். சிற்றிதழ் முயற்சி என்பது இப்போதும் குயவன் மட்பாண்டம் செய்வது போலவும், மரப்பாச்சி பொம்மைகள் தயாரிப்பது போலவுமான கைவினைக்கு இணையானதாகவே பார்க்கிறோம்.

உதிரி ஆளுமைகளின் அறிவியக்கத்திலிருந்து ஒட்டுமொத்த மானுட மாண்புகள் புதுப்பிக்கப்படுவதாக நம்புகிறோம்.

தினவு ஏன் தொடங்க வேண்டும். சந்தையில் நிறைய சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனவே… ஆனாலும் போதாமை நிலவுகிறது. எவற்றில். முன்னிருந்த சிற்றிழ்களில் நடந்த சமரசமற்ற கலை இலக்கிய அரசியல் உரையாடல்கள் இப்போது நிகழ்வதில்லை. நாம் அனைவரும் அடையாளப் பித்தில் உறைந்திருப்பதாகக் கருதுகிறோம்.

ஊடகங்கள் அனைத்துமே பாசிசத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருக்கின்றன. உலக ஏகாதிபத்தியம் நமது கழுத்துவரை கத்தியாக வந்து நின்று அச்சுறுத்துகின்றன. இயற்கையான வாழ் நிலையிலிருந்து தூரமாக விலகிச் சென்றுகொண்டிருக்கிறோம்.

ஆண்ட்ராய்டு யுகம் அடுத்தகட்டமாக மெய்நிகர் உலகிற்கு நம்மை இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. நம்மால் கற்பனையிலும் கண்டிராத அதிசயங்கள் நிகழக் காத்திருக்கின்றன. கூடவே பண்பாட்டு, பாரம்பரிய தற்சார்பு அழிவுகளும். காட்டின் சிள்வண்டுகளின் ஓசையை செல்போனில் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

மனிதர்கள் தனித்தனி தீவுகளாகிவிட்டனர். தனக்குத்தானே அகழி வெட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறோம். புறவுலகமும், அகவுலகமும் குழம்பிய நிலையில் திசைவழிகளை மறந்துவிட்டோம்.

தினவு கலை இலக்கியத் தளம் சமரசமற்ற முற்போக்கு அரசியலை முன்னெடுக்கும். குழு அரசியல், சாதி, அடையாள அரசியலுக்கு தினவு இடம் தராது. ஜனநாயகப் பூர்வமான அரசியல் கட்டுரைகளுக்கு நிச்சயமாக இடமுண்டு.

நவீன இலக்கியம் உரத்து குரல் எழுப்பக் கூடாது என்பதை வன்மையாக தினவு மறுக்கிறது. நவ பார்ப்பனிய, ஓருலக ஏகாதிபத்திய சூழ்ச்சி நாடகங்களைப் பேசும் கட்டுரைகளுக்கும், படைப்புகளுக்கும் தினவில் இடமுண்டு. பிம்ப அரசியலுக்குள் மாட்டிக்கொள்ளாத புதிய தத்துவார்த்த, கலையம்சம் சிதையாத பாதைக்கு தினவு அழைத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்.

நாம் புதிய செய்தி ஒன்றும் சொல்லிவிடவில்லை. எப்படியாகிலும் நாம் நம்மைக் காத்துக்கொள்வோம். புறவுலகின் அந்நியத்தன்மையிலிருந்து விலகி இன்னும் நம்மை இயல்பாக சக மனிதர்களோடு பழகுவதற்கான முயற்சியைத் தொடங்குவோம். நெகிழ்வான, மனந்திறந்த உரையாடலுக்கான எழுத்தியக்கத்தைக் கைக்கொள்ள வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தினவு அரையாண்டு இதழ் ஒன்று 250 ரூபாய். வருடச் சந்தா 500. ஆயுள் சந்தா 5000. மேலும் இதனோடு இணைப்பாக கவிதை விமர்சனத்திற்கு என்று தனி இதழும் கொண்டுவரும் திட்டத்தில் இருக்கிறோம். பொதுவாகவே விமர்சன மரபு அருகிவிட்டது. வேண்டியவர் வேண்டாதவர் பார்த்துதான் விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. படைப்பை முன்னிட்டு வருபவை வெகுசிலதான்.

அதிலும் கவிதைகளுக்கு விமர்சனங்களே இல்லை. பகிர்தல்கள் இல்லை. அதை ஈடுகட்டும் பொருட்டு இந்த முயற்சி. முதல் நூறு ஆண்டுச் சந்தாதாரர்களுக்கு மட்டும் கவிதை விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு இணைப்பாகக் கிடைக்கும்.

கவிதை விமர்சன இதழ் புத்தக வடிவில் வரும். சங்க இலக்கியத்திலிருந்து நவீன கவிதைகள் வரை யாரும் யாருடைய கவிதைகளையும் விமர்சிக்கலாம். வெறும் பாராட்டாக அல்லாமல் தன் நட்பை வளப்படுத்தும் வகையில் வடிவத்திலும் பொருளிலும் பிழைகளைச் சுட்டிக்காட்டும் வண்ணமாக அமைந்திருந்தால் சிறப்பு. பத்து கட்டுரைகள் இதழில் வருகிறது என்றால் ஒரு கட்டுரைக்கு எம்மால் இயன்ற சன்மானம் வழங்கவும் முடிவு செய்திருக்கிறோம்.

அதேபோல தினவு இதழில் ஐந்து சிறுகதைகள் வருகிறது என்றால் இரண்டு சிறுகதைகளுக்கு சன்மானம் வழங்கவும் முடிவு செய்திருக்கிறோம். மற்றபடி கவிதைளுக்கு அல்ல. விமர்சனம் ஒன்றுக்கு உண்டு.

மீண்டும் நமது பதட்டத்தைப் பதிவு செய்கிறோம். எப்படி வரவேற்பு கிடைக்கப் போகிறது. இது ஒரு நண்பர்கள் இணைந்த கூட்டியக்கம். நான் மட்டுமல்ல. இலக்கிய நண்பர்களின் மேலான ஆதரவு இல்லாமல் தினவு தொடர வாய்ப்பில்லை. அதனால்தான் அரையாண்டு இதழாகத் தொடங்கியிருக்கிறோம். நீண்ட காலத்திற்கு இந்தப் பணி தொடர வேண்டும் என்பதால்.

நமது முதல் நன்றி லார்க் பாஸ்கரனுக்கு. அதிகமில்லை, இரண்டு நாட்களில் சில நிமிட உரையாடல்களில் அடைப்படமும் தினவு எழுத்துருவும் படைத்து வாட்ஸ் அப்பில் அனுப்பிவிட்டார்.
வரும் தை – 2024 அன்று முதல் இதழ் வெளிவரும்.

தினவுக்கு என்று மின்னஞ்சல் முகவரி பின்னர் அறிவிக்கப்படும். தற்சமயம் இந்த முகவரி aakaasamuthup@gmail.com. நண்பர்கள் தங்களின் புதிய வீரியமான படைப்புகளை அனுப்புமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.