நடுநாயகன்/பேயோன்

எனக்கு நாஜியும் பழக்கம்தான்
யூதனும் பழக்கம்தான்
கம்யூனிஸ்ட் நண்பர்கள் எனக்குண்டு
காடுதின்னிக் குபேரர்களும் என் தோழர்களே
ஒரு கலவரம் என்று வரும்போது
குழந்தைகளை, பெண்களைக்
கொன்று தீயில் எறிகிறானே
அவனுடைய குரு எனக்குச் சகோதரன் முறை
எனக்குக் கருப்பர்களைத் தெரியும்
பால் புதுமையரைத் தெரியும்
எழுத்துப்பிழையுடன் கோஷங்கள் எழுதித்
தெருவுக்கு வந்து போராடுபவர்களைத் தெரியும்
இவர்களையெல்லாம் துணியை உருவி
நச்சுவாயுக் கூடத்தில் நிறுத்துபவர்களைத்
தனிப்பட்ட முறையிலேயே தெரியும்
நான் தரப்புகளில் பேதம் பார்ப்பதில்லை
எல்லாத் தரப்பும் முக்கியம்தான்
ஐந்து விரல்கள் ஒன்றாக இருக்குமா
ஏழு வண்ணமும் இருந்தால்தானே வானவில்
எல்லோரும் மனிதர்கள்தானே
ஒடுக்குவோரில் நல்லவர்கள் இல்லையா
ஒடுக்கப்படுவோரில் தீயவர்கள் இல்லையா
அப்பாவி மக்களில் எல்லோருமா அப்பாவி
யாரை விலக்கி யாருக்கு லாபம், சொல்லுங்கள்
எனக்கு முத்திரை குத்துவதில்
உங்களுக்கு ஏதாவது கிடைக்கிறதென்றால்
மகிழ்ச்சி. ஆனால் உங்களை மாதிரி
என்னை இருக்கச் சொல்லாதீர்கள்!