கடவுள் தரிசன அனுபவம்/பாலகுமாரன்

யோகி ராம்சுரத் குமார் நட்பு கிடைத்தது. கடவுள் தரிசன அனுபவம் அது. அவர் எழுத்தின் ஆரம்பப் புள்ளியை அணுகும் அனுபவத்தைத் தந்தார். அதன் பிறகு கவித்துவ நடையோடு எழுத்து அமைந்தது. சரித்திரம் பக்கம் பார்வை சென்றது. சரித்திர நாவல் எழுதவேண்டும் என்பதற்காக அது தொடர்புடைய இடங்களுக்குச் சென்று அவற்றோடு ஒட்டி உறவாடி, அந்த அனுபவத்தை கற்பனையில் கொண்டுவந்து எழுத்தில் வடித்தேன்.

அதற்காக குதிரையேற்றம் கூடக் கற்றுக் கொண்டேன். சரித்திரக் கதைக்காக குதிரையேற்றம் கற்றுக் கொண்டது நான் ஒருவன்தான் என்று நினைக்கிறேன்.

இப்படி கதைக்குத் தொடர்பானவைகளை நேரில் கண்டு அதன் வர்ணனைகளோடு எழுத ஆர்வம் பிறந்து.

அதன் ஒரு வெளிப்பாடாகத்தான், பயணிகள் கவனிக்கவும் என்று விகடனில் எழுதினேன். விமான நிலையத்துக்குச் சென்று, அங்கு நடப்பவைகளை துல்லியமாகக் கவனித்து எழுதினேன். அடுத்தடுத்து பல நாவல்கள் இந்த அனுபவத்தைக் கொடுத்தன.

கல்திரை நாவல் எழுதும்போது, அந்த நாவலின் மையக்கருத்துக்கான கல்வெட்டு கிடைத்தது. தொல்பொருள்துறையைச் சேர்ந்த நண்பர்கள் உதவினார்கள். சரித்திரக் கதை எழுதும்போது, பெரும்பாலும் தொல்பொருள் வல்லுனர்களை பலரும் மறந்துவிடுவார்கள். ஆனால் நான் உடையார் நாவல் எழுதியபோது, அவர்களுக்கு மறக்காமல் நன்றி தெரிவித்திருக்கிறேன்.

  • பாலகுமாரன்
    நன்றி: தினசரி.காம்