பதினெண்கீழ்ப் பிணக்கு/எம்.டி.முத்துக்குமாரசாமி

பகுதி -1

1
புத்த பூர்ணிமையை மறந்துவிடுங்கள்
எந்த விரல் நிலவைச் சுட்டுகிறதோ
அந்த விரலைக் காட்டித்தாருங்கள்
——
2
நீருக்கு வெளியே
மீன்கள் துள்ளிக் குதித்து
மீண்டும் நீரில் மறைகின்றன
வானில் மின்னல் தோன்றி
மீண்டும் வானில் மறைகிறது
உன்னிலும் என்னிலும்
சில எண்ணங்கள்
சில எதிர்ப்புகள் தோன்றி
எங்கே மறைகின்றன?
——
3
போதிமரம் எங்கேயிருக்கிறது?
நீங்கள் இந்தக் கேள்வியை எங்கேயிருந்து கேட்கிறீர்கள்?
——-
4
வழி தப்பிய குழந்தை எப்படி வீடு திரும்பும்?
நீங்கள் இந்தக் கேள்வியை எங்கேயிருந்து கேட்கிறீர்கள்?
—-
5
மைத்ரேய புத்தனின் வருகை எப்படிப்பட்டதாக இருக்கும்?
கைச்சொடக்கு போல
——-
6
போதனைதான் என்ன?
திறந்த மனதாக இருந்தாலும் வெளிப்புறமில்லை
மூடியிருக்கக்கூடுமாயின் உட்புறம் இல்லை
——-
7
மரபின் போதனை என்ன?
மப்பும் மந்தாரமுமான நாட்களில் விரிந்த செம்பருத்தி
அழகாய் இருக்கிறது
———-
8
எந்த உண்மை பற்றிய கருத்திலும்
உண்மை இருப்பதில்லை
——-
9
இன்மை என்பதொரு வடிவம்
வடிவம் என்பதொரு இன்மை
———-
10
மனதுக்கு வெளியே பூர்ணிமை இல்லை
அதன் ஒளியும்
—-
11
உனது துக்கம் எனது துக்கம்
எனது துக்கம் உன்னுடையதல்ல
—-
12
கவிதா நிமித்தங்கள் நிரம்பிய
ஒரு பூரண சந்திரோதயம்
வீறெட்டெழுகிறது
நானோ அதைத் தவறவிட்டு
பக்கத்து வீட்டு
மொட்டைமாடியில்
சிறுமி தன் நாய்க்குட்டியிடம்
விளையாடுவதை லயித்துப்
பார்த்திருக்கிறேன்
புதிதாய் வாங்கியிருக்கிறாள்
அது அவள் பின்னாலேயே ஓடுகிறது
பூர்ணிமை நடுக்கடலுக்கு மேல்
உருண்டோடி பட்டொளி வீசுகிறது
நெடுநேரமாய் பார்த்து நிற்கிறேனோ
சிறுமி சிணுங்கும் நாய்க்குட்டியை
இரு கைகளால் தூக்கி
என்னிடம் பெருமை பொங்க காட்டுகிறாள்
என் கட்டைவிரல் உயர்த்தி வாழ்த்துகிறேன்
நிலவும் சிறுமியும் நாய்க்குட்டியுமென
திவ்யமொன்று கூடுகையில்
அலைகளற்ற நிசப்தமாய்
அடங்குகிறது என் கடல்
——-
13
சியாமளம் அடரும் காலத்தில்
தொலைய வாய்ப்பில்லாத
செம்பருத்திகள் தங்கள் செடிகளில்
அழகாய்த்தானே இருக்கும்?
——
14
கண் பொத்தி ஐந்து எண்ணி
கண் திறக்கையில்
அனைத்தும் மாறிவிட்டன
துணுக்கு மேகத்தையும் காணோம்
—-
15
மலையுச்சிக்குத் தெரியாமல் எங்கே போய்
ஒளிந்துகொள்வது
எஞ்சும் அதிசயம் மலையுச்சியாகவே இருக்கிறது
—-
16
சித்திரா பௌர்ணமியில் புத்தபூர்ணிமை
வருவது அபூர்வம்
பொதுவாக வைகாசியில்தான்
புத்த பூர்ணிமை பூரணம் கொள்ளும்

17
சற்றே முந்தினாலும்
சற்றே பிந்தினாலும்
பூரணம் பூரணமே
—-
18
மகா முத்திரை
என்பது
மந்தகாசப் புன்னகை