திறன் பேசியை  நழுவ விட்டதால் ஏற்பட்ட ஆபத்து/ அழகியசிங்கர்

துளி 271

நேற்று நடந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். வழக்கம்போல் நடைப்பயிற்சி போகும்போது திறன்பேசியை எடுத்துக் கொண்டு போனேன்.
வெளியே செல்லும்போது அடிக்கடி ஒவ்வொரு முறையும் என் கால்சட்டை பையில் கைவிட்டு. சோதனை செய்வேன்.திறன்பேசி இருக்கிறதா என்று.
நேற்றும் அப்படித்தான். நடைப்பயிற்சியின் போது என்னுடன் ஒரு நண்பர் வருவார். அவருடன் பேசிக்கொண்டே நடந்து போவேன். நடைப் பயிற்சி என்று சொல்வதைவிடப் பேச்சுப் பயிற்சியும் நடைப்பயிற்சியும் சேர்ந்தே இருக்கும்.
இலக்கிய நண்பர் ஒருவர் வெகு நாட்கள் கழித்து காலை நேரத்தில் தொலைப்பேசியில் அழைத்தார். .
விடாமல் அவர் என்னுடன் பேசிக் கொண்டிருந்தது, என்னுடன் நடைப் பயிற்சி செய்து வரும்
நண்பருக்குப் பிடிக்கவில்லை.
இங்கே ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். தொலைப்பேசியில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது மற்றவர்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதுவும் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருப்பவனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நான் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததை நடைப் பயிற்சி நண்பர் விரும்பவில்லை.
“காலையில் யாருடன் அக்கப்போர்,” என்று கிண்டல் செய்தார்.
அந்த இலக்கிய நண்பர் இருவருக்கும் நண்பர் என்பதால் அவரிடம் பேசும்படி கொடுத்தேன். இங்கேதான் பெரிய தப்பு செய்து விட்டேன்.
திறன் பேசியின் மதிப்பை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.
வழக்கம்போல் உணவகம் மனோஜ் பவனில் காபி குடிக்கச் சென்றோம்.
என் நடைப் பயிற்சி நண்பர் என் திறன் பேசியுடன் இலக்கிய நண்பருடன் பேசிக்கொண்டே வந்தார்.
நடைப் பயிற்சி செய்யும் நண்பர் ஒரு கையில் காபியையும் இன்னொரு கையில் என் திறன் பேசியும் வைத்துக் கொண்டிருந்தார்.
அந்த ஊசலாட்டத்தில் திறன்பேசியை கை நழுவ விட்டார். திறன் பேசி தரையில் விழுந்து பெரிதாகச் சத்தமிட்டது.
உடனே திறன்பேசியின் தொடுதிரை போய் விட்டது. ஒரு வினாடி அதிர்ச்சி ஆகிவிட்டது.
என்ன முயற்சி செய்தும் திறன் பேசியின் தொடும் திரையை பழையபடி கொண்டு வர முடியவில்லை.
இந்த நேரத்தில் நான் திறன் பேசியைப் பல விதங்களில் பயன் படுத்துகிறேன். அதன் மூலம் சூம் கூட்டம் நடத்துகிறேன். வங்கிக் கணக்கைப் பயன்படுத்துகிறேன். முக்கியமாக அன்றாடம் விருட்சம் நடத்துகிறேன். யு ட்யூப், அமேசான் திரைப்படம் பார்க்கிறேன்.
திறன் பேசியின் துணை இல்லாமல் என்னால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்று தோன்றியது.
இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டதே என்று என் மீதே எனக்கு வருத்தம்.
நண்பரைக் கோபித்துக் கொள்ள முடியவில்லை. என்னுடைய மகா தவறு என்று தோன்றியது.
திறன்பேசியை அவரிடம் கொடுத்திருக்கவே கூடாது. அவரிடம் மட்டுமில்லை யாரிடமும்.
திறன் பேசியை எடுத்துக் கொண்டு. சாம்சங் கடைக்குச் சென்றேன். நந்தனம் சென்றேன். ஏனென்றால் மாலை நடக்கும் சூம் கூட்டத்திற்குள் திறன் பேசியைச் சரி செய்ய வேண்டும்.
ரிப்பேர் செய்யக் கொடுத்தேன். இரண்டு மணி நேரம் ஆகுமென்றார்கள்.
அங்கயே பழியாய்க் கிடந்தேன்.
திறன் பேசியின் தொடுந்திரையை உயிர்ப்பிக்க எனக்கு ஐந்தாயிரம் ரூபாய் செலவு. நான் எதிர்பார்க்காத விரும்பாத செலவு.
இனிமேல் இன்னும் கொஞ்சம் ஜாக்கியாக இருக்க வேண்டுமென்று இதன் மூலம் பாடம் கற்றுக் கொண்டேன்.
மற்றவரிடம் நமது திறன் பேசியைக் கொடுக்கும் போது. எப்படிப் பிடித்துக் கொள்கிறார்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். கொடுக்காமல் தவிர்ப்பது மிக மிக அவசியம்.

One Comment on “திறன் பேசியை  நழுவ விட்டதால் ஏற்பட்ட ஆபத்து/ அழகியசிங்கர்”

  1. திறன்பேசி என்றா smart phone ஆ? அலைபேசி என்று குறிப்பிட்டாலே போதுமே!

    2. உங்கள் அலைபேசியைத் தவறவிட்டவர் யாரோ, அவரே உங்கள் நஷ்டத்தை ஈடுசெய்யவேண்டும். நீங்கள் கேட்கக் கூச்சப்பட்டாலும், இதைப் படித்த பிறகாவது அவர் முன்வரட்டும்.

Comments are closed.