இருமை/பானுமதி

(என் கவிதை 29/09/23)

இருள் எழும்பி ஓளி தஞ்சம்

மெல்லியதாகக் காதோரம் சொன்னது.

நீ நீண்டு இரு இருளே பகலில்

மனிதன் செய்வது பளிச்செனத் தெரிகிறது

உன் கலக்கத்தை நீ சொல்லிவிட்டாய் ஒளியே

என் கலங்கத்தை என்ன செய்ய? நீயும்,

நானும் ஆலிங்கனம் செய்வோம் பின்னரும்

மறைவோம், தோன்றுவோம். அலகிலா விளையாட்டின் நியதியில்

வைகறையிலும், அந்தியிலும் சிரிப்போம்

மௌனம் எனும் வாய்ப்பூட்டில் இருக்கும் கன்றுகள் நாம்

இதோ பார் ஒளி எழும்பி இருள் தஞ்சம்

மனித்த பிறவியும் வேண்டுவதே

விசேஷ வீட்டின் முற்ற மாக்கோலத்தில் சிதறிய மணிகள்

கம்பிகளூடே உள்ளே வந்தது பட்டுக் குருவியின் சிட்டுக் குருவி

நாலைந்து தின்றவுடன் குறுக்கும் நெடுக்குமாய் நின்றும்

கிடந்தும் இருக்கும் மனிதர்களைப் பார்த்து பயந்தது.

பறந்து பறந்து சட்டத்தை முட்டியது. சிறு கிண்ணத்தில்

என் செல்ல மகள் வைத்த குடி நீரை ஆம்பல் வாய் திறந்து

மிடறு மிடறாய் குடித்தது. சட்டென அவள் தோளில் ஏறிக் கொண்டது

செடி ஏந்தும் பூவாய் அவள் வாசலுக்கு எடுத்துச் செல்ல ஜிவ்வென்று

பறந்து வட்டம் சுற்றி பின் மீண்டும் அவள் தோளில் வந்தமர்ந்தது

மதுரையின் மீனாள் தோள் அமர்ந்த கிளி ;என்ன தவம் செய்தேன்?

மனித்த பிறவியும் வேண்டுவதே இம் மா நிலத்தே!

One Comment on “இருமை/பானுமதி”

Comments are closed.