
தன் பிளிறலில்
வனத்தின் கம்பீரத்தைக்காட்டும்
களிறு போல்
அவனின் மொழிநடை
குறிபார்த்து வேட்டையாடும்
புலியின் பாய்ச்சலாய்
அவன் மொழியின் வீச்சு
காடுகளின் திசையறிந்த
பறவையின் பறத்தலைப்போல்
மொழியின் திசைக்குள்
சென்று திரும்பும் லாவகம்
தடையின்றி உச்சிமலை
ஏறும் அரவத்தின் கால்களாய்
நா மொழியின் பயிற்சி
காட்டுப்பூக்களில் விடாமல்
தேன் உறிஞ்சும் தேனீயாய்
அவனின் ஆழ்ந்த வாசிப்பு
மூலிகையின் நறுமணத்தை
சுமக்கும் காடு போல்
அவனின் பிச்சிப்பூ சொற்கள்
எடுத்த வந்த
என் இதயம்
முகர்ந்து முகர்ந்து
பிச்சியாகிறது
அவனொரு மொழிக்காடு

Miga Arumai!
வெகு கம்பீரமான ஆண்மகனை விவரித்த விதம் மிக மிக அருமை. த்யாகராஜரின் க்ருதி ஒன்று நினைவிற்கு வருகிறது. – நாத ஸுதாரஸம்- இதில் ராமனின் பேச்சின் இனிமையை அம்புகளைச் செலுத்தும் விதத்துடன் உவமித்திருப்பார்!