மூன்று கவிதைகள்/லாவண்யா சத்யநாதன்

வெளிச்சம்

நிலா
விடுப்பில் சென்ற இரவு.
வனவழிப் பயணம்
கைவிளக்கின்
மஞ்சளைக்
கருப்பாக்கியது காற்று.
வழி நெடுக
மின்மினிகள்

எம்மாத்திரம் நாம்?

கிண்ணம் விட்டு
எண்ணெய்சொட்டு
மண்ணில் பட்டு
விடாமல் காக்கும்
முனைப்பில்
முனிவனே
மாலனை மறந்தான்.
குடும்பி நான்

எம்மாத்திரம்?

துணி

உங்கள் ஊரில்
பலரும்
அம்மணம் மறைக்கும்
துணியைக்
கட்டுவதில்லை
அடுத்த ஊரான்
எனக்குத் தெரியும்.
என் கேள்வி
நீ கட்டிக்
கொள்கிறாயா
இல்லையா
என்பதுதான்

One Comment on “மூன்று கவிதைகள்/லாவண்யா சத்யநாதன்”

Comments are closed.