ஷாட் பூட் த்ரீ…/ஜெ.பாஸ்கரன்

..

சமீபத்தில் பார்க்க நேர்ந்த தமிழ்ப் படங்களில் அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகளும், நம்ப முடியாத திரைக்கதைகளும், மிகைப் படுத்தபட்ட ‘ஹீரோ’ ஆராதனைகளும், அரைகுறை ஆடையுடன் உடல் அசைவுகளும், காதுகளைத் துளைக்கும் இரைச்சலான இசை (?) யுடன், பொருளே இல்லாத பாடல் (?) வரிகளும், வசனங்கள், உச்சரிப்பு இவற்றிலும் தமிழ்க் கொலையும் விரவிக் கிடந்தன. இன்றைய படங்கள் என்னைப்போன்ற வயதானவர்களுக்கு இல்லையோ என நினைத்தேன் – கொஞ்சம் உண்மையும் அதுதான். இந்த நிலையில் தென்றலாய் வந்து என்னை நெகிழ்த்தியது ஒரு படம்!

சமீபத்தில் ‘ஷாட் புட் த்ரீ’ படப் ப்ரிவ்யூ பார்த்தேன். வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு ‘ஃபீல் குட்’ படம் பார்த்த நிறைவு. இங்கே குழந்தைகளுக்கான படம் என்று ஒன்றைக் காணமுடியாது. அவர்களின் எதிர்பார்ப்புகள், எண்ணங்கள், உலகம் எல்லாமே பெரியவர்களிடமிருந்து வேறுபட்டவை. திரைப்படத்தில் குழந்தைகளைக் குழந்தைகளாகவே – அடல்ட் போல வசனம் பேசாமல், கையில் அருவாளுடன் சென்று வன்முறையில் இறங்காமல் – காண்பித்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். குழந்தைகள், அவர்கள் ஆசையுடன் கொண்டாடும் ஒரு அழகான நாய், இயல்பான பெற்றோர் என அன்றாடம் நாம் காணும் பாத்திரங்கள், சின்னச் சின்ன திருப்பங்கள், சமூகப் பார்வை என்ற பெயரில் யாரையும் முதுகில் குத்தாத உண்மையான சமூகப் பார்வையுடன் காட்சி அமைப்புகள் என சிறப்பான படம்! படம் முழுவதும் நகைச்சுவை, இருக்கையின் நுனியில் அமர்ந்து, நகத்தைக் கடித்தவாறு பார்க்க வைக்கும் ஒரு ‘சஸ்பென்ஸ்’, இயல்பான நடிப்பு, இதமான இசை – அறிமுக இசையமைப்பாளர் ராஜேஷ் வைத்தியாவுக்கு ஒரு ‘சபாஷ்’ – ‘எகிரிக் குதிக்காத’ சீரான எடிட்டிங், கண்களை உறுத்தாத படப்பிடிப்பு, தொய்வில்லாத திரைக்கதைக்கு, ‘நான் தான் டைரக்டர்’ எனத் தன்னை முன்னிருத்தாத டைரக்‌ஷன் என ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி!

நான்கு குழந்தைகள் – ப்ரனிதி, பூவையார், கைலாஷ் ஹீட், வேதாந்த் வசந்த் – ஒரு நாய் – Max – இவர்களைச் சுற்றி ஒரு அருமையான திரைக்கதை (ஆனந்த் ராகவ் & அருண்). வெங்கட் பிரபு, ஸ்நேகா, சிவாங்கி, டெல்லி கணேஷ், கவிதாலயா கிருஷ்ணன், வையாபுரி எனத் தேர்ந்தெடுத்த நடிகர்களின் இயல்பான நடிப்பு. யோகி பாபு, குழந்தைகள், நாய், குழந்தைகள் படத்திற்கான வில்லன்கள் (baby’s day out பட வில்லன்கள் போல!) இவர்களின் திரைக்கதையுடன் பிணைந்த பகுதி சிறப்பு! குழந்தைகள் குழந்தைகளாகவே இருப்பது படத்தின் சிறப்பு – ரமணாவாக வரும் பூவையாருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது!

தெரு நாய்கள், சமூக சேவை, கார்ப்பரேஷன் நடவடிக்கைகள், இடையில் நடக்கும் தரகுகள் எல்லாம் சரியான விகிதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன!

MAX – அழகான நாய்! இயல்பாக அதை நடிக்கவிட்டு, உலவ விட்டிருக்கும் இயக்குனர் அருணாசலம் வைத்தியநாதனுக்கு ஒரு சபாஷ்!

குழந்தைகளுக்கான படம் என்று இப்படத்தை முத்திரை குத்தி விட்டு விட முடியாது! குழந்தைகள் உள்ள சுவாரஸ்யமான குடும்பப் படம்!

படத்தைப் பற்றி, காட்சிகளைப் பற்றி பேச ஆசைதான் – உங்கள் தியேட்டர் அனுபவத்திற்குக் குறுக்கே நான் நிற்பது நியாமல்ல என்பதால் இத்துடன் இங்கு நிறுத்திக்கொள்கிறேன்!!.

One Comment on “ஷாட் பூட் த்ரீ…/ஜெ.பாஸ்கரன்”

Comments are closed.