தாத்தா வீடு/பி. ஆர். கிரிஜா

தாத்தா பாட்டி வீட்டிற்கு விடுமுறையில் வந்த சுந்தருக்கு தலை கால் புரியவில்லை. அவன் கையோடு கொண்டு வந்த கருப்பு பென்சிலால் சுவர் முழுக்க கிறுக்க ஆரம்பித்தான். பாட்டி ஒன்றுமே சொல்லவில்லை. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு பேரன் வந்ததால் அவள் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போய் விட்டாள்.
“தாத்தா, நான் நிறைய
வரஞ்சுட்டேன் , நீ வந்து பாரேன், என்று அவரை இழுத்துக் கொண்டு தான் வரைந்ததை பெருமையுடன் காண்பித்தான், பெரியசாமியின் ஆறு வயது பேரன். அவர் அதையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு தன்னுடைய குழந்தைப் பருவம் நிழலாய் வந்து போனது. இதே மாதிரி அவர் சுவற்றில் கிறுக்கிய போது அவர் அப்பா அடித்தது, அவர் தாத்தா அதைத் தடுத்து இவரை
அரவணைத்தது எல்லாம் ஒரு நிமிடம் வந்து போனது. சுந்தரை
அணைத்துக் கொண்டே ” கண்ணா, நீ என்ன வேண்டு மானாலும் வரஞ்சுக்கோ… நான் ஒன்னும் சொல்ல மாட்டேன், நீ பின்னாடி பெரிய ஒவியனா வரலாம், யார் கண்டது? ” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பெரியசாமி. அவருக்கு சின்ன வயதில் சுந்தரைப் போல் இந்த வீட்டில் ஓடியாடி விளையாடியது, இதே சுவற்றில் கிறுக்கி அப்பாவிடம் அடி வாங்கியது நினைவில் வந்தது. மனசு ஆனந்தத்தில் துள்ளி குதித்தது. அவரும் சேர்ந்து அவனுடன் வரைய ஆரம்பித்தார். சுந்தர் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்து கல கலவென சிரித்தான்.


5/10/2023