வீடு விற்பனைக்கு/புவனா சந்திரசேகரன்

சென்னைக்கு மிக அருகில், நாலு எட்டு நடந்தால் செங்கல்பட்டை அடையும் தூரத்தில் இருந்த அந்தப் பழைய வீட்டை விலைக்கு வாங்க வந்திருந்தார் சங்கரன். தனி வீடாக வாங்கி இடித்துக் கட்டிவிட்டால் பணி ஓய்வு பெற்ற பின்னர் வந்து தங்கும் பிளான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

வீட்டைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார் அந்த புரோக்கர். அந்த அறையில் நுழைந்ததும் சுவரில் இருந்த கிறுக்கல்கள் கண்ணில் பட்டன.

” பாவம் சார் அந்தக் கிழவர்! குடும்பம் முழுசையும் விபத்தில் தொலைச்சுட்டு இந்த ரூமில நாள் பூரா உக்காந்து இந்தக் கிறுக்கல்களையே வெறிச்சுப் பாத்துட்டிருந்தவரு போன மாசம் தான் இறந்துபோனார். தூரத்து சொந்தக்காரனுக்குப் போய்ச் சேந்திருக்கு இந்த பிராப்பர்ட்டி. அவரு சீக்கிரமா வித்துத் தரச் சொல்லிருக்காரு. நல்ல சகாயமாப் பேசி முடிச்சிறலாம் ஸார் ” என்றார் புரோக்கர்.

சிறுவயதில் கிராமத்துவீட்டில் தம்பி, தங்கைகளுடன் சுவரில் கிறுக்கிய நினைவுகளும், வயதான பிறகும் அந்த வீட்டை விட்டு வர மறுத்து அங்கேயே உயிரை விட்ட தந்தையும் நினைவடுக்குகளில் எட்டிப் பார்க்க மனம் கனத்துப் போனது சங்கர னுக்கு. சட்டென்று வெளியே வந்தார்.

” சீக்கிரமாப் பேசி முடிச்சிடுங்க. இந்த வீட்டை வாங்கி ரிப்பேர் வேலை மட்டும் செஞ்சுட்டு இதை அப்படியே முதியோர் இல்லமா மாத்திரலாம். அப்புறம், அந்தச் சுவத்தில இருக்கற கிறுக்கல்லாம் அப்படியே இருக்கட்டும்” என்று சொல்லி விட்டுக் கிளம்பிய மனிதரை ஆச்சரியத்துடன் பார்த்தார் புரோக்கர்.

One Comment on “வீடு விற்பனைக்கு/புவனா சந்திரசேகரன்”

Comments are closed.