ஜெ.பாஸ்கரன்/கிறுக்கல் நினைவுகள்

:

அந்தப் புது வீட்டுக் கிரகப்பிரவேசம் இன்று! ஊருக்குச் சற்று வெளியே நான்கு அறைகள், பெரிய ஓபன் கிச்சன், ஐம்பது பேர் அமர்ந்து சாப்பிடகூடிய அளவுக்கு ஹால், மொட்டை மாடியில் தோட்டம், வீட்டைச் சுற்றிப் பூஞ்செடிகள் என அமைந்த தனி வீடு.

டி.வி. விளம்பரம் பார்த்து, மழை, வெயில், பனி எதிலும் வண்ணங்கள் மாறிவிடாத சுவர்ப் பூச்சுகள்! கவிழ்த்து வைக்கப்பட்ட குடை போல டிஷ் ஆண்டென்னா!

விருந்தினர்களை வரவேற்று, அமர வைத்து உபசாரம் செய்துகொண்டிருந்தான் சுந்தரம். அவன் புது மனைவி சுகுணாவும் புதுப் பட்டுப்புடவையில் சரசரவென சுற்றி வந்து கொண்டிருந்தாள்.

“இரண்டு கிரவுண்டு இருக்குமா?”

“எவ்வளவு ஆச்சு? மூணு கோடிக்குக் குறையாது”

“உட் வொர்க், எலக்ட்ரிகல் வொர்க் எல்லாமே பத்து பதினைந்து லட்சம் இருக்கும் போல இருக்கே”

“மார்பிள் தரை, மேலே ரத்தினக் கம்பளம் ரொம்ப சூப்பர்”

வந்தவர்களின் பாராட்டுகள் அனைத்தையும் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டனர் சுந்தரம், சுகுனா தம்பதியினர்!

இருந்தாலும் அவ்வளவு அழகிய ஹாலின் ஒரு பக்க சுவற்றில் கிறுக்கலான ஓவியம் ஒன்று எல்லோர் கவனத்தையும் கலைத்தது.

“இது ஏதாவது மாடர்ன் ஆர்ட்டா?” “புகழ்பெற்ற வெளிநாட்டு ஓவியரின் கைவண்ணமா?” என்றெல்லாம் கேள்விகள்.

எதுவாய் இருந்தாலும் அந்த ஹாலுக்குச் சிறிதும் பொருத்தமில்லாத, கிறுக்கலாகத்தான் அந்த ஆர்ட் அனைவருக்கும் தெரிந்தது.

சுகுணாவுக்குக் கூட அந்த ஆர்ட் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் சுந்தரத்திற்குப் பிடித்த எதையும் அவள் மறுப்பதில்லை!

அன்று இரவு, ஸ்பெஷல் ஃபோகஸ் விளக்கொலியில் அந்தக் ‘கிறுக்கல்’ ஓவியத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் சுந்தரம். கையில் பாலுடன் வந்த சுகுணா, சுந்தரத்திடம் ‘இந்த ஆர்ட் பீஸை மாற்றிவிடலாமா?’ எனக் கேட்டாள்.

கலங்கிய கண்களுடன் சுந்தரம் அந்த சுவற்றைப் பார்த்தபடி, “சுகுணா இது மாடர்ன் ஆர்டெல்லாம் இல்லை. வாழ்க்கையில் விரும்பிய எதையும் அடைய முடியாம, மூட்டை தூக்கி, பிளாட்பாரத்துல தூங்கி, உழைச்சு, தன்மானத்தோட வாழ்ந்து மறைந்த ஒரு மகாத்மாவின் ஆசை மனக் கிறுக்கல் அது. வறுமையில் மனைவியையும் இழந்து, தனிமையில் உழன்று, தன் ஒரே மகனைப் படிக்க வைத்து முன்னேற்றிய ஒரு மாமனிதரின் கிறுக்கல் அது. கொட்டும் மழையில் ஓர் இரவு. தன் குடிசையில் ஒரு சாக்குப் பையிலிருந்து கசங்கிய காகிதத்தில் இருந்த இந்தக் கிறுக்கலைத் தன் மகனிடம் காண்பித்து, ‘இது மாதிரி கல் வீடு கட்டு. தரையில நல்ல மொசைக் கல்லு பதி. சுவற்றுல நல்ல குழல் விளக்கு, புத்தகம், பொம்மை எல்லாம் வைக்கிற மாதிரி ஒரு அலமாரி, உட்கார்ந்து சுழலறா மாதிரி ஒரு சேர், கால் வைக்க ஒரு சின்ன மோடா எல்லாம் வாங்கி வை – வீடுன்னா விடுதலையான இடம் – அமைதியா, நிம்மதியா இருக்கணும். எனக்கு அதுக்கான படிப்பு, வசதி, அதிர்ஷ்டம் எதுவுமே இல்லை… படி, உழை, நேர்மையா முன்னேறு. ஒரு வீடு கட்டு” – சொல்லும்போதே அவர் கண்களில் அப்படி ஒரு ஒளி. மகன் அப்பவே வீடு கட்டிட்ட சந்தோஷம் அவர் முகத்துல”

கேட்டுக்கொண்டிருந்த சுகுணா ஒரு கணம் திகைத்தாள் – சுந்தரம் இவ்வளவு உணர்ச்சி வசப் பட்டுப் பார்த்ததில்லை அவள்.

“விதியின் விளையாட்டு அவர் வறுமையில் நோய்வாய்ப்பட்டு இறக்கிறார். மகன் பகலில் உழைப்பு, மாலையில் படிப்பு என வளர்ந்தான். கண் முன் அவன் அப்பாவின் கிறுக்கல், ஒரு உந்துசக்தியாக அவனை வாழ்வில் ஏற்றிவைத்தது. அவனுக்கும் வாழ்வில் பணம், சொந்தங்கள், மனைவி எல்லாம் வந்து சேர்ந்தன. அப்பாவின் கிறுக்கலை ஓர் ஓவியரிடம் காண்பித்து, எதையும் மாற்றாமல் அதைப் பெரிதாக்கித் தரக் கேட்டுக்கொண்டான். தன் வீட்டுச் சுவற்றில் மாட்டி வைக்க ஆசை. ஓவியன் திகைத்தான்.

‘இதை வரைந்த ஓவியர் யார்?’

“ஓவியரெல்லாம் இல்லே, எங்கப்பா கிறுக்கிய அவரது ஆசை வீடு” என்று அந்த தந்தை, மகன் கதையைச் சொன்னான்.

“அப்படியா? அவரையறியாமலே ஓர் ‘ஒற்றை லைன்’ ஓவியமாக வரைந்திருக்கிறார். ஒரே கோட்டை வளைத்து வளைத்து இதை வரைந்திருக்கிறார். அருமையான படைப்பு” என்றவர், வீட்டுச் சுவற்றில் வால் போஸ்டராக வைக்கலாம் என்று சொல்லி, சுவற்றளவுக்குச் செய்து கொடுக்கிறார்”

கண் சிமிட்டாமல் சுகுணா சுந்தரத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இப்போ சொல்லு, இது வெறும் மாடர்ன் ஆர்ட்டா, அல்லது ஏழை இதயத்தில் கீரல்களாக விழுந்த ஆசைக் கோடுகளா?”

“அது சரி, இது உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?”

சுந்தரம் சிரித்தான். “யாரிடமும் சொல்லாத என் ‘இளமையில் வறுமை’க் கதையை இப்போது உன்னிடம்தான் முதன் முறையாகச் சொல்கிறேன். வரைந்தவரின் மகன் தான், இந்த சுந்தரம்”