நினைவு/நா.விச்வநாதன்

உடைந்த கதவைத்
திறக்கலாம்.

காற்றும் லேசான
வெப்பமும் தூசியும்
புழுக்கை வாசனை
தவிர
வேறேதுமில்லையெனச்
சொல்வது சரியல்ல.

என்றோ செத்துப் போன
அம்மாவின்
கருப்பு வெள்ளைப்
படம்கூட
உளுத்துப்போய்
உயிரற்றுக் கிடந்தது
மூலையில்.

அப்பா,
அறிந்தவரை அப்பாவாக
இருந்ததில்லை.
எனினும்
சிங்கத்தின் கர்ஜனை
எல்லாமிழந்தபின்னும்
மெலிதாய் இருப்பதில்லை.

கடைசிவரை
முடங்கிக் கிடந்த
பாட்டியின் முனகல்
இன்னும் கேட்கிறது
வாஞ்சையாய்.

அண்ணனுக்குப் பயந்து
ஒளிந்துகொண்ட
கூடத்துத் தூண்கள்
சிதிலமடைந்திருந்தாலும்
கம்பீரம் தொலைக்காமல்
நேசமும் அறிந்திருந்தது.

கிழக்குச் சுவர்
இரண்டாகப் பிளந்து
கிடந்தது.
அதன்மேல் ஏறித்தான்
அடுத்தவீட்டுக்
கொய்யா திருடியது.
பின்னாளில்
பத்மாவிற்காய்த்
தாண்டிக் குதித்து
காலொடித்துக் கொண்டது.

இன்னொரு நாளில்
முத்தமிட்டு முயங்கிப்
புதுப்பாடம் கற்ற
கிணற்றடி
உருக்குலைந்த பரிதாபம்
சொல்லிமாளாது.

அவிழ்ந்தகூந்தல்,
பூவாசக் கிறக்கம்,
இன்னும் உலவும்
ரம்மியம்.

பேசாமல் திரும்பிவிட
முடிந்ததில்லை.
குரல்களும் வாசமும்
துரத்தித் துன்புறுத்தும்-
கடல்தாண்டியும்.