தெருக்கள்/போர்ஹெஸ்


—-

தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
———
ப்யூனெஸ் ஐரிசின்
தெருக்களில் என் ஆன்மா இருக்கிறது
போக்குவரத்தும் கூட்டங்களும் அதிகமாக இருக்கும்
பேராசைத் தெருக்களில் அல்ல
பழக்கத்தின் வலிமையால்
கண்ணுக்குப் புலப்படாமல் ஒளிந்திருக்கும்
ஒன்றுமே நடக்காத
அண்டை பக்கத்துத் தெருக்களில்
சூரிய அஸ்தமனத்தின் மங்கிய ஒளியியால்
நிலைபேறினை அடைந்துவிட்ட
இன்னும் தூரமாக இருக்கிற
நலமளிக்கும் மரங்கள் இல்லாமல் காலியாக இருக்கும்
தெருக்களில் எங்கே சிறிய வீடுகள்
மரணமற்ற தூரங்களால் திகைப்பில் மூழ்கியபடி
அபூர்வமாகவே துணிகரமுயற்சிகளில் ஈடுபடுகின்றனவோ
எங்கே அவை ஆழமான அகல்பரப்பின் ஆகாயத்திடமும்
சமவெளிகளிலும் தம்மைத் தொலைத்திருக்கின்றனவோ அங்கே.
தனியருக்கு அவை ஒரு உறுதியளிப்பு
ஏனென்றால் ஆயிரக்கணக்கான தனிமையின் ஆத்மாக்கள் அங்கே வசிக்கின்றன, அவை கடவுளின் முன்னாலும் காலத்தின் முன்னாலும்
தனித்துவமாய் நிற்கின்றன
அவை சந்தேகத்திற்கிடமில்லாமல் அருமந்த மதிப்பு வாய்ந்தவை.
மேற்கு நோக்கியும் , வடக்கு, தெற்கு நோக்கியும்
இந்தத் தெருக்கள் விரிகின்றன
அவையே என் தேசமும் கூட:
நான் தடம் பதிக்கும் இந்த சிறிய வரிகளில்
அவற்றின் கொடி பறக்கட்டும்.