பேத்தி/அழகியசிங்கர்

..

அமெரிக்காவிலிருந்து வந்த பேத்தி ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டினாள்.

அவள் ஓவியங்களைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். அவள் வயதில் என்ன இப்படி வரைகிறாள். என் பையனிடம் சொன்னேன். அவள் இஷ்டம் போல அவளுக்கு என்ன தோன்றுகிறதோ அதை வரையட்டும் என்று சொன்னான்.

ஓவியம் வரைவதற்கு நோட்புக் மட்டுமல்ல சுவரிலும் வரைய ஆரம்பித்து விட்டாள்.

பையன், ‘சுவரில் வரையக்கூடாது’ என்று கண்டித்தான் பெண்ணை.

நான் அதைக் கேட்டு, தடுக்காதே வரையட்டும் என்று கூறினேன்.

பேத்தி தான் மட்டும் வரையாமல் எங்கள் அடுக்ககத்தில் உள்ள மற்ற குழந்தைகளை அழைத்துக் கொண்டு அறையை பெரிய ஓவியக் கூடமாக மாற்றி விட்டாள்.

பேத்தியைக் கூப்பிட்டு ; ‘ ‘ ‘நீ செய்வது நியாயமா?’ என்று கேட்டேன்.

என்னை முறைத்தாள்.

“நீ மட்டும் தான் சுவரில் வரைய வேண்டும். மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு வரக் கூடாது, ” என்று கண்டிப்புடன் கூறினேன்.

என் மனைவியோ அவள் விருப்பப்படி செய்து கொள்ளட்டும் என்று பேத்திக்கு சிபாரிசு செய்தாள்.

மருமகளும் தன் பெண் சுவரில் வரைவதை விரும்பவில்லை.
கண்டித்தாள்.

அன்றிலிருந்து பேத்தி மற்றவர்களுடன் சேர்ந்து வரைவதை நிறுத்தி விட்டாள்.

இதோ இந்தியா விட்டு கிளம்பிவிட்டாள் பேத்தி.

நான் அவள் வரைந்த ஓவியங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது என்னுடைய பொழுதுபோக்காக மாறிவிட்டது.