சார் போஸ்ட் ..!/ரமேஷ் கண்ணன்

அரசுப்பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த பிறகு இரண்டு மாதங்கள் கழித்து , முன்னதாக எப்போதோ சிம்மக்கல் நூலகத்தில் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் பார்த்து விண்ணப்பித்ததில் மும்பையிலுள்ள குவாலியர் குரூப் நடத்தும் பள்ளியிலிருந்து ஆசிரியராகப் பணியாற்ற அழைப்புக் கடிதம் வந்திருந்தது.

நான் பட்டயப் பயிற்சி மட்டுமே பெற்றிருந்ததால் வாய்ப்புகள் மிகக் குறைவு.அதில் மிகவும் கஷ்டப்பட்டு இந்த விளம்பரத்தைக் கண்டுபிடித்து விண்ணப்பித்து இருந்தேன்.

மனதில் ஏனோ வருத்தம் இந்த வாய்ப்பு கொஞ்சம் முந்தியிருக்கக் கூடாதாவென.

அழைப்புக் கடிதத்தை ஒரு காதல் கடிதம் போலவே மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருந்தேன்.அதில் பயன்படுத்தியுள்ள சொற்களின் மீதான கிறக்கம் வெவ்வேறு தொனிகளில் சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.அந்தப் பள்ளி வளாகத்தையும் அங்கு எனக்குள்ள சவால்களையும் அதன் மூலமாக நான் பெறப்போகும் அனுபவங்களையும் கற்பனை செய்து கொண்டேன்.
சிலகாலம் தனியார் கம்பெனியில் விற்பனைப் பிரிவில் பணியாற்றிய போது ஒவ்வொரு நாளும் நமக்கு புதிய இலக்குகள் புதிய சவால்கள் புதிய உத்திகள் அதன் மூலமாக நாம் அடையப் போவது வெற்றியோ தோல்வியோ அன்றைய தினம் கிடைக்கும் அனுபவங்கள் படிப்பினைகள் நமது முனையை செதுக்கி ஓர் எழுதுபொருளாக மாற்றும்.அரவம் சட்டையைக் கழற்றிப் போடுவதைப் போல பழையவைகளைக் களைவது அவசியமானதாக இருக்கும்.ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் மூன்று நாள்கள் பேட் செய்து அறுநூறு ஸ்கோரை வைத்துக் கொண்டு சேஃபர் சைட் கேம் விளையாடுவதில் பார்வையாளனுக்கு மட்டுமல்ல ஆட்டக்காரனுக்கே அலுத்து விடும்.

நான் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு வீட்டில் மறுகினேன்.நண்பர்களிடம்,தெரிந்தவர்களிடமும் சொல்லி பார்த்தேன்.யாருமே காதில் வாங்கவில்லை.

லூசா நீ ?! என்று எல்லோரும் கேட்க என்னுடைய’ எல்லை தாண்டும் கனவு’ தகர்ந்தது.

இப்போது நினைத்துப் பார்த்தாலும் வேடிக்கையாக இருக்கிறது.அந்த மும்பை நகரத்து வீதிகளில் ஒரு சில தெருக்களையாவது நான் தெரிந்து வைத்திருப்பேன்.

கேட்வேயில் காற்றில் பறந்து செல்லும் குடையைத் துரத்தி இருப்பேன்

பன்னாட்டு முனையத்தில் வந்திறங்கும் வானூர்தியாய் படபடக்கும் புறாக்களுக்கு இரண்டு பிடி நெல்மணிகளையாவது தூவியிருப்பேன்.

ஏதோவொரு கைவிடப்பட்ட நாளில் அந்த புகழ்பெற்ற கடற்கரையில் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கலாம்.

என்ன செய்வது?!
இந்த வாழ்வு சமையலறை புகுந்து ஒரு குவளை தண்ணீரைக் குடிப்பதாகவே எளியதொரு செவ்வகத்தில் அமைந்து விட்டது.