கி. தாமரைச்செல்வன்/அந்த நாள்

காலையில் நடந்ததை நினைக்க, நினைக்க கோபம் நம நம என அடங்க மறுத்தது.

என்னென்ன பேச்சு பேசி விட்டாள். சிறிய வாய் பேச்சாய் ஆரம்பித்து, வாக்குவாதமாய் வளர்ந்து, உள்ளே கிளம்பிய சூடு அவள் கன்னத்தில் இறங்கியது.

எதிர்பார்க்காத அவள் விதிர் விதிர்த்து நின்று விட்டாள்.

கோபத்தில் என்ன பேசுகின்றோம் என்று உணராமல் ‘ எங்காவது போய் செத்தொழி. ஏன் என் உயிர வாங்குற’ வேகமாய்ச் சொல்லிவிட்டு, கதவை அறைந்து சாத்தி விட்டு வெளியே சென்று விட்டான்.

விஷயம் சின்னதுதான். அவள் அண்ணன் மகள் சடங்காகி விட்டாள். அத்தையாய் செய்முறை செய்ய அவளுக்கு கொள்ளை ஆசை. நம்மூரில் பெரும்பாலான அத்தைகள் அப்படித்தான். அவர்கள் சும்மா இருந்தாலும் சுற்றி இருப்பவர்கள் விடுவதில்லை.

‘ அப்பனோட பொறந்த கப்பலரசி போயி செய்முறை செஞ்சாத்தான சப நெறயும்’. அவள் விஷயத்தில், அவள் ஒற்றை சகோதரி. ஆசைப் படுவதில் தவறில்லை.

ஆனா புருஷன கேக்காம நாமளா முடிவு எடுக்க முடியுமா. கேட்டாள். அவள் ஒன்றைச் சொல்ல, அவன் ஒன்றைச் சொல்ல, முதலில் சொன்னேமே அப்படி முடிந்தது.

ஏதோ சத்தம் கேட்டு நின்றான்.

சுற்றிப் பார்த்தான். ஊரெல்லை. அவ்வளவு தூரம் வந்ததே உணரவில்லை.

அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தான். எதிரே பார்த்தான். இன்னும் சிலர் விவசாயத்தை கை விடவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் பச்சைப் பசேலென வயல் வெளி. இடையில் சொட்டையாய் சில காலியிடங்கள். அங்கங்கே சில நாரைகள் பறந்து பறந்து தங்களது இரையைத் தேடிக் கொண்டிருந்தன. பச்சைப் புடவையில் வெள்ளைப் பூக்களாய் மனதைக் கவர்ந்தன.

தூரத்தில் ஒரு விவசாயி நெற்றியில் கை வைத்து வானத்தை நோக்கி மழை வருமோ எனப் பார்ப்பது தெரிந்தது. அவர் கவலை அவருக்கு.

நேரம் செல்லச்செல்ல உள்ளம் குளிர்ந்தது. சுற்றுப் புறச் சூழலோ, இல்லை கோபம் அடங்கியதால் ஏற்பட்ட மாற்றமோ தெரியவில்லை.

யோசித்துப் பார்த்தான். அவன் மனைவி ஆசைப் பட்டதில் தவறேதுமில்லை. இந்த நேரத்தில் அவனுடைய இயலாமை. கோபமாய்க் கொப்பளித்திருக்கின்றது.

சே சே ! தப்புப் பண்ணிட்டோம். நம்மளயே நம்பியிருக்குற பொண்ண எப்படி கை நீட்ற அளவுக்கு போயிட்டோம். நினைக்க, நினைக்க அவனுக்கே அசிங்கமாயிருந்தது. சூரியன் உச்சியை நோக்கி வேகமாய் போய் கொண்டிருந்தான்.

அவன் நினைவு பின் நோக்கி நழுவியது.

அவர்கள் திருமணமான புதிதில், ஒரு தனிமையான நேரத்தில் அவள் கேட்டாள் ‘ ஏங்க… நான் ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே….’ என இழுத்தாள்.

என்ன கேட்டு விடப் போகின்றாள். வழக்கம் போல் எல்லாம் பெண்களையும் போல ‘ என்க்கு அது வேண்டும், இது வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப் போகின்றாள். நினைக்கும் போதே ஒரு கேலியான புன்னகை கடைவாயின் ஓரத்தில் அரும்பியது.

‘ இல்ல…. நாம மத்தவங்க மாதிரி ஒரு கொழந்தையோட நிப்பாட்டக் கூடாது. கொறஞ்சது ரெண்டு புள்ளையாவதும் பெத்துக்கணும்…ஆணோ, பொண்ணோ….’

அவன் ஆச்சரியமானான். ‘ நாமிருவர் நமக்கெதுக்கு இன்னொருவர்’ என்று சொல்லி விடுவார்கள் என் றிருக்கின்ற நாளில் அவள் வித்தியாசமாய் கேட்கிறாள்.

‘ ஆமாங்க… இப்பல்லாம் வீட்டுக்கு ஒரு புள்ள….இருக்கற சொத்துக்கு ஓன்னு போதும்னு நினைக்கிறாங்களோ….இல்லை புள்ள பெர்றது மறு பொறப்பாச்சே….எதுக்கு மறுபடியும் கஷ்டம்னு நினைக்குறாங்களோ…ஒன்னோட நிறுத்திர்ராங்க….’

என்ன சொல்ல வருகின்றாள். அவள் மேலும் தொடர்ந்தாள்.

‘ ஆசையக் கொட்டி வளக்குறாங்க.. ஆனா புள்ளைங்களுக்கு அடுத்தவங்களோட ஒத்து போறதுன்னாலே என்னன்னு தெரியல.. அப்புறம் அதுகளுக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி ன்னு இருக்கற ஒறவு மட்டுமல்ல…மாமன், அத்தை, பெரியப்பன், சித்தப்பன் அப்படின்னு இப்ப இருக்கிற எந்த ஒறவும் இல்லாமையே போயிராதா…’

‘ இதுகளையெல்லாம் அதுங்க கதையிலதான் படிக்கனும்…ஏறக்கொறைய அனாத மாதிரி ஆயிட மாட்டாங்களா….அதான்…’

அவள் சொல்லச்சொல்ல அவன் அசந்து போனான். எவ்வளவு ஆழமாக யோசித்திருக்கின்றாள். அழகாக யோசித்திருக்கின்றாள்.

அப்படிப்பட்ட அவளை இன்று அவன் கை நீட்டி விட்டான்.

எழுந்து வீட்டை நோக்கி நடந்தான். அவனுடையது அளவான கிராம்ம். மனம் தெளிவடைந்திருந்தது. தெருவில் படுத்திருந்த நாய் ஒன்று அசுவாரசியமாய் தலை தூக்கி பார்த்து விட்டு தலை கவிழ்த்து கண்களை மூடிக் கொண்டது.

தெருவில் அவனைக் கடந்து இருவர் வேகமாக ஏதோ பதட்டமாய் பேசிக் கொண்டு போனார்கள். ‘ பாத்தா கல்யாணம் ஆன பொண்ணு மாதிரி தெரியிது. என்ன துன்பமோ, மொகத்துல லட்சுமி கள தெரியிது. புருஷன் கொடுமயோ, இல்ல மாமியா கொடுமயோ, இப்படி அலபாயுசுல’ இவனுடைய காதில் விழுந்தது.

என்ன பேசிக் கொண்டு போகின்றார்கள். அவனுக்குள் ஒரு பதட்டம். உடல் வேர்த்துக் கொட்டியது. அரை ஓட்டமாய் வீட்டை அடைந்தான்.

வீட்டுக் கதவு அவன் விட்டுச் சென்ற மாதிரியே இருந்தது. கதவை வேகமாய்த் தள்ளி உள்ளே சென்றான். தேடினான். அவன் மனைவி கண்ணில் படவில்லை.

‘அன்னம், அன்னம், மனைவியின் பேரைச் சொல்லி இரைந்தான். பதில் வரவில்லை. புழக்கடை கதவும் உள்ளே பூட்டியிருந்தது. ஒரு நொடி தடுமாறி தரையில் அமர்ந்தான். என்ன செய்வது. ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை.

வீட்டை விட்டு வெளியே ஓடினான். ஊருக்கு வடக்கே இருக்குற பாழுங் கெணத்துப் பக்கமிருந்துதான் அந்த இருவரும் பேசிக் கொண்டு வந்தார்கள். ஓட்டமும், நடையுமாய் அப்பாழுங் கிணற்றை நோக்கி போனான். ஒருவேளை அவர்கள் பேசிக் கொண்டு போனது அவனது அன்னமாக இருக்குமோ.

அந்த எண்ணமே அவனுள் இருந்த பலத்தில் பாதியை பிடுங்கியது. மீதி பலத்தோடு ஓடினான். வழியில் அவன் கண்ணில் பட்ட கோவில்களை மட்டுமல்ல.

வண்டி மோதி விடாமல் இருக்க தெருவை ஒட்டிய சுவற்று மூலையில் நட்டு வைத்திருப்பார்களே கல், நமது மக்கள் கூட அதற்கும் பொட்டு வைத்து ‘சாமி’ ஆக்கி வைத்திருப்பார்களே அதற்கும் ஒரு கும்பிடு போட்டு விட்டு ஓடினான். எந்தக் கல்லில் எந்த் சாமியிருக்குமோ எவருக்குத் தெரியும்.

கிணற்றை நெருங்கி விட்டான். கூட்டமாய் நின்றிருந்தார்கள். அவனுடைய வேகம் மட்டுப் பட்டது. இது வரை இருந்த கொஞ்ச, நஞ்ச தைரியமும் உதிர்ந்து போவதாய் உணர்ந்தான்.

நின்றிருந்தவர்களை ஒதுக்கி விட்டு உள்ளே நுழைந்தான்.

கூட்டத்தின் மத்தியில் ஒரு ஆளை படுக்க வைத்திருந்தார்கள். மூடி வைத்திருந்தார்கள். கால்விரலின் மெட்டி அது ஒரு திருமணமான பெண் என்பதை உறுதிப் படுத்தியது. அவன் உயிர் அவனிடம் இல்லை. கைகள்நடுங்கின. மெதுவாய் துணியை விலக்கி முகத்தைப் பார்த்தான்.

அது……. அவனுடைய அன்னம் இல்லை. அப்பாடா…… அவனுக்கு போன உயிர் திரும்பி வந்தது. அவனும் அய்யோ பாவம் என்று உச்சுக் கொட்டி விட்டு வீடு திரும்பினான்.

அவள் வந்து விட்டால் போதும். இனி மேல் எப்போதும் இது போல் நடக்க மாட்டேன். உள்ளுக்குள் உறுதி செய்தான். ஆனால்…..அவள் வருவாளா…….

அன்னம் என்ன ஆனாள்… வீடு திரும்பும் வழியில் அவள் சென்றிருக்கக் கூடும் என்று அவன் நினைத்த இடத்திலெல்லாம் சென்று, நாசுக்காக, அவள் வந்தாளா என விசாரித்தான். எங்கும் வரவில்லை.

சூரியன் மேல் திசையில் மெதுவாக இருட்டை நோக்கி வெட்கத்தோடு முகம் சிவந்து கீழிறங்கி கொண்டிருந்தான்.

ஊரெல்லாம் தேடி காணக் கிடைக்காமல் அலுத்துப் போய் இவன் வீட்டுக்குள் நுழைந்தான். வீடு இருளடித்துப் போய் கிடந்தது. விளக்கை எரிய விட்டான். தன்னை அறியாமல் கண்கள் மேற் கூரையை நோக்கி மேய விட்டான். நல்ல வேளை. ஏதுமில்லை.

அசந்து போய் உட்கார்ந்தான். மெலிதாய் ஏதோ சத்தம் கேட்டது. உற்றுக் கேட்டான்.

பெண்ணின் கேவல் ஒலி. பாய்ந்து எழுந்தான். சமையல் தடுப்பின் அந்தப் புறம், மூலையில் பசிக் கிறக்கத்தோடு அவனது அன்னம்.

முன்னம் இருந்த அவசரத்தில் அப்போது சரியாகப் பார்க்கவில்லை.

மடை திறந்த வெள்ளமென கண்ணீர் பெருக்கெடுக்க பாய்ந்து சென்று அவளை அள்ளித் தூக்கினான். முகமெல்லாம் முத்தமாரி பொழிந்தான். அசதியாய் விழித்த அன்னத்திற்கு ஏதும் புரியவில்லை. மோகத்தின் உச்சத்தில் கூட அவன் இப்படி முத்தமிட்டதில்லை.

சாளரத்தில் எட்டிப் பார்த்த வட்ட நிலா வெட்கம் தாங்கமல் வெண்மேகத் தலைப்பில் முகத்தை மூடிக் கொண்டது.