குதிரையின் கண்/எம்.டி.முத்துக்குமாரசாமி


வேளச்சேரியில் வசிப்பதிலுள்ள இன்பங்களில் ஒன்று குதிரைகளை காலைநடையின் போது பார்க்கமுடிவது. கிண்டி ரேஸ் கோர்ஸிலிருந்தும், குதிரை ஆஸ்பத்திரிலிருந்தும் வரும் வாட்டசாட்டமான கம்பீரமான குதிரைகளைக் காணலாம். இன்றும் பழுப்பு, அரை வெள்ளை, கறுப்பு குதிரைகளைச் சொக்கிப் போய் பார்த்துக்கொண்டே இருந்ததில் காலை நடையிலிருந்து வீட்டுக்கு வந்து சேர வெகுவும் தாமதமாகிவிட்டது. மனிதனுக்கும் குதிரைகளுக்கும் இடையே ஆழமான ஆத்ம பந்தம் இருப்பதாக நினைக்க ஆரம்பித்திருக்கிறேன். ஒரு கறுப்புக் குதிரை வால் சுழற்றி, தன் வெல்வெட் பளபளக்கும் தோலோடு என்னைக் கடந்து சென்றபோது அதன் அழகில் எனக்கு மூச்சே நின்றுவிடும்போல இருந்தது. ஒரு ரேஸ் குதிரையை நடத்திச் சென்றவரிடம் ஐம்பது ரூபாய் கொடுத்து அந்தக் குதிரையை என் செல் ஃபோனில் பல புகைப்படங்கள் எடுத்தேன். நான் குதிரையைப் பார்த்தேனா, குதிரை என்னைப் பார்த்ததா?