
கடற்கரய்
இந்த நகரம் நவீனமானது –
ஆனால்
இன்னும் பாலங்கள் கீழ்தான்
மக்கள் உறங்குகிறார்கள்
இந்த நகரம் ஒளிமயமானது –
ஆனால்
இன்னும் வெளிச்சம் வராத வீடுகள்
இருக்கவே செய்கின்றன
இந்த நகரம் வசதிகள் நிரம்பியது –
ஆனால்
கழிப்பறை இல்லாமல் மக்கள்
தவிக்கவே செய்கிறார்கள்
இந்த நகரம் பாதுகாப்பானது-
ஆனால்
நடைப்பாதையில் படுப்பவனை
இரவுநேர காவலர்கள் ஏறி மிதிக்கவே செய்கிறார்கள்
இந்த நகரம்
எல்லாம் எல்லாமும்தான்
பேரிடர் காலங்களில்
பெருமழைப் பொழுதுகளில்
உருவாகும் பெரும் பதற்றம்
பேசுப் பொருளாவதைப் போல்
ஒருபோதும் பேசியதில்லை
எங்கள் குரல்களில்
இந்த உலகம்
நாங்களும் இந்த ஊரில்தான்
இன்னமும் வாழ்கிறோம்
இது எவ்வளவு பெரிய செய்தி

அற்புதமான கவிதை.
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே.
வசந்ததீபன்