ப.மதியழகன் இரு கவிதைகள்

விருட்சம் கவியரங்கில் நான் வாசித்த முதல் கவிதை

  1. விஷச்சுழல்

சபிக்கப்பட்டவன் கர்ணன்
வாழ்வும் அவனை
ஏமாற்றியது
மரணமும் அவனை
ஏமாற்றியது
பிறந்தது சத்ரியனாக
வாழ்ந்தது சூதனாக
சனாதன தர்மம்
கர்ணனோடு முடிந்திருக்கலாம்
பல்லக்கில் அமர்ந்து வருபவர்களுக்கும்
சுமந்து வருபவர்களுக்கும்
என்ன வித்தியாசம் இருக்கிறது
நந்தனுக்காக நந்தி
வழிவிட்ட கதை வேறு
ராஜ்ஜியமில்லாத கர்ணனுக்கு
துரியோதனன் மகுடம் சூட்டி
அழகு பார்த்தான்
ஆனாலும் சூதன் என்ற
காயம் ஆறாத ரணமாக
அவன் இதயத்தைக்
குடைந்து கொண்டிருந்தது
அர்ச்சுனனின் அம்பு
கர்ணனின் நெஞ்சைத் துளைத்தபோது
திரெளபதியின் ஏளனச் சிரிப்பொலி
செவியில் எதிரொலித்தது
சூரியன் மெளனித்தான்
புத்ர சோகம் அவனை
பீடித்துக் கொண்டது
பாண்டவர்களின் வாழ்வு
கர்ணன் இட்ட பிச்சையென்று
குந்திக்கும் கண்ணனுக்கும் மட்டுமே
தெரியும்
பாரதம் என்பது
ஒரு துரோகத்தின் வரலாறு!


2. ஆசை

பருவந்தோறும்
ஆசைகள் மாறுபடும்
பால்யத்தில் கேட்டு அடம்பிடிப்போம்
டெடிபேர், மயிற்பீலி
நடக்கப்பழகியவுடன்
சைக்கிள், ராக்கெட் வெடி
மீசை அரும்பத் தொடங்கியவுடன்
ஜீன்ஸ், டி.வி, பிரியாணி
தோளுக்கு மேலே வளர்ந்தவுடன்
சிகரெட், பைக், யுவதி
சற்றே பொறுப்பு கூடியவுடன்
நல்லவேலை, கல்யாணம், குழந்தை
எனது ஆசைக்கோட்டைகளின் உள்ளே
நிறைய ஓட்டைகள்
நரை விழுந்து நிராசைகளின் பாரத்தால்
முதுகில் கூன் விழுந்துபடி நான்
இழந்தபின்தான் வாழ்வின்
மகத்துவம் புரிகிறது
வாழ்க்கையோடு சமரசம் செய்து
கொள்ளாதவர்கள்
நிச்சயமாக பால்யத்தின்
கதவுகளைத் தட்டுவார்கள்!

ப.மதியழகன்