
அழகியசிங்கரின் இன்றைய ‘சொல் புதிது ‘ நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் இரண்டு
- குழந்தைக் குற்றம்
உருட்டும் பீடிக்குள்
சுருண்டு கிடப்பது எது
கொதிக்கும் தீக்குள்
சூடாய்த் தவிப்பது எது
வெள்ளரிப் பிஞ்சில்
வெம்பிக் கிடப்பது எது
சைக்கிள் பஞ்சரில்
பசையாய் ஒட்டுவது எது
ஹவுஸ்புல் டிக்கெட்
வியர்வை அழுத்தம் எது
கட்டிடம் உயர்த்தும்
கலவைக் குழம்பாய் எது
துறைமுக மூட்டை
முதுகுச் சுமையாய் எது
ரிக் ஷா மிதியில்
தேயும் செயினாய் எது
பள்ளிக் கூடம்
கழுவும் கண்ணீர் எது
கைகால் முளைத்த
குழந்தைக் குற்றம் அது
2. போராட்டம்
சோப்பு வாங்கக் கடைக்குப் போனால்
இறங்கியிருக்கும் கதவு
வியாபாரிகள் போராட்டம்
போட்ட பணத்தை எடுக்கப் போனால்
பூட்டியிருக்கும் பாங்கு
வங்கியாளர் போராட்டம்
பஸ்ஸைப் பிடிக்க ஓடிப் போனால்
வரவேயில்லை வண்டி
பஸ் ஊழியர் போராட்டம்
ஆட்டோ பிடிக்கத் தேடிப் பார்த்தால்
ஆளைக் காணோம் எங்கும்
ஆட்டோக்காரர் போராட்டம்
நண்பன் ஸ்கூட்டர் ஆக்சிடெண்ட் ஆகி
ஆஸ்பத்திரி போனால் அடைப்பு
டாக்டர்களின் போராட்டம்
இந்தக் குறைக்குக் கேஸைப் போட
கோர்ட்டு போனால் கூச்சல்
வக்கீல்களின் போராட்டம்
போராட்டத்தில் பழகிப் பழகி
வயசும் போன பின்னே
மூச்சுக் காற்றின் போராடட்டம்
