சோ.தர்மன்/இன்று அக்டோபர் பத்தாம் தேதி “உலக மன நல நாள்”

இன்று அக்டோபர் பத்தாம் தேதி “உலக மன நல நாள்”இன்றைய மருத்துவம் சொல்கிறது.இன்று மனிதர்களுக்கு வரக் கூடிய நோய்களுக்கான காரணம் உணவை விடவும் உடலை விடவும் மனசே காரணமாக இருக்கிறது.
அந்த அளவுக்கு வயது வித்தியாசமின்றி நம்முடைய மனசு பாதிக்கப்படுகிறது.நான் வெளியூர்களுக்கு பிரயாணம் செய்யும் போது ஏராளமான மன நோயாளிகள் சாலைகளில் சுற்றித் திரிவதையும் அவர்களில் பல பேர் வேற்று மொழி பேசுகின்ற வெளி மாநிலங்களில் உள்ளவர்கள் என்பதையும் பார்த்த போது மிகவும் வருத்தப்பட்டேன்.
உடனே சில நண்பர்களுடன் இணைந்து எங்கள் ஊரில் சுற்றித் திரியும் மனநலம் குன்றியவர்களை கணக்கெடுத்து அவர்கள் அணிந்திருக்கும் அட்டுப் பிடித்த ஆடைகளை களைந்து விட்டு புதிய ஆடைகளை அணிவித்தோம்.சிக்குப் பிடித்து கட்டி சேர்ந்து பேன் பிடித்து சடைசடையாகத் தொங்கும் முடிகளை அகற்றினோம்.சில பெண் தோழிகளும் உதவினார்கள்.
ஒவ்வொரு மன நோயாளிக்கும் நாங்களாகவே ஒரு பெயர் வைத்துக் கொண்டோம் .அப்போது தான் அவர்களைப் பற்றி நாங்கள் ஒருவருக்கொருவர் விசாரித்து தெரிந்து கொள்ள முடிந்தது.
அப்புறம் ஒவ்வொரு கடைக்காரரிடமும் சொல்லி ஒவ்வொரு கடைக்கு ஒரு மனநோயாளியை கவனித்துக் கொள்ளும் படியும் அவர்களுக்கு சிறுசிறு வேலைகள் கொடுக்கும் படியும் டீ,காபி,உணவு,சிகரெட்,பீடி தரும்படியும் கேட்டுக் கொண்டோம்.இது எங்களுக்கு நல்ல பலனை தந்தது.சிகரெட் பீடி கொடுக்கா விட்டால் கட்டைப் பீடி பொறுக்கி குடிப்பதை நிறுத்தவே அளவோடு அந்த ஏற்பாடு.
நாலைந்து வருடங்களாக இதை நாங்கள் எவ்வித விளம்பரமும் இல்லாமல் செய்து வந்தோம்.இதை எப்படியோ கண்டு பிடித்து குமுதம் பத்திரிக்கையில் என் புகைப்படத்துடன் கிசுகிசு பகுதியில் பிரசுரித்து விட்டார்கள்.உடனே நான் குமுதம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு என் கண்டணத்தை தெரிவித்தேன்.இல்லாத விஷயத்தை நாங்கள் எழுத வில்லை.உண்மையை எழுதியிருக்கிறோம் என்று அவர்கள் தரப்பில் பதில் சொன்னார்கள்.
குமுதத்தில் செய்தி வந்த பின்னால் ஏராளமான நண்பர்கள் பிரபலங்கள்‌ என்னை தொடர்பு கொண்டு பாராட்டியதோடு என்ன உதவியும் செய்யத் தயார் என்றார்கள்.அவர்களில் சில முக்கியப் பிரபலங்கள் உண்டு.
தற்போது இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக இருக்கக் கூடிய நடிகர் அரசியல்வாதி வாகை சந்திரசேகர் அவர்களின் துணைவியார் திருமதி.ஜெகதீஷ்வரி அவர்கள் என்னிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டார்கள்.அந்த சமயம் வாகை சந்திரசேகர் அவர்கள் வேளச்சேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
மனநலம் பாதிக்கப்பட்ட ஐம்பது பேரை வைத்து பராமரிக்கிற அளவுக்கு உங்களுக்கு உதவிகள் செய்கிறேன்.கலைஞரிடம் சொல்லி கட்டிடம் ஏற்பாடு செய்து தருகிறேன்.உணவு ,மருத்துவம் ,உடைகள் என அனைத்து உதவிகளும் செய்ய ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார்கள்.நான் சொன்னேன்.
என்னால் முழு நேரமும் அவர்களுக்காக வேலை செய்ய முடியாது.ஏதோ எங்களால் முடிந்த அளவு சில நல்ல நண்பர்களின் உதவியால் இம்மி கூட விளம்பரம் இல்லாமல் செய்து கொண்டு வருகிறோம்.உங்கள் உதவிக்கு நன்றிம்மா என்று சொன்னேன்.பண உதவி செய்யட்டுமா அதையாவது ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள்.இதுவரை யாரிடமும் பண உதவி வாங்கவில்லை தேவைப்பட்டால் வாங்கிக் கொள்கிறோம் என்று சொன்னேன்.இதுவரை யாரிடமும் ஒரு பைசா வாங்கவில்லை.
சில மனநோயாளிகளின் முகவரியை கண்டு பிடித்து காவல்துறையின் மூலம் ஒப்படைத்திருக்கிறோம்.வலுக்கட்டாயமாக இழுத்துப் போய் பெரு விரல் ரேகையை பதியவைத்து ஆதார் மூலம் முகவரியை கண்டு பிடிக்கிறோம்.அரசு ஊழியர்களும் கடைக்காரர்களும் காவல்துறையும் டாக்டர்களும் எங்களுக்கு பேருதவியாக இருக்கிறார்கள்.
குறிப்பு:எங்கேயாவது மனநலம் குன்றியவர்களைப் பார்த்தால் அவர்கள் மீது பரிவு காட்டுங்கள்.ஏனெனில் அவர்கள் குழந்தைகள்.தங்கக் கட்டிகளைக் கண்டாலும் அணுகுண்டைக் கண்டாலும் எந்தச் சலனமும் அடையாத தெய்வீகர்கள்.தினமும் காலையில் என் வரவுக்காக டீ கடையில் காத்திருக்கும் கருப்பசாமி,அய்யம்மாள் இதோ ஒங்க ஆளு வந்துட்டார் என்று யாரேனும் சொல்லும் போது என் முகம் பார்த்து அவர்கள் சிரிக்கும் ஒரு புன்சிரிப்பு எனக்கு பேரானந்தமாக விடிகிறது ஒவ்வொரு நாளும்.
மனநலம் குன்றி சுற்றித் திரியும் அனைவருமே நம்முடைய குழந்தைகள்.