சோ.தர்மன் பதிவு

இன்று எட்டயபுரம் செல்வதற்காக டூ வீலரில் பயணித்தேன்.வழியில்ஒரு திரையரங்கம் இருக்கிறது.ஏதோ ஒரு புது படம் ரிலீசாம்.போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது.ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அலை மோதுகிறார்கள்.நான் மாற்றுப் பாதையில் பயணித்தேன்.
சுய அறிவோ,சுய சிந்தனையோ சுய மரியாதையோ இல்லாதவர்கள் யாருக்காவது அடிமைப்பட்டுத்தான் ஆக வேண்டும்.மதுவும் அடக்கம்.சிந்தித்துக் கொண்டே வருத்தத்துடன் வண்டியோட்டினேன்.
கேரளா பாரம்பரியத்திலும் பழமையிலும் ஐதீகத்திலும் பற்றுள்ள மக்கள் வாழும் மாநிலம்.ஆனால் அரசியல் விழிப்புணர்வும் கலைரசனையும் புத்தக விற்பனையிலும் தெளிவான மக்கள் வாழும் மாநிலமாக திகழ்கிறது.நடிக நடிகைகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இல்லை.கால்பந்து,ஆக்கி,கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களைக் கூட நிஜமான வீரதீரச்சாதனைகளுக்காக பார்க்கலாம்.சினிமா என்பது வெறும் பிம்பம்‌ என்பதும் டூப்ளிகேட் என்பதும் ஒரு மாயை என்பதும் ஏன் புரியவில்லை தமிழக இளைஞர்களுக்கு.
பகுத்தறிவுள்ள சுயமரியாதை உள்ள மக்கள் வாழும் மாநிலம் என்று பேசிக்கொள்வதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா.சிறிது நேரம் நின்ற போது இளைஞர்களிடம்‌ இலேசாக பேச்சுக் கொடுத்தேன்.டிக்கெட் விலை அவர்கள் சொன்ன தொகையை கேட்டு இன்னும் எனக்கு தலை சுற்றுகிறது.பொருளாதார வளர்ச்சி ஏற்படும் போது கூடவே அகவளர்ச்சியும் வளர வேண்டும்.அது இங்கே போதிய அளவு வளரவில்லை.இந்தக் கூட்டம்தான் அரசியலையும் தீர்மானிக்கிறது என்பது வேதனையிலும் வேதனை.அகத்தை விசாலமாக்கும் இலக்கியம் பக்கம் இவர்கள் திரும்பினால் ஒழிய விடிவு காலம் இல்லை.