டிர்ர்….. டிர்ர்… டிர்ர்!!/டாக்டர் பா.சேஷாசலம்


செ ன்ற புதன்கிழமை காலை பதினொரு மணி.
என்னுடைய கிளினிக்கில் ஒரு நோயாளி, “சார், ஒரு வாரமாக அடி வயிற்றில் வலி பின்னி எடுக்குது சார்? என்னன்னு பாருங்க? “ என்றவரைப் படுக்கவைத்துக் காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, இடது மணிக்கட்டில் கட்டி இருந்த மின்னணு கடிகாரம் , வித்தியாசமாக டிர்ர்… டிர்ர் என்று அடித்தது.

சிறுநீரகக்குழாயில் கல் இருக்கலாம் என்று அவரிடம் சொல்லி மேற்கொண்டு செய்ய வேண்டியதை முடித்து விட்டு , கடிகாரத்தைக் கிளிக்கினேன்.
கண்முன் திரை விரிந்தது.

இதயம் படத்தைத் தொட்டவுடன் , இதயத்துடிப்பு 68 என்றும் , சீரானதாகவும் காட்டியதால் சற்று நிம்மதி அடைந்து அடுத்த நோயரை அழைத்தேன்.

மதியம் உணவு அருந்தி விட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டு, மாலை ஆவி பறக்கும், சர்க்கரை போடாத வரக்காப்பி அருந்தி விட்டு மாலைப் பணிக்குப் புறப்பட்டேன்.

நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஒருவர் முழங்கையிலிருந்து இரத்தம் சொட்டச் சொட்ட உள்ளே ஓட வந்தார்:

“சார், நாய் குறுக்கே வந்து, பைக்கிலிருந்து விழுந்து விட்டேன்… பாருங்க, சார்?” என்றவரை உள்ளே அழைத்துச்சென்று, ரத்தப் போக்கை நிறுத்தி, நான்கு கிளிப் தையல் போட ஆரம்பித்தேன்.

அப்போது மீண்டும் மின்னணுக் கடிகாரத்தில் டிர்ர்… டிர்ர் சத்தம்!

3 ஆண்டுகளாகக் கேட்காத, உணராத சத்தம். ( ஐ போன் 12-மினி)

என் இதயம் தொல்லை பண்ணுகிறதோ என்று ஒரு பயம் நெஞ்சுக்குள் எட்டிப்பார்த்தது.

பயம் போக, தையல் போட்டவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

“நாய்க்கு அடி எதுவும் பட வில்லையாங்க…” என்று கேட்டதை அவர் முறைத்ததைப் பார்த்து, “ நீங்க, பிரேக் அடிக்கலையா? “ என்றேன்.

“சார், அது எங்கிருந்தோ ஓடி வந்தது சார், கவனிக்கல? “ என்றார்.

“நாய் உங்களைக் கடிக்கலியே?” என்றதற்கு, “நல்லவேளை, நேற்று பைரவருக்கு விளக்குப்போட்டேன், அதனாலே விட்டுடிச்சி!” என்றார்.

” , என்று அவரை அனுப்பி விட்டு உள்ளே சென்று கடிகாரத்தில், இம்முறை ஈசிஜி எடுத்துப்பார்த்தேன். சரியாக இருந்தது. இரத்த அழுத்தமும் சரியாக இருந்தது.
என்னவாக இருக்கும்?

பெரிய மகள் இதையெல்லாம் நம்பாதீங்கப்பா? என்று முன்பொரு முறை பார்த்தபோது சொன்னது நினைவுக்கு வந்தது.
என் சர்க்கரை அளவும் சரியாக இருந்தது.
சைலண்ட் அட்டாக் ஆக இருந்தால்?

காலையில் நண்பரைப் பார்க்கலாம் ( இதய நோய் மருத்துவர்) என்று அப்போதைக்கு மறந்து வீடு திரும்பினேன்.

மனைவியிடம் சொல்லலாமா?
ஊஹும்……
வண்டியில் தூக்கிப்போட்டு நேராகக் காவேரி ஹார்ட்சிடிக்குக் கொண்டு போய் விடுவாள் என்று பயந்து சொல்லவில்லை.

கனவில், வெண்மை உடையில் தேவதைகளும், தேவன்களும் வந்து சென்றார்கள்.

மறுநாள் காலை எழுந்தவுடன் படிப்பு என்பது போல செல்போனைக் கிளிக்கினேன்.
முதலில் மெஸேஜ் பாக்ஸைப் பார்ப்பது வழக்கம். அதில் இப்படியொரு செய்தி:

“இந்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனம், வைப்ரேஷன் மூலம் அவசர காலத்தில் செய்தி அனுப்புவதை பரிசோதிக்க இப்படி அதிர்வு அலைகள் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறோம். அது ஒரு பரிசோதனையின் பொருட்டு தான், நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்!”

Advisory: DoT, Govt of India would conduct Cell Broadcast testing with NDMA. You may receive test alerts on mobile with sound/vibration. These alerts are part of testing process, do not indicate an actual emergency and do not require any action at your end.

மனமும் உடம்பும் துள்ளிக்குதித்தது.

புலனக் குழு நண்பர் ஒருவர் இந்தச் செய்தி பற்றிக் கேட்டிருந்ததற்கு என் பதில்:
“ ஆம் அய்யா! கையில் கட்டிய மின்னணு கடிகாரம், பணியில் இருக்கும்போது, டிர் டிர் என்று ஓசையுடன் அதிர்ந்த போது என்னுடைய இதயம்தான் தொல்லை பண்ணுகிறதோ என்று பயந்து கொண்டிருந்தேன். இந்தக் குறுஞ்செய்தி , தேனாய் இனித்தது!

3 Comments on “டிர்ர்….. டிர்ர்… டிர்ர்!!/டாக்டர் பா.சேஷாசலம்”

  1. எங்கள் லால்குடி மருத்துவர் அரசாங்கம் கொடுக்கும் முன் எச்சரிக்கை காட்டிலும் உங்கள் பதிவு மிகவும் அருமை சார்

Comments are closed.