அழகியசிங்கர்/இனிமேல் அன்னம்மாவிற்கு காப்பி கிடையாது

அன்னம்மா கிழவி காப்பியைக் குடித்துக்கொண்டே என்னைப் பார்த்து சிரித்தாள்.

எனக்குக் கோபம் வந்தது.

“ஏன் சிரிக்கிறே?”
என்று கேட்டேன்.

“ஒண்ணுமில்லை ஐயா,” என்று மழுப்பினாள் அன்னம்மா.

பக்கத்தில் வந்து நின்ற
என் மனைவி, அவள் சிரிக்கிறதுக்குக் காரணமிருக்கு என்று கூறினாள்.

“என்ன காரணம்?” என்று கோபமாகக் கேட்டேன்.

“அன்னம்மா சிரிக்கிறதுக்குக் காரணம். நீங்க கட்டி இருக்கிற வேஷ்டி தான்”

நான் எப்போதும் வேஷ்டியை ஒழுங்கா கட்டிக்கொள்ளத் தெரியாத ஆள்.

நான் வேஷ்டியைக் கட்டி இருக்கிற அழகைப் பார்த்துதான் அன்னம்மா என்னைப் பார்த்து சிரித்திருக்கிறாள்.

வேஷ்டியை எப்படிக் கட்டிக்கொள்ள வேண்டுமென்று இந்த வயதிலும் எனக்கு அனுபவம் இல்லை. யாராவது பார்த்தால் வேஷ்டி முழங்கால் கிட்ட இருக்கும்.

வேஷ்டியை உடம்பில் சுற்றி இருப்பேன். ஆனால் சரியாகக் கட்டியிருக்க மாட்டேன். என்னைப் பார்க்கும் போதெல்லாம் அன்னம்மாள் இதைப் பார்த்துதான் சிரித்துக் கொண்டே இருப்பாள்.

பொதுவாக என்னுடன் பேசும்போது அவளுக்குச் சிரிப்பு தானாகவே வந்துவிடும்.

ஒருநாள் மனைவியைக் கூப்பிட்டு.
” இனிமேல் அன்னம்மாவிற்கு நம்ம வீட்டிலிருந்து காபி கிடையாது”
என்றேன்.

“ஏன் அப்படி?” என்று கேட்டாள் மனைவி.

“என்னைப் பார்த்து வேண்டுமென்றே சிரிக்கிறாள். அதுவும் குறிப்பாக நான் வேஷ்டிக் கட்டிக் கொண்டு வருவதைப் பார்த்தால்..”

திரும்பவும் மனைவியைப் பார்த்து,
“தினமும் காப்பிக் கொடுக்காமலிருப்பதுதான் அவளுக்குத் தண்டனை” என்றேன் கோபமாக.

இதைக் கேட்டுக் கொண்டு வந்த அன்னம்மா,
“இனிமே உங்களப் பாத்து நான் சிரிக்க மாட்டேன். காப்பியை நிறுத்தாதீங்க” என்றாள் பரிதாபமாக.

ஆனால் அடுத்த நாளிலிருந்து என் கண்ணில் படாமல் ஓடி ஒளிந்து கொண்டாள்.

அவளுக்குக் காபி போய்விடும் என்ற பயம்.

“கவலைப்படாதே. இந்தப் பயம் வேண்டாம். எப்போதும் போல இரு.. என்னைப் பார்த்துப் பயந்து ஒளிஞ்சிராதே,” என்றேன்.

அதன் பின் அன்னம்மா என்னைப் பார்த்து சிரிப்பதில்லை. உண்மையில் பார்க்காமல் தவிர்ப்பதே அதிகம்.

இப்போதெல்லாம் நானும் அவள் முன்னால் வேஷ்டியுடன் நிற்பதில்லை.

எப்போதும்
ஃ பாண்ட்டும், அரைப் ஃபாண்டும் போட்டபடி இருப்பேன்.

One Comment on “அழகியசிங்கர்/இனிமேல் அன்னம்மாவிற்கு காப்பி கிடையாது”

Comments are closed.