காபி பைத்த்தியம்/பி. ஆர்.கிரிஜா

பொன்னம்மாளுக்கு காபி என்றால் கொள்ளை பிரியம். அது பொடி காபியாக இருக்கட்டும், ஃபில்டர் காபியாக இருக்கட்டும் அவள் முகம் உடனே மலர்ந்து விடும். காலையில் முதல் வேளை காபி அவளுக்கு கோடி வீட்டு கமலா மாமி வீட்டில் கிடைத்து விடும். அதற்காகவே அவள் தினமும் ஆறு மணிக்கே அந்த மாமி வீட்டிற்குப் போய் விடுவாள். எல்லா வேலையும் முடித்து விட்டு, எட்டு
மணியோடு வீடு திரும்பினால், மருமகள் அருமையாக கருப்பட்டி காபி போட்டுக் கொடுப்பாள். அதை ரசித்து, ருசித்து
கன்னக் குழி தெரிய அவள் காபி குடிக்கும் அழகை பக்கத்து வீட்டு தனம் பார்த்து கேலி செய்வாள்.
ஆஸ்த்மா அதிகமாகிப் போனதால் வேலைக்குப் போக வேண்டாம் என மகன் எவ்வளவோ தடுத்தும் பொன்னம்மா கிளம்பி விடுவாள். அதுவும் அந்த கமலா மாமி வீட்டு காபியை நினைக்கும் போதே அவள் வாயில் எச்சில் ஊறும். அன்றும் வழக்கம் போல் வேலைக்குப் போய் விட்டு வந்து
படுத்தவள்தான். ஜுரம் அதிகமாகி முனக ஆரம்பித்தாள். மருமகள் அவளை டாக்டரிடம் கூட்டிப் போவதற்காக ஆட்டோ கூட்டி வரச் சென்றாள். திரும்பி வந்து பார்த்தால், பொன்னம்மா கையில் காபிக் கோப்பையுடன் உட்கார்ந்த நிலையிலேயே இறந்து
போயிருந்தாள். ஆனால் அந்தக் கன்னக் குழி சிரிப்பு மட்டும் அவளைப் பார்த்து திருப்தியுடன் சிரித்தது.


22/10/2023

One Comment on “காபி பைத்த்தியம்/பி. ஆர்.கிரிஜா”

Comments are closed.