போர்ஹெஸ்/வடக்கத்திய புறநகர்ப்பகுதி



தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி


இந்த அறிவிப்பு ஒரு ரகசியத்தைப் பற்றியது
அந்த ரகசியத்தை அதன் பயனற்றதன்மையும் அக்கறையின்மையும்
தெரிந்துகொள்வதற்கான வழியில்லாததாக மாற்றிவிட்டன.
புதிரோ உறுதிமொழியோ இல்லாத ஒரு ரகசியம்
அக்கறையின்மையின் காரணமாக மட்டுமே ஒரு ரகசியமாக இருப்பது:
மனிதர்களின், மாலைநேரங்களின் பழக்கங்கள் அதை உடைமையாய்ப் பெற்றிருக்கின்றன.
தன்விழிப்பற்ற நிலை அதனைப் பதனம் செய்து வைத்திருக்கிறது,
அந்த நிலை அதன் ஆக மட்டமான புதிர் வடிவம்.

ஒருகாலத்தில் புறநகர்ப்பகுதி நட்புக்கான அர்த்தமாயிருந்தது,
அருவருப்புகளுக்கும் பிரியங்களுக்குமான ஒரு களன்,
காதலின் பிற விளையாட்டுப்பொருட்களைப் போலவே;
அதை மீறி நம்பிக்கை மட்டுமே எஞ்சிப் பிழைத்திருக்கிறது
சில தூரத்து நிகழ்வுகளில் அது இறந்து போகும்:
ஐந்து மூலைகளை நினைவுகூரும் அந்த பிரசித்திபெற்ற பாடலில்
வளரும் சுவர்களுக்கு பின்னே இருக்கும் நிலையான ரோஜாவைப் போன்ற உள்முற்றத்தில்
வடக்கின் மலர் என்று இன்னும் சொல்லும் மங்கிய சுவரொட்டியில்,
கிடாரும் சீட்டுகளும் வைத்திருக்கும் அருந்தகத்தின் இளைஞர்களிடம்,
குருடனின் நின்றுவிட்ட நினைவில்.

இவ்வாறாகப் பிரிந்து பல்வேறு திசைகளில் கிடக்கும் காதலே எங்கள் ஊக்கமிழந்த ரகசியம்.

கண்ணுக்குப் புலனாகாத ஏதோ ஒன்று இவ்வுலகின் இறந்துகொண்டிருக்கிறது,
இசையை விட அகலமாக இல்லாத ஒரு காதல்,
புறநகர்ப் பகுதி விலகிச் சென்று கொண்டிருக்கிறது,
சிறிய பளிங்கு பால்கனிகள் எங்களை ஆகாயத்தைப் பார்க்க வைப்பதில்லை.
எங்கள் பிரியம் அலட்சியமாய் ஊக்கமிழக்கச் செய்யப்படுகிறது,
ஐந்து மூலைகளின் காற்றின் நட்சத்திரம் இன்னொன்று.

ஆனால் சப்தமில்லாமல், எப்போதுமே
வெளிப்படுத்தப்படாத விஷயங்களில்
பொருட்கள் எப்போதுமே தொலைந்து போனவையாய் இருப்பதாக,
நிழலின் ஆகாயத்தைக் கீற்றாகக் காணும் ரப்பர் தோட்டத்தில்,
முதலும் கடைசியுமான சூரியனைக் கைப்பற்றும் அலம்பும் தொட்டியில்,
அந்த நட்பான, செய்து தீரவேண்டியதாக்குகிற உண்மை விடாது தொடர்கிறது,
எனது சொல் அறிவிக்கும் இருண்ட விசுவாசம்:
புறநகர்.