ஜெ.பாஸ்கரன்/மேற்கில் வளரும் நமது பாரம்பரியமும், கலாச்சாரமும்!

முகநூலில் அநேகமாக எல்லோரும் நவராத்திரி பற்றி எழுதிவிட்டார்கள்! ஸப்தரிஷி சார் ‘நவராத்திரி’ படம் பற்றிய ரிவ்யூ கூட போஸ்ட் பண்ணியிருந்தார். நினைவு தெரிந்த நாளிலிருந்து வருடாவருடம் கொலு வைப்பதைப் பார்த்திருக்கிறேன் – ஐம்பது அறுபது வருடங்களில் நவராத்திரிக் கொண்டாட்டங்கள் வெகுவாக மாறிவிட்டன.

இந்த வருடம் நவராத்திரி, கனடாவில் ஐந்து நாட்களும், அமெரிக்காவில் ஐந்து நாட்களூம் என ஆனது தற்செயல்தான். கனடாவில் சின்னப் பெண் வீட்டில் ஐந்து படிகளில் கொலு – இரண்டு பக்கமும் அலங்காரத் தோரணங்கள், சீரியல் விளக்குகள், கொலுவுக்கு முன்னால் கோலம், ஆரத்தித் தட்டு, குத்துவிளக்கு என பாரம்பரிய கொலு. தினமும் சுண்டல், நெய்வேத்தியம், மாலையில் வரும் விஸிட்டர்கள், சில பாட்டுகள் என ஐந்து நாட்களும் சுறுசுறுப்பாகச் சென்றன. வரும் நண்பர்களுக்கு, சுண்டலுடன், நல்ல டிபன் அல்லது சாப்பாடும் போடும் வழக்கம் இங்குள்ளது! வார இறுதி நாட்களில் மட்டும் அழைக்கும் பழக்கமும் உள்ளது! மஞ்சள் குங்குமம் சுண்டலுடன் ஒரு சிறிய பரிசும் – நவராத்திரி கிஃப்ட் – குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் உண்டு.

பெரிய பெண்ணின் வீட்டில் கடைசி ஐந்து நாட்கள் -ஐந்து படிக் கொலு, சரஸ்வதி பூஜை, விஜயதசமி எனக் கொண்டாடினோம். இங்கும் பார்த்த வரையில் கொலு சிறப்பாகவே கொண்டாடப்பட்டது. நாங்கள் இருக்கும் இடத்தில் தென்னிந்தியர்கள் – தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் பேசும் மக்கள் – அதிகம் என்பதால், கொலுவுக்கான ஸ்பெஷல் தோரணங்கள், பொம்மைகள் (விலை டாலரில் கூட அதிகம்தான்), உணவு வகைகள், இனிப்பு வகைகள் என இங்குள்ள, ‘நம்ம ஊர்’க் கடைகளில் கிடைக்கின்றன. கோயில்களிலும் கொலுவும் சுண்டலும் உண்டு!

ஊரிலிருந்து கொண்டு வந்த பொம்மைகள் – பாட்டி காலத்திலிருந்து வீட்டில் இருந்தவை – கொலுவில் பார்க்க முடிந்தது. ராமர் செட், தசாவதாரம், அஷ்டலட்சுமி, பிள்ளையார், லட்சுமி, சரஸ்வதி, தந்தைக்கு உபதேசம் செய்யும் சுவாமிமலை செட், கல்யாண செட், கிராம செட் என எல்லா வகை பொம்மைகளையும் பார்க்க முடிந்தது. வித்தியாசமாக, கடோத்கஜன் சாப்பிடும் பொம்மை, அகலிகை சாபவிமோசனம், அர்த்தநாரீஸ்வரர், வாசுதேவர் தலையில் கூடையில் கிருஷ்ணனுடன், 27 நட்சத்திர முனிவர்கள், பாம்பாட்டி போன்ற பொம்மைகளும் இருந்தன. பஞ்ச பூதங்கள், பூமியின் அதிகரிக்கும் வெப்பம், சுற்றுப்புற மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் தீமைகள் என சில ‘தீமேடிக்’ பொமைகளும் இருந்தன!

பார்க், அயர்ன் மேன், ஸ்பைடர் மேன் போன்ற பொம்மைகள், செட்டியார் பொம்மைகளும் கடையும் என தரையில் பரப்பி வைக்கப்பட்ட காட்சிகள்!

பெரிய அளவில், 7 அல்லது 9 படிகளில் வைக்கபட்டுள்ள கொலுக்களும் உண்டு எனக் கேள்விப்பட்டேன்; சில வாட்ஸ் ஆப் குரூப் போட்டோக்களிலும் பார்த்தேன்.

நம் கலாச்சாரம், பாரம்பரியம், பெருமைகள் எல்லாம், மேற்கே குடியேறிக்கொண்டிருக்கின்றன என்பதை, கொலுவில் பாடிய குழந்தைகளும், அவற்றின் பெற்றோர்களும் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தனர். என்ன, மயிலாப்பூர், மேற்கு மாம்பலம், பாரீஸ் கார்னர், பூம்புகார் போன்ற இடங்கள் போல, பிளாட்பாராத்தில் பொம்மைகளின் வியாபாரம் இல்லை! பாரம்பரிய உடைகளில், வீடு வீடாகச் சென்று, பாட்டுப் பாடி ஒற்றுமையையும், மனிதநேயத்தையும் வளர்த்த அந்தக் காலம் போல் இல்லை – எல்லாம் அட்டவணைப்படி, இயந்திர வேகக் கொண்டாட்டங்கள்!

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்!