உமா ஷங்கர் ஜோஷி/காந்திஜியின் வாழ்விலிருந்து சில கதைகள்

கதை : 2

தமிழில் : ஜெயலட்சுமி

மோகன் இயற்கையிலேயே கூச்ச சுபாவம் உள்ளவன். எப்போது பள்ளிக்கூடம் முடிந்து மணி அடிக்குமோ அப்போதே புத்தகப் பையை தூக்கிக்கொண்டு வீட்டைப் பார்க்க ஓட்டம் எடுப்பான். மற்ற பையன்கள் வழி முழுவதும் தோழர்களுடன் அரட்டை அரட்டை அடித்துக் கொண்டே நடப்பார்கள். விளையாடுவதற்காக சிலர் வழியில் நின்று விடுவார்கள். வேறு சிலர் ஏதாவது தின்பண்டம் வாங்கி தின்பதற்காக நிற்பார்கள். ஆனால் மோகன் மட்டும் அக்கம் பக்கம் பார்க்காமல் நேராக வீட்டை நோக்கி நடப்பான். பையன்கள் தன்னைப் பிடித்துக் கொண்டு கேலி செய்வார்களோ என்று மோகனுக்கு எப்போதும் பயம். ஒரு சமயம் திரு கைல்ஸ் என்ற பள்ளி ஆய்வாளர் பள்ளிக்கூடத்திற்கு வந்தார். அவர் பையன்களின் அறிவை பரிசோதிக்க ஆங்கிலத்தில் ஐந்து சொற்களைக் கொடுத்து எழுதச் சொன்னார். மோகன் ‘கெட்டில்’ என்ற ஒரு சொல்லைத் தவிர மற்ற சொற்களை எல்லாம் எழுதி விட்டான். அந்த வார்த்தையை மட்டும் அவனுக்கு எழுத தெரியவில்லை. மோகன் அதை எழுதவில்லை என்று கண்டு கொண்ட ஆசிரியர், ஆய்வாளர் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தபோது, பக்கத்துப் பையனின் பலகையைப் பார்த்து எழுதுமாறு மோகனுக்கு சைகை செய்தார். ஆயினும் மோகன் பேசாமல் உட்கார்ந்து இருந்தான். மற்ற பையன்கள் எல்லோரும் ஐந்து வார்த்தைகளையும் சரியாக எழுதி விட்டார்கள் . மோகன் மட்டும் நான்கு வார்த்தைகள் தான் எழுதி இருந்தான். ஆய்வாளர் போன பிறகு ஆசிரியர் மோகனைப் பிடித்துக் கடிந்து கொண்டார். ” பக்கத்து பையனைப் பார்த்து எழுது என்று நான் தானே உனக்குச் செய்கை செய்தேனே காப்பி அடிக்க கூட உனக்கு தெரியாதா?” என்றார். மற்ற பையன்கள் எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.

அன்று மாலை வீடு திரும்பும்போது மோகன் மனதில் வருத்தம் ஏதுமில்லை. தான் செய்தது சரிதான் என்பதை அவனுக்குத் தெரியும். ஆசிரியரே காப்பியடிக்குமாறு கூறினாரே என்பதுதான் அவனது வருத்தம்.

வெளியீடு : இயக்குநர், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா நேருபவன், 5 இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, பேஸ் – II , வஸந்த் குஞ்ச், புதுதில்லி 110070