சாது அப்பாத்துரை வரலாறு/பிரமிள்



இலங்கையின் திருக்கோணமலை நகரில்,தமது போதத்தை வெளிக்காட்டாமல்
வாழ்ந்து மறைந்த ஞானபுருஷர்
சாது அப்பாத்துரை.
முத்துக் குளிக்கும் செல்வந்தச்
செட்டிகளின் பரம்பரையில்
பிறந்தவர்.சகோதர சகோதரியர்
அற்று,தாயையும் தந்தை பொன்னுசாமியையும் இளமையிலேயே இழந்து,தந்தை வழிப்பாட்டனார்
அண்ணாமலையால் வளர்க்கப்பட்டவர் அப்பாத்துரை.
பின்னாடி இவரது மனைவியாராக அமைந்து,இவரது ஆளுமையினால் இவரைவிட
மறைமுகமான ஞானியாக
வாழ்ந்த தங்கப் பொன்னு,இவரைவிட ஐந்துவயது மூத்தவராக
இவருடனேயே வளர்ந்தார்.
இருவருமே அண்ணாமலையின்
பேரக்குழந்தைகள்-
அப்பாத்துரை,மகனின் மகன்;
தங்கப்பொன்னு,மகளின் மகள்.
சிறுபிராயத்தில்,மரங்களின்
இலையினுள் ஒரு அபூர்வக்காட்சி அப்பாதுரைக்கு
எப்போதுமே தென்பட்டிருக்கிறது.
சின்னஞ்சிறிய முகங்கள் கொத்துக் கொத்தாக மரங்களில்
முளைத்தவை போன்று அவர்
கண்களுக்குத் தெரியும். அந்த
சமயத்தில்,அது இயற்கையாக
எல்லாருக்குமே தெரியக்கூடியது
என்று அவர் நினைத்திருக்கிறரர்.
உடைமை சம்பந்தமான நச்சுப்பிடியிலிருந்து அவர் இயற்கையிலேயே விடுபட்டு
இருந்திருக்கிறார்.
சிநேகிதச்சிறுவர்கள் கேட்பதைக் கொடுத்துவிடுவார்.
‘நாற்சார்’என்ற பழைய அமைப்பில்,உள்ளே முற்றம் அமையக் கட்டப்பட்ட அவரது
வீட்டின் வாசல் நிலைப்படியில்,அழகிய மரச்செதுக்கல் வேலைப்பாடும்
அதற்கு அணியாக யானைத்தந்தத்தில் செய்த சிறுகுமிழ்களின் பொருத்துகளும் இருந்தன.இவற்றில் சில பின்னாடி காணோம்.வேறோன்றுமில்லை
யாராவது சிநேகிதச் சிறுவன்,”டேய் அதுலே ஒன்றை எனக்குக் கழற்றிக் கொடுடா!”என்று கேட்பான்.
“கழற்ற முடியாது!ஆனால்..,”என்று கதவை அடைக்க உதவும் பெரிய கட்டையை எடுத்துக் குமிழை அடித்து வீழ்த்தி,”எடுத்துக்கொள்,”
என்பார் சிறிய அப்பாத்துரை.
சிநேகிதனின் மகிழ்ச்சியில் மகிழ்வார்.பெரியவரான
பிறகுகூட,இறுதிவரை,தமது
பள்ளிதோழராக இருந்து பின்பு
அன்பராக மாறிய ஒருவருக்குப் பெரிய பிரச்சனைகளின்போது
பணஉதவிகளும் செய்திருக்கிறார்.
உயிர் வடிவங்களான முத்துச்
சிப்பிகளைக் கொன்றுதான்
முத்துக்களை அவற்றின் கர்பத்தில் தேட வேண்டும்.இதனை உயிர்வதை என்று கணித்திருந்தார் அப்பாதுரை.வயல்களும் கானகங்களும் சொத்தாகக்கொண்டிருந்த
அவரது குடும்பம்,மரங்களை வெட்டி விற்கும் வாணிபத்திலும்
ஈடுபட்டிருந்தது.இதையும் உயிர்வதை என்றே அவர் கண்டார்.”வெட்டி வீழ்த்தபடுகிற மரங்களை’ஹோ’என அலறியபடிதான் வீழ்கின்றன,”என்பார் அவர்.இந்த உயிர்வதைகளில்,அபார லாபத்துக்காக கண்மூடிதனமாக
ஈடுபட்டதின் விளைவு,குடும்பத்தின்மீது தரித்திர வடிவமாய்க் கவிந்தது
என்கிறார் பிற்கால அப்பாத்துரை.
திருக்கோணமலை ராமகிருஷ்ண மிஷன் உயர்நிலைப் பள்ளிப் படிப்போடு
அவரது கல்வி நின்று விட்டது.ஆனால் ஜோதிடத்தைக்
கற்று,அதில் மிகுந்த திறனாளியாக வாலிபப்பிராயத்திலேயே அவர்
விளங்கியிருக்கிறார்.அவரது வாக்கு வியத்தகுவகையில்
பலிதமாயிற்று.ஞானாகாரர் ஆன பிறகு,ஜோதிடத்தின் உதவியின்றியே தம்மைத்
தேடிவருவோர்க்கு பலன்கூறுவதும் அவர்களது பிரச்சனைகளுக்கு விடுவிப்புத்
தருவதும்,அவரது அன்றாட
வேலைகளுள் ஒன்றாயிற்று.