விஜயலக்ஷ்மி கண்ணன்/குப்பம்மா


மணி ஆறு. அலாரம் ஒலிக்க அதன் தலையிலே ஒரு குட்டுக் குட்டி இன்னும் பத்து நிமிடம் சலுகை எடுத்துக்கொண்டு இனிமேல் படுத்துக் கிடந்தா வேலைக்கு ஆகாது என்று உணர்ந்து வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள் கமலா.
அருகில் குழந்தை அனு அவளுடைய அப்பா சுந்தரின் கைகளை எடுத்து தன் மீது வைத்துக் கொண்டு நல்ல உறக்கம். சுந்தர் எட்டு மணிக்கு முன் எழ மாட்டான்

கமலா காலை கடன்களை முடித்து விட்டு வாயில் கதவை திறந்து நியூஸ் பேப்பரை எடுத்து வைத்து அடுப்பங்கரை நோக்கி போனாள்.

“அம்மா “குரல் கேட்டு கதவைத் திறந்து விட்டாள் கமலா.
குப்பம்மா சிரித்த முகத்துடன் வாயிலைத் தெளித்து, பெருக்கிக் கூட்டி அழகாக கோலம் போட்டு விட்டு சமையல் அறைக்குள் வந்தாள்.

“இன்னிக்கு இன்னாக் காய் நறுக்க? சொல்லு”என்றபடி கத்தியும்
கட்டையுமாக உட்கார்ந்து
கொண்டாள் குப்பம்மா.

“இந்தா, கீரைப் பொரியலுக்கும்,
அவியலுக்கும் காய் நறுக்கிடு.
தேங்காய் ஒரு மூடித் துருவிடு.
வத்தக்கொழம்பு தான் இன்னிக்கு.”
என்ற கமலா கையோடு ஒரு பெரிய டம்ளர் சுடச் சுட டீ எடுத்துக் கொண்டு வந்து குப்பம்மா முன் வைத்தாள்.

குப்பம்மாவுக்கு இந்த டீ தான் எல்லாம். சொர்கம் கிடைத்தது போல.வாய் எல்லாம் பல்.

சில நேரங்களில் கமலா ஏதாவதுக் கடிந்து
கொண்டால் கூட
குப்பம்மா கண்டு கொள்ளவே மாட்டாள்.
கமலா வீட்டு முதல் டீ குப்பம்மாவுக்குத் தான்.
குப்பம்மா டீ யை ருசித்து ரசித்து அனுபவித்துக் குடிக்கும் அழகை பார்த்து தினமும் கமலா சிரித்துக் கொள்வாள்
இரவு மீதமான சாதம் தண்ணீர் ஊற்றி அதில் ஒருக் கரண்டி மோரும் ஒருத் துண்டு ஊறுகாயும் போட்டு குப்பம்மா வுக்குக் கொடுப்பாள் கமலா.பாவம்,தனி மனுஷி.
குப்பம்மாவுக்கு டீ குடிக்கும் பழக்கம். காபி குடிக்க மாட்டாள்.
எங்கே வேலைக்குப் போனாலும் எல்லா வீட்டிலும் காலையில் காபி தான்.
“நம்ம கமலா அம்மா வூட்டில தான் காலையிலே டீ. ஜோரா ஈக்கும். மகராசி “என்று தினம் ஒரு தரம் வாழ்த்தி விட்டு போய் மற்ற வேலைகளை செய்து விட்டு சுந்தர் எழுந்து வரும் நேரம் கிளம்பி போய் மீண்டும் பத்து மணியளவில் வந்து மீதமுள்ள வேலைகள் செய்து விட்டு போய் விடுவாள்.
கமலாவின் டீ தான்
குப்பம்மாவைக் கட்டிப்
போட்டு உள்ளது.