நட்பின் அடையாளம்/பி. ஆர்.கிரிஜா

பக்கத்து கிராமத்திலிருந்து சைக்கிளில் ஐந்து கிலோமீட்டர் ஓட்டி
நண்பரைப் பார்க்க ஆவலோடு வந்தார் முத்துசாமி.
தூரத்திலேயே அவர் நண்பர் ஆறுமுகம் மரத்தடியில் உள்ள ஒரு பெரிய திட்டில் உட்கார்ந்து ஏதோ தீவிர யோசனையில் இருப்பதாக முத்துசாமிக்குப் பட்டது. நேராக சைக்கிளை அவர் அருகில் நிறுத்தி விட்டு அந்த திட்டில் அவர் அருகில் வசதியாக அமர்ந்து கொண்டார். அந்த மர நிழல் இதமாக இருந்தது.
” என்ன ஆறுமுகம், இங்க வந்து உக்காந்து இருக்க…? முகத்தில சிரிப்பயே காணோம்…வீட்டில எல்லாரும்
சுகந்தானே ? “
“ஒன்னுமில்ல முத்து, மகள் வீட்டில திடீர் செலவு. அவள் நாத்தனாருக்கு கல்யாணம்
வெச்சிருக்காங்க….. எங்கிட்ட கடனா இரண்டு லட்சம்
கேக்கறாங்க… அம்புட்டு தொகைக்கு நான் எங்கன போவேன்?…. இந்த வருஷம் விளைச்சலும் சரியில்ல. இதுல கடனா நான் எங்க கொடுக்க? இதுனால என் மகளுக்கு ஏதும் பாதிப்பு வந்துருமோ என மனசு கிடந்து தவிக்குது….” பட படவென பொரிந்து தள்ளினார் ஆறுமுகம்.
இரு நிமிடம் யோசித்து விட்டு, ” கவலைப்படாத…… நான் உனக்கு ரெண்டு லட்சம் கடனா தரேன். நான் இப்ப இங்க வந்ததே, உன்ன பாத்து, ஏதாவது நிலம் விலைக்கு வருமா, வாங்கிப் போடலாம்னு தான் வந்தேன். நிலம் கிடக்கு நிலம்…. எப்போ வேணாலும் வாங்கலாம். என் மகனும் துபாயில நல்லா
சம்பாதிக்கறான். அவன் அப்பப்போ அனுப்பற பணத்த சிக்கனமா சேத்து வெச்சிருக்கேன். அவசரத்துக்கு உனக்கு இல்லாத பணமா ? நீ மெதுவா திருப்பித் தா… வட்டியெல்லாம் வேண்டாம். இப்ப கவலைப்படாம வீட்டுக்குப் போ. நானும் வரேன் என்று எழுந்தார் முத்துசாமி. முத்துசாமி சைக்கிளை எடுத்தார். ஆறுமுகம் அவர் பின்னாடி அமர்ந்து கொண்டார். இருவரும் ஆறுமுகம் வீட்டிற்குக் கிளம்பினர்.
அவர்கள் இருவரின் நட்பை உணர்ந்த மாதிரி தென்றலும் சுகமாக அவர்கள் இருவரையும் தழுவியது.


23/10/2023