நாகேந்திர பாரதி/வரக்காபி

காபியைக் குடித்தபடி சிரித்தவளைப் பார்த்து ‘அடி கருப்பாயி நீ இன்னமும் அப்படியே தாண்டி இருக்க’ என்று செல்லமாகச் சொன்ன புருஷன் கண்ணாயிரத்தை ஆசையோடு பார்த்தாள் கருப்பாயி . அவன் போட்டுக் கொடுத்த அந்த வரக்காப்பி, பால் இல்லாத வெறும் கருப்பட்டியும் காபித்தூளும் வெந்நீரில் கலந்த அந்த வரக்காபியை இன்னும் கொஞ்சம் குடித்து சப்புக்கொட்டியபடி கேட்டாள் .’ ஏன்யா இந்த வரக்காப்பிய தினசரி சாயந்திரம் எனக்கு நீதான் போட்டுக் கொடுக்கிறே. உனக்குச் சலிப்பே வராதா’ என்றாள் .’ எனக்குச் சமைச்சு போடுறத்திலே உனக்கு சலிப்பு தட்டுதா , அது மாதிரித் தான் இதுவும். ‘

. ஞாபகம் இருக்கா, சின்ன வயசிலே உங்க வீட்டிலே ரெண்டு பசு மாடு இருந்துச்சு. பசும் பால் காபி தினசரி ரெண்டு தடவை குடிச்சு வளர்ந்த நீ எப்ப இந்த வரக் காபி மேலே ஆசைப் பட ஆரம்பிச்சே ‘.
‘ அட போய்யா ‘ என்று வந்த வெட்கத்தை அடக்கிக் கொண்டு கேட்டாள் சிணுங்கலோடு . ‘எப்ப ‘ .

‘இந்த ஊருப் பெரிய பண்ணை உன்மேலே ஆசைப்பட்டு உன்பின்னாலேயே சுத்திக் கிட்டுத் திரிஞ்சான். ‘எங்க வீட்டிலே பத்து பசு மாடு இருக்கு, இன்னும் பண்ணை வீடு , வயல் தோப்பு ன்னு உங்க பொண்ணை பாலிலேயே குளிப்பாட்டி வச்சுக்கிருவேன்ன்னு ‘உன் அப்பனுக்கு ஆசை காட்டினான். இந்தக் காலம் மாதிரியா, அப்பல்லாம், ஆடு , மாடு வயக்காடு தானே பணம். ‘

‘ஆனா நீ அசைஞ்சு கொடுக்கலியே . என் சிலம்ப வீச்சைப் பார்த்து மயங்கிப் போயி பின்னாலேயே திரிஞ்சே. ஊரிலே சிலம்புப் போட்டியிலே எப்பவும் நான் தானே பர்ஸ்ட். அந்த பெரிய பண்ணை எத்தனை முறை என்கிட்டே போட்டி போட்டு தோத்துருப்பான். ‘

‘ஆமாய்யா , விர் விர் னு நீ சுத்தறப்போ வர காத்து என் தலைப்பையே தூக்குமே ‘ என்று வெட்கினாள். ‘அதுவும், கால் வரிசை வச்சு ஒரு சுழற்று சுழற்றி புழுதி கிளம்ப நீ வீசுர வீச்சில், வீசுற கல்லு கூட தெரிச்சுப் போகும். அது என்னமோ ஒரு கம்பு தானா, பத்துக் கம்பு சேந்து சுத்துதான்னு கிறங்கிப் போயி பார்த்துக்கிட்டு நிப்பேன் ‘

‘அப்ப போட்டியே ஒரு சபதம் ,உங்க அப்பன் கிட்டே , அத்தனை பசுமாடும் அவன்கிட்டேயே இருக்கட்டும். நான் இனிமே பால் இல்லாத வரக் காப்பிதான் குடிப்பேன் ‘ ன்னு. அப்ப போட ஆரம்பிச்சேன் , உனக்காக வரக் காபி , லாரியிலே வெளியூர் போற நாள் தவிர ‘ என்றவனை ஆசையோடு பார்த்த கருப்பாயி கேட்டா.’ ஏன்யா, புள்ளைங்க கூட போயி இருக்கணும்னு உனக்கு நினைப்பே இல்லையே . ‘

‘ ஏண்டி , உன்னையைத்தானே கூப்பிடுறான் . மருதைக்குப் போயி மருமக கூட இருக்க வேண்டியதுதானே. ‘சும்மா நிறுத்துயா , உனக்கு மருவதை இல்லாத இடத்திலே நான் எப்படி இருப்பேன். ‘
‘நான் எத்தனை நாளுக்குடி, லாரி ஓட்டி ஓட்டி , அந்த பெட்ரோல், டீசல் வாசத்திலேயே உடம்பே போச்சு . ‘
‘ சும்மா நிறுத்துயா ‘

‘ஏண்டி ,நா உனக்கு முன்னே போயிட்டா நீ என்னடி பண்ணுவே.’
‘வாயை அலம்பு . நா முன்னாலே போகணும்னு தான் எனக்கு ஆசை .. ஆனா உன்னை நினைச்சா பாவமா இருக்குய்யா. நா இல்லாம நீ என்ன பண்ணுவே. புள்ளை மாதிரியா நீ. அதுவும் இந்த லாரி டிரைவர் பொழைப்பு எப்படின்னு எனக்குத் தெரியும் , முனியாண்டி, கதிர்வேல் இவனுங்களுக்கு போற வழியிலே எத்தனை பொம்பளைங்க சகவாசம். அப்புறம், சாராயக் குடி வேற . நீ எப்படியா கெட்டுப் போகாம இருந்தே .’

‘எல்லாம் உன் நினைப்புதான் கருப்பாயி. நீ தான் பொண்டாட்டி . வேற யாரைப் பார்த்தாலும், எல்லோரையும் அம்பாளோட அவதாரம்னு நினைக்கிற பழக்கம் வந்துடுச்சு . ஒரே கும்பிடுதான். ‘

‘அதுக்குள்ள அம்பது வருஷம் ஓடிப்போச்சு இன்னும் அதே பொழப்பு தான் . விவசாயம். அது இல்லாத காலத்துல கருவை மரத்தை வெட்டி கரியாக்கி அதுல காசு பார்க்கிறது . லாரி ஓட்டிட்டு வாரத்துக்கு ஒரு நாள் வீட்டுக்கு வர்றது . ஒரே புள்ளை , படிச்சு வளர்த்து ஆளாக்கி பொண்டாட்டி கிட்டே கொடுத்தாச்சு. அவனும் மதுரையை விட்டு இங்கே வரதில்லே . எப்பொவே ஒரு தடவை கூப்பிட்டான்னு போயி இருந்தப்ப , பொண்டாட்டிக்கு பரிஞ்சுக்கிட்டு என்னையே என்னமோ பேசிட்டான்னு உனக்கு கோபம். உடனே கூட்டிக்கிட்டு இங்கே திரும்ப வந்துட்டே . ‘

‘அட போய்யா . நம்ம உடம்பிலே தெம்பு இருக்கு. எவன் தயவும் நமக்குத் தேவையில்லே . உன்னோட முகத்திலே இன்னமும் அந்த வீரக் களை இருக்குதய்யா ‘ என்று அவனை ஆசையோடு பார்த்தாள் .
‘எல்லாம் அந்த காலத்து கம்பு வீச்சு தானே காரணம் . எல்லாம் சரி தாண்டி .இருந்தாலும் புள்ளை, பேரன் பேத்தி முகத்தை பார்க்காது உனக்கு கஷ்டமா இல்லையா ‘

‘அவங் களுக்கு நம்ம முகத்தை பார்க்கணும்னு ஆசை இல்ல. நம்ம அதுங்க முகத்தை பார்க்கணும்னு நினைச்சு என்ன ஆகப்போகுது உன் முகத்தை நான் பார்க்கிறேன் என் முகத்தை நீ பார்க்கிறே அது போதும்யா ‘

‘அந்தக் காலம் எப்படி ., நம்ம அப்பா அம்மா ல்லாம் கூடவே இருந்து வாயால வயிற்றாலே போய் அவங்களுக்கு பீ மூத்திரம் எடுத்துப் பார்த்துக்கிட்டோம். இந்த காலத்துல நம்மள தொடவே அசிங்கப்படுறதுக .எல்லாம் நாகரீகமாய் போச்சு .’

‘இருந்தாலும் என்னைவிட உன்கிட்ட தாண்டி பிரியம் பையனுக்கு. ஊட்டி ஊட்டி வளர்த்த நீ போனா உன்னை விட்டுட மாட்டான். ‘
‘ அட போயா அவன் விடுறது வேற . உனக்கு மருவாத கொடுத்து உன்னை வரச் சொல்லாத அந்த வீட்டுக்கு நான் எப்படி போவேன் . கூப்பிடத்தான் செஞ்சான் .’

‘ உன்னைய விட்டு, இந்த வரக்காபியை விட்டு நான் எப்படிய்யா போவேன் ‘என்று சிரித்த கரு ப்பாயியை ஆசையோடு பார்த்துக் கொண்டு இருந்தான் கண்ணாயிரம்.

—————————-

One Comment on “நாகேந்திர பாரதி/வரக்காபி”

Comments are closed.