ஹரணி/சைக்கிள்

.

எதிரே அந்த சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது.

சைக்கிளுக்கு எதிரே விரிந்து கிடந்த மரத்தைச் சுற்றியமைக்கப்பட்டிருந்த மேடையில் தனபாலும் மாரிமுத்துவும் உட்கார்ந்திருந்தார்கள்.

என்னடா மாரி பேசாம உக்காந்து காலை ஆட்டிக்கிட்டிருக்கே?

மாரிமுத்து சிரித்தான். சிரித்துவிட்டு என்ன தனபாலு ? நீ எந்தக் காலத்துலே இருக்கே? எவனும் பழைய சைக்கிளை வாங்கமாட்டான். அப்படியே வாங்கினாலும் பழைய இரும்பு விலைக்குத்தான் எடுப்பான். அதுவும் நீ எதிர்பார்க்கிற பணம் கிடைக்காது.

என்னடா இப்படிப் பேசறே? இந்த சைக்கிள் எவ்வளவு ராசி தெரியுமா? இதுலதான் உரமூட்டை, விதைநெல்லு, நாத்துக்கட்டுன்னு எல்லாத்தையும் வச்சு கொண்டுவந்து ஐந்து ஏக்கர் நிலத்துலே விவசாயம் பார்த்து இப்போ வெறும் மனுஷனாப் போயிட்டேன்.. அஞ்சு பொண்ணுங்க.. அத்தனைக்கு தலைக்கு ஒரு ஏக்கர்னு வித்து கல்யாணம் பண்ணி அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்துட்டேன். 

விடு தனபாலு  நல்ல காரியந்தானே பாத்திருக்கே..  பெத்தோம் வளத்தோம் வாழவச்சோம்னு நிம்மதி இருக்குல்ல.. 

அதுக்கெல்லாம் நான் கவலைப்படலே மாரி.. இப்போ விவசாயக்கூலியா போறேன்.. எனக்கும் எம்பொண்டாட்டிக்கும் அது போதும்.. இப்போ என் பேரனுக்கு பொறந்த நாளு வருது.. எங்கையிலே காசு இல்ல.. இந்த சைக்கிளை வித்துக்கொடுத்தா.. ஏதோ என்னால முடிஞ்சதுன்னு கொடுத்துடுவேன்..

      சரி தனபாலு.. நீ சொல்றதெல்லாம் சரிதான். இந்தக் காலத்துலே எவன் சைக்கிள் ஓட்டறான்.. வீட்டுலேர்ந்து ரோட்டுக்குப் போறதுக்குக்கூட பைக்லதான் போறானுங்க.. அதுவும் இது பழைய சைக்கிளு எவன் வாங்கி என்ன பண்ணுவான்? பழைய இரும்புக்கடைக்காரன் இல்லாட்டி சைக்கிள் கடைக்காரன் வாங்கிக்குவான்.. இரும்பு ரேட்டுதான்.. 

      சரி வா.. அதையாச்சும் வித்துக்கொடு.. கொஞ்சம் கூட வாங்கிக்கொடு.. என்றான் தனபாலன்.

         இருவரும் கிளம்ப எத்தனிக்கும்போது தூரமாய் ஒரு டூவீலர் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு இளைஞன் இறங்கி வந்தான்.

        ஐயா வணக்கம். 

        சொல்லுங்க தம்பி என்றான் மாரிமுத்து.

        நான் ஒரு பத்திரிக்கைகாரன். புதுமையா போட்டோ எடுக்கிறவன். இன்னிக்கு வயல் வாழ்வு போயிடிச்சி. எல்லாத்தையும் பிளாட்டாப் போட்டுட்டாங்க. அதேமாதிரி எல்லாரும் சைக்கிள் ஓட்டுனப்ப உடம்பு நல்லா இருந்துச்சி.. இப்போ எங்க பார்த்தாலும் பைக், கார்தான்..  உடம்புலேயும் அத்தனைக் கோளாறு. இதுபற்றிய ஒரு விழிப்புணர்வுக்காகப் படம் எடுக்க வந்திருக்கேன். உங்க கிட்டதான் சைக்கிள் இருக்குன்னு சொன்னாங்க.. அப்படியே உங்களையும் சைக்கிளையும் போட்டோ எடுத்துக்கறேன்.. என்றான்.

       மாரிமுத்து சிரித்தபடி தனபாலைப் பார்த்தான்.

       தனபாலுக்கு எதுவும் புரியவில்லை.

       தம்பி.. இவர் பேரு தனபாலு. இவரோடதுதான் இந்த சைக்கிள்.. தாரளமாப் போட்டோ எடுத்துக்கங்க என்றான். நான் தள்ளிக்கிறேன்.. என்றான்.

        இல்ல.. நீங்க அப்படியே உக்காந்தபடியே இருங்க.. சைக்கிள் அப்படியே இருக்கட்டும். பின்னால பாருங்க.. பச்சைப்பசேல்னு வயல் இந்த மரம் அருமையான காட்சி.. அப்படியே படம் எடுத்துக்கறேன்.. 

       என்றபடி அவர்கள் உட்கார்ந்திருந்த காட்சியைப் புகைப்படம் எடுத்தான்.

        பின்பு மெல்ல தனபால் அருகில் வந்து சார்.. இந்த சைக்கிளை கொடுத்திடாதீங்க.. இன்னிக்கு யாரும் சைக்கிள் ஓட்டறது கிடையாது.. இந்த புகைப்படம் பத்திரிக்கைல வந்ததும் பாருங்க.. நிறைய பேரு உங்களத் தேடிட்டு வருவாங்க.. என்றபடி தன் பையிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துத் தனபாலிடம் நீட்டிச் சொன்னான்.

       இது பத்திரிக்கை கொடுக்கிற பணம். இந்தப் படத்துக்காக. வச்சுக்கங்க..  நான் வரேன் என்று கிளம்பிப்போனான்.

        தனபால் எதிர்பார்த்ததைவிடப் பணம் அதிகமாக இருந்தது.

         தன் சைக்கிளை ஒருமுறை பார்த்தான். உள்ளுக்குள் அவனுக்கு சைக்கிளோடு பயணித்த பழைய நினைவுகள் வந்தன. அப்படியே சம்மணமிட்டபடியே நினைவுகளில் ஆழ்ந்துன்.

          மாரிமுத்து அவனைப் பார்த்து சிரித்தபடியே தொங்கவிட்ட காலை ஆட்ட ஆரம்பித்தான்.

0000