மஞ்சள் ஸ்கூட்டர்!/ஜெ.பாஸ்கரன்

“கும்பிட்றேனுங்க”

அரை நிஜாரும் சட்டையும் போட்டு சைக்கிளில் வந்து இறங்கியவருக்கு வயது நாற்பதிலிருந்து ஐம்பதுக்குள் இருக்கலாம்.

ஊருக்கு வெளியே திருப்பத்திலிருந்தது அந்தப் பெரிய மரம். அதைச் சுற்றி இரண்டரை அடி உயர கட்டைச் சுவர். அதன் மீது அமர்ந்து ஊருக்குள் வரும் மண் தெருவைப் வெறித்தபடி இருந்தவர், கை கூப்பி, ‘யார் நீங்க?’ என்பதைப் போலப் பார்த்தார். இடுப்பில் எட்டு முழ் வேட்டி, மடக்கிவிடப்பட்ட முழுக்கை சட்டை, நரைத்த முடி, தாடி, ஊருக்குள் பெரியவர் என்கிற தோற்றம்.

“அய்யா நா மூணு ஊர் தள்ளியிருக்கிற சின்னப்பட்டி கிராமத்திலேர்ந்து வரேனுங்க. இந்த ஊர்ப் பெரியவரு, சின்னசாமி அய்யாவைப் பார்க்கணுமுங்க. வூடு எங்க இருக்குதுன்னு சொல்றீங்களா?”

“அவரை எதுக்குப் பார்க்கணும்? ஒதவி ஏதாவது கேட்டு வந்திருக்கீங்களோ”

“ஆமாங்கய்யா. இந்த ஊருல என்ன தப்பு தண்டான்னாலும், அய்யாதான் தீர்ப்பு சொல்லுவாராம். ஊர்ல சனங்க எல்லாம் பேசிக்கிட்டாங்க, ரொம்ப நாயஸ்தராமில்ல ..”

“ஆமாம். அப்படித்தான் சொல்லுவாங்க. சின்ன சின்ன திருட்டு, குடும்பத்தில சின்னச் சின்ன தகராறுங்க, ஊருக்கு ஒரு நல்லது, கெட்டது எல்லாத்துலயும் அவரைக் கலந்துகிட்டுதான் இங்க முடிவெடுப்பாங்க”

“ஓ, அப்படியா? அதான், அவரைப் பாக்கோணம்ன்னு காலையிலயே கெளம்பி வந்தெனுங்க”

“அவரைப் பாக்கறது ஒண்ணும் சிரமமில்லே. இப்டிப் பக்கத்துல வந்து ஒக்காருங்க”

“ஆங், அது பர்வாலீங்க, எனக்கு அய்யா வூட்டுக்கு வழி சொன்னீங்கன்னா நல்லதுங்கய்யா”

“நாந்தான்யா சின்னசாமி. இப்படி வந்து உட்கார்ந்து விபரத்தைச் சொல்லுங்க” – அரை நிஜார் அவர் அருகில் உட்கார்ந்தது.

“அய்யா, நீங்க பெரியவுங்க. அஞ்சு வருஷம் முந்தி, சேரிப் பொண்ணு ஒண்ண கெடுத்துப்போட்ட பையனக் கூப்பிட்டுக் கண்டிச்சீங்களாம். அந்தப் பையன் வேற மேல் சாதியாமில்ல. நீங்கதான் அவங்க அப்பன் ஆயிகிட்ட பேசி, நாயம் சொல்லி கண்ணாலம் செஞ்சி வெச்சீங்களாம். ஊர்ல இன்னமும் பெருமையா பேசிட்டு இருக்காங்கய்யா”

சின்னசாமி சிரிக்கவில்லை. தலையை மட்டும் ஆட்டியபடி இருந்தார்.

“இப்பொ எங்கூர்ப் பொண்ணுக்கு, உங்க ஊர்ப் பையனால அந்த மாதிரியே ஒரு பிரச்சனை வந்திருச்சுங்க. அந்தப் பையன், விசயம் தெரிஞ்சப்பறம் அந்தப் பக்கம் வர்ரதையே நிறுத்திப்புட்டனுங்க. அதை விசாரிச்சு ஒரு நல்ல முடிவோட போகலாமுன்னு வந்தேனுங்க”

“பொண்ணுக்கு அப்பன் ஆயி கிடையாதா? நீங்க என்ன வேணும் அந்தப் பொண்ணுக்கு?”

“அது என்னங்க அப்படிக் கேட்டுப்போட்டீங்க… நாந்தான் அவ அப்பனுங்க”

“ஓ, அப்ப சரி. அந்தப் பையன் பேரு தெரியுமா? என்ன செய்யறான்? அவன் அப்பன் ஆயி யாரு? எதுனாச்சும் தெரியுமா?”

“அதெல்லாம் சரியாத் தெரியலைங்கய்யா. ஏமாத்தற புள்ள, உண்மையவா சொல்லியிருக்கப் போவுது?”

“பின்ன எப்படிய்யா கண்டுபிடிக்கறது?”

“தெரிலீங்கய்யா. அதுக்குதான் ஒங்களத் தேடி வந்தேனுங்க. நீங்கதான் பாத்து எதுனாச்சும் செய்யணுங்கய்யா. பொண்ண நெனச்சா மனசு அடிச்சுக்கிதுங்கய்யா” – கண்ணீர் விட்டது அரைநிஜார்.

சின்னசாமி சிந்தனையில் ஆழ்ந்தார். வலது பக்கம் புதிதாகக் கட்டப்பட்டிருந்த சுடுகாடு இன்னும் பயன்படுத்தாமல் இருந்ததைப் பார்த்தார். திரும்பவும் ஊருக்குள் வரும் மண் சாலையை யாரையோ எதிர்பார்ப்பதைப் போலப் பார்த்தார். இதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று யோசித்திருக்கலாம்.

அரைநிஜார் திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தாற்போல் சொன்னது. “ஒங்கூர்ப் பையன் ஒருக்கா மஞ்சள் கலர் ஸ்கூட்டர்ல வந்ததாப் பொண்ணு சொன்னாளுங்க”

“மஞ்சள் கலர் ஸ்கூட்டரா? இந்த ஊர்ல நான் அந்தக் கலர்ல ஸ்கூட்டரே பாத்ததில்லையே” என்ற சின்னசாமி யோசனையில் ஆழ்ந்தார். பின்னர் அரை நிஜாரைப் பார்த்து, “நானும் இங்கே விசாரிக்கறேன் – வயசுப்பசங்க இருகிற வீட்டில எல்லாம் கேட்டுப் பார்க்கிறேன். நீங்களும் ஒங்க மகளக் கூட்டியாங்க. விசாரிச்சு ஒரு முடிவுக்கு வருவோம்” என்று சொல்ல, அரை நிஜார் எழுந்து சின்னசாமியின் கையைப் பிடித்து அழுதபடி விடை பெற்றது.

வீட்டிற்குச் சென்ற சின்னசாமி, வாசலில் நின்றிருந்த மஞ்சள் கலர் ஸ்கூட்டரைப் பார்த்தார். ஆறு மாதம் முன்னால் வாங்கிய மஞ்சள் ஸ்கூட்டருடன் தன் மகனை, உடனடியாகப் பட்டணத்திற்குத் தன் நண்பனின் ஃபேக்டரிக்கு வேலைக்கனுப்ப வேண்டும் என்று முடிவுசெய்து கொண்டார். கை கால் கழுவி வீட்டிற்குள் 7 ஊருக்குப் பெரியவர்.