அழகியசிங்கர்/புகழ்ப் பெற்ற எழுத்தாளர்

புகழ்ப்பெற்ற எழுத்தாளர் அவர். ஒதுக்குப்புறமாக அந்தக் கிராமத்தில் குடியிருக்கிறார். யார் கண்ணிலும் படாமல். இப்போது எழுதுவது கிடையாது. அவர் கடைசியாக எழுதியது ஒரு நாவல். அதுவும் பத்தாண்டுகளுக்கு முன். இன்னும் அவர் வாசகர்கள் அவர் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அவரைப் பார்க்க வருகிறார்கள். அவர்களோடு ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பார். இலக்கியமில்லை. வெறும் வெட்டிப் பேச்சுதான். அவர் தங்கி இருக்கும் இடத்திலிருந்து சைக்கிளில் வந்து விடுவார். நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பார் அது அவருடைய பொழுதுபோக்கு.

சில சமயம் யாருமே அவரைப் பார்க்க வராமல் இருப்பார்கள்.
என்றாலும் அவர் தினந்தோறும் ஆல மரத்தடியில் உட்கார்ந்திருப்பார்.

கொஞ்ச நேரம் வரைக்கும் இருந்துவிட்டுப் பிறகு அங்கிருந்து கிளம்பிப் போய்விடுவார்.

ஒருவர் வெகு தூரத்திலி ருந்து அவரைப் பேட்டி காண வந்திருந்தார்.

சைக்கிளில் ஏற்கனவே புகழ்ப் பெற்ற எழுத்தாளர் அந்த ஆலமரத்தினடியில் அமர்ந்திருப்பது தெரிந்தது வந்தவருக்கு.

தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
“உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். என் பத்திரிகைக்கு உங்களைப் பேட்டி எடுக்க விரும்புகிறேன்.” என்றார்.

“சில வருடங்களுக்கு முன்பு ஒரு நாவல் எழுதினீர்கள். அதன்பின் நீங்கள் எழுதவில்லை ஏன்? “

” இதுவரை நான் எழுதியதை நீங்கள் படித்தால் போதாதா? இதுவரைக்கும் நிறைய எழுதி இருக்கேனே தொடர்ந்து ஏன் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்? என்று அனுபவமுள்ள புகழ்பெற்ற எழுத்தாளர் பேசினார்.

தொடர்ந்து, “கிடைக்க வேண்டிய எல்லாப் பரிசுகளும் எனக்குக் கிடைத்து விட்டது.. உண்மையில் எனக்குக் கொடுக்கிற மரியாதை தமிழ் மொழக்குக் கொடுக்கிற மரியாதை.

இனிமேல் எழுத வேண்டாம் என்று விட்டுவிட்டேன். மேலும் எழுத ஒன்றுமில்லை,” என்றார் அவர்.

“இப்போது எழுதுகிற இளைஞர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.”
[28/10, 08:04] Azhagiyasingar: “ஒழுங்காக தமிழ் எழுத சொல்லுங்கள். யாருக்கும் தமிழே சரியாக எழுதத் தெரியவில்லை? ” என்று குறைபட்டுக் கொண்டார்.

“குடும்பத்தை விட்டு தனியாக நீங்கள் இருப்பது இந்த வயதில் சரியா ? ” என்று கேட்ட கேள்விக்கு.

“இது என்னுடைய பர்சனல் விஷயம்.
இதற்கு நான் பதில் சொல்லப் போவதில்லை.”

“இந்த வயதான காலத்தில் இப்படித் தனியா இருப்பது சரியா? “

“இங்கே இருக்கிற இந்த ஜனங்கள் என்னுடைய ஊர் காரர்கள். என்னை அவர்கள் நன்றாக பார்த்துக் கொள்வார்கள். எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. போதுமான அளவிற்கு நான் சாப்பிட எனக்கு என்னுடைய எழுத்து பணம் கொடுக்கிறது. என் எழுத்து மூலம் நான் சம்பாதித்தது தொடர்ந்து கிடைத்து வருகிறது.”

பேட்டி கண்டவரைப் பார்த்து , ” நீங்கள் இதுவரைக்கும் பேட்டி எடுத்தது போதும். நீங்கள் கிளம்பலாம்” என்று கறாராக மூத்த எழுத்தாளர் சொல்ல, பேட்டி கண்டவர் அந்த இடத்தை விட்டு போகும் படி நேர்ந்தது.