நாறும்பூநாதன்/தோழர் சாந்தா

80 வயதை நெருங்கிய தோழர் சாந்தா, பெங்களூரில் இன்று காலமான செய்தி வந்துள்ளது.
15 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையில் இருந்து பெங்களூர் சென்றார்.
ஒரு கன்னியாஸ்திரியாக ஆசிரியப்பணியை மேற்கொண்டு, பின்னர் நவ ஜீவன் அறக்கட்டளையில் பணியாற்றினார்.
மார்க்சிய சித்தாந்தத்தில் அவருக்கு ஈடுபாடு வந்ததைக் கூட ஆச்சரியம் என்பேன். எளிய மக்களுக்காக உழைப்பதையே தனது வாழ்வின் லட்சியமாக கொண்ட சாந்தா, இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் சேர்ந்து பணியாற்றிய காலங்கள் மகத்தானவை.

சமூக வலைத்தளங்கள் உருவாக அக்காலத்தில், வீடு வீடாகச் சென்று பெண்களோடு உரையாடல் நிகழ்த்துவார். கீழப்பாட்டம் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டின் பெண்களையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு நெருக்கமான பழக்கம் உண்டு.
பெயருக்கேற்றபடி சாந்தமாகவே பேசுவார். மத்தியதர வர்க்க தோழர்களிடம் உரிமையோடு ” மகளிர் சிந்தனை ” இதழுக்கு சந்தா கேட்பார்.
மாநில மாநாடு, மாவட்ட மாநாடு என்றால் நன்கொடை கேட்பார்.
ஒரு மறியல் போராட்டத்தில் காவல்துறை அதிகாரி கைது செய்யும்போது ஆங்கிலத்தில் ஏதோ திட்டியபோது, பதிலுக்கு அவரை ஆங்கிலத்தில் பத்து நிமிடத்திற்குக் குறையாமல் வெளுத்து வாங்கி விட்டார்.
( அவர் கடந்த காலத்தில் கான்வென்ட் டீச்சர் என்பதை அப்போதுதான் அறிந்து கொண்டேன்)
ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தமிழ், ஆங்கிலத்தில் மார்க்சிய சிந்தாந்த நூல்களை வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தோழர்களின் வீட்டிற்குச் செல்லும்போது, குழந்தைகளைக் கொண்டாடுவார்.
அவர்களோடு குழந்தையைப்போல பேசி மகிழ்வார்.

65 வயதை நெருங்கும்போது, பெங்களூருக்குச் செல்ல அவர் முடிவெடுத்தபோது, மிகவும் வருத்தமாக இருந்தது. போகிறாரே என்பதற்கான வருத்தம் மட்டுமல்ல அது.
பிறருக்கு, தான் பாரமாக இருந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்.

தோழர் சாந்தாவை நினைத்தால், அவரது மென்மையான புன்னகையையே நினைவுக்கு வரும்.
இவ்வளவு காலமும் நினைத்துக் கொண்டிருந்தது போல, பெங்களூரில் வாழ்வதாகவே நினைத்துக் கொள்ளலாம்.

தோழர் சாந்தா ! வீர வணக்கம்.
இங்கிருந்தே உங்கள் உடலுக்கு செங்கொடி போர்த்தி அஞ்சலி செய்கிறேன் !