வசந்ததீபன்
மிருகங்களை நேசிக்கிறீர்கள்
மிருகங்களை போஷிக்கிறீர்கள்
மனிதர்களை இம்சிக்கிறீர்கள்.
கிளிகள் அழகாயிருக்கின்றன
குஞ்சுகள் அசிங்கமாயிருக்கின்றன
அழகு அசிங்கத்திலிருந்து உருவாகிறது.
என்னை நேசிக்க வேண்டாம்
என் மேல் அன்பு செய்ய வேண்டாம்
நான் நானாக இருக்க வேண்டும்
மனதுக்கு பிடித்தாமாயில்லை
வனம் வனமாக அலைகிறேன்
நான் உண்ணும் கனி தென்படவில்லை
என்னைக் கொத்திச் செல்லும் பறவையே
ஒரு முறை என்னைப்பார்
உன் இரையல்ல நான்
எனக்கு ஆயிரம் கனவுகள் இருக்கின்றன
நூறு கூட நிஜமாக வேண்டாம்
பத்து பலித்தால் போதும்
கலைஞர்களை சிலுவையில்
அறைய முடியாது
கலைஞர்களை கூண்டுக்குள்
தள்ள முடியாது
கலைஞர்கள் காற்று போன்றவர்கள்.
யாருக்கும் விசுவாசமாயிருப்பதில்லை
கண்மூடித்தனமாய் காரியங்கள் நிகழ்த்த வேண்டியிருக்கும்
சத்தியத்தை சுமந்து சென்றால் போதும்.
குடையோடு எப்பவும் திரிகிறான் அவன்
மழை வருவதற்கான அறிகுறியில்லை
நனைந்திட குடைக்கு ஆசையாயிருக்கிறது.
வண்டித்தடம்
புற்கள் பூத்திருக்கின்றன
புழுதிக்காற்று வீசுகிறது.
