துலா ஸ்நானமும் திருவானைக்கா பிரசாதமும்!

ஜே பாஸ்கரன் 

தீபாவளி இந்த முறையும் அதிக சுவாரஸ்யம் இல்லாமலே கடந்துபோனது – முதல் நாள் இரவு சகோதர சகோதரிகளுடன், ஒரு கண் ‘டீ 20’ மேட்சிலும், மறுகண் இலையில் பரிமாறப்பட்ட பட்சணப் பலகாரங்களிலும் குத்திட்டு நிற்க, காற்றில் வந்த இரவல் வெடி மற்றும் வாணங்களின் ‘சட சட’ சத்தத்துடன் முடிந்தது!

மறுநாள் காலை மெதுவாகவே விடிந்தது – பெயருக்கு ஒரு கங்கா (குழாய்) ஸ்நானம், தீபாவளி மருந்து, புத்தாடை, சில செல்போன் வாழ்த்துகள், நிறைய வாட்ஸ் ஆப் வாழ்த்துகள் என தீபாவளி நகர்ந்தது. பண்டிகைக் கால சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் ஆர்வம் இல்லை, வீடு அமைதியாய் இருந்தது. ‘தலை தீபாவளி’ கொண்டாடும் உறவினர் வீட்டில் லஞ்ச் – அம்பத்தூர் செல்ல வேண்டியிருந்தது. அங்கு டிவி யில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டி மன்றம் – வழக்கமானதுதான் என்றாலும், பாரதி பாஸ்கர் உடல்நிலை தேறி பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி என்பதில் ஒரு மகிழ்ச்சி இருந்தது!

அன்று மாலை அண்ணாநகரில் மருத்துவ நண்பர் ராஜா வீட்டில் சந்திப்பு. ஐம்பது வருட நட்பு, இரண்டு மணி நேரம் இரண்டு நிமிடங்களாய்க் கழிந்தது. லயோலா காலேஜ், மெடிகல் காலேஜ், கேன்சர் இன்ஸ்டிட்யூட், இங்கிலாந்து, மருத்துவப் பேராசிரியர்கள் என கடந்த கால நினைவுகளைச் சிறிது அசைபோட்டோம் – வெகுதூரம் பயணித்திருக்கிறோம், நிறைவான பயணம்!

அன்று இரவு பதினொன்றே கால் மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்தோம் – ஓலாவில் அசோக் நகரிலிருந்து எழும்பூருக்குக் கிட்டத்தட்ட ஐநூறு ரூபாய் வாங்கினார்கள்! சென்னையிலிருந்து திருச்சிக்குச் செல்ல ஆகும் கட்டணத்தில் பாதி! அன்று கொடுத்ததில் வருத்தமில்லை –

பட்டாசு புகையாலும், காற்றின் ஈரப்பதத்தினாலும் காருக்கு முன்னால் சுமார் நான்கு அல்லது ஐந்தடி மட்டுமே பார்க்கமுடிந்தது – தெருவிளக்குகள் எப்போதையும் விட கூடுதல் மங்கலாக ஒளிர்ந்து கொண்டிருந்தன! ஓலா டிரைவர் மிகவும் கவனத்துடன் எழும்பூரில் கொண்டு விட,

அந்தக்கால முதல் பிளாட்ஃபாரத்தில் (இப்போது நான்காவது பிளாட்ஃபார்ம்!) மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தது! கும்பல் இல்லை – படுத்துக் கண்ணயர்வதற்குள், திருச்சி சந்திப்பு வந்துவிட்டது! திருச்சிக்கா…? என்பவர்கள் அடுத்த பாரா முடியும் வரைக் காத்திருக்கவும்…

இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருக்கும் மாதம் ஐப்பசி என்பதால் “துலா” மாதம் (தராசு போல – இது தி.ஜா. சொல்லும் பேப்பர்க்காரனின் நியாயத் தராசு!) எனப்படுகிறது. எல்லா நதிகளும், புண்ணிய தீர்த்தங்களும் துலா மாதத்தில் காவேரியில் சேர்ந்து விளங்குவதாக ஓர் ஐதீகம். கங்கையே மஹாவிஷ்ணுவின் அறிவுரைப்படி, துலா மாதம் அமாவாசையில், காவேரியில் ஸ்நானம் செய்து பக்தர்கள் தன்னுள் கரைத்த பாபங்களைப் போக்கிக் கொள்கிறாளாம்! துலா ஸ்நானம் அஸ்வமேத யாகம் செய்த பலனை அளிக்கிறது.

காவிரிக்கரையில் பிறந்து வளர்ந்த பசுக்களும், பறவைகளும் அதன் காற்றில் பரிசுத்தமாகி, மோட்சம் அடையும்போது, காவேரி ஸ்நானம் செய்யும் மனிதனுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்காமலா போய்விடும்?

துலா மாதத்தில் மட்டும், தென்கரையில் இருக்கும் அம்மா மண்டபத்திலிருந்து தங்கக் குடங்களில் காவிரி நீர் கொண்டு, ஶ்ரீரங்கநாதனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். (மற்ற மாதங்களில் வடகரை கொள்ளிடத்திலிருந்து வெள்ளிக் குடங்களில் அபிஷேகத்திற்கு நீர் கொண்டுவரப்படும்) ஐப்பசி இரண்டாம் நாள் அம்மா மண்டபத்துக் காவேரியில் குளித்து அரங்கனை சேவிப்பது, பூர்வஜென்மப் புண்ணியம் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்கிறது வேதம்!

மேலே சொன்னதெல்லாம், பிறகு தெரிந்து கொண்டவை – இந்த முறை ஶ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் காவேரி ஸ்நானம் செய்யவே திருச்சி வந்தோம்! ‘ஜாக்கிரதை, ஆழமும் சுழலும் இருக்கும்’, ‘கூட்டமாய் இருக்கும்’ என எச்சரித்தபடியெல்லாம் இல்லை! திருச்சி மாநகராட்சி முடிந்த வரையில் அம்மா மண்டபத்தைச் சுத்தமாக வைத்திருந்தார்கள். உடை மாற்றும் இடங்கள், கட்டணக் கழிப்பிடங்கள் எல்லாம் பூட்டியிருந்தன. நூறு பேருக்கும் குறைவான கூட்டம் –

காவிரியில் நிறைய தண்ணீர் – படித்துறைக் கல்லைத் தாண்டினால், மார்பளவு ஆழம். அதிக ஓட்டமில்லாமல் ஆரத்தழுவும் காவிரியின் வாத்ஸல்யம் சுகம்! தண்ணீரில் நின்றபடி, தூரத்தில் தெரியும் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில், காவிரி மேல் பாலம், அக்கரையின் பசுமை, சிறு பெட்டிகளாய்க் கட்டிடங்கள் எல்லாம் மிகவும் ரம்யமாக இருந்தன.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் வரவேற்புப் பலகைகள், ‘துணிகளைக் காவிரியில் போடாதீர்கள்’, ‘சுழல் நீர், புதை மணல்’ எச்சரிக்கைகளும் நீக்கமற நிறைந்து காணப்பட்டன! குளிப்பவர்களின் பாதுகாப்புக்காக, இரும்புக் குழாய்களைக் கட்டம் கட்டமாய் கட்டி, நிறுத்தி வைத்திருந்தார்கள். திசை தெரியாமல், மக்கள் எல்லா பக்கங்களையும் பார்த்துக் கும்பிட்டு, காவிரியில் முழுகி எழுந்தார்கள் – செருப்புக் காலுடன் தண்ணீருக்குள் கால் வைத்த பெண்மணியை, அங்கிருந்த பெரியவர் முறைத்து, செருப்பைக் கழற்றி விட்டு காவிரியில் இறங்கச் சொன்னார்!

குளித்து முடித்து ஈரத்துடன் வருபவர்கள் உடை மாற்றிக்கொள்ள சரியான மறைவிடம் இல்லாதது ஒரு குறை.அம்மா மண்டபத்தைச் சுற்றி விளக்கு, இலையில் அரிசி, தேங்காய், பழம் எல்லாம் வைத்துக் காத்திருக்கும் புரோகிதர்கள் (எல்லா ஜாதியினருக்குமான ‘திதி’ கொடுக்கும் வழக்கம் ), பக்தியுடன் அமர்ந்து சந்ததியினருக்கு திதி கொடுக்கும் மக்கள், ஆஞ்சனேயர், நவக்கிரகம், பிள்ளையார் சன்னதிகள், தும்பிக்கையில் காசு வாங்கி ஆசீர்வதிக்கும் யானை, சிறிய பார்க் அதில் கருடாழ்வார் தோள்மீது அமர்ந்திருக்கும் நீலக் கலர் விஷ்ணு (சுஜாதா சொல்வது போல், ‘இன்றைய ஶ்ரீரங்கம் திருச்சி கார்ப்பொரேஷனின் ஓரங்கம், ஏ.டி.எம்.களும், தாறுமாறான கேபிள்களும், அம்மா மண்டபத்திலிருந்து தொடர்ந்து நிற்கும் ஆம்னி பஸ்களும்……’ –

மாறித்தான் போயிருக்கிறது – விரைவில் சுற்றுலாத் தலமாக, டிக்கட் போட்டு, தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல், ஐஸ் கிரீம், மிளகாய் பஜ்ஜி விற்கும் இடமாக மாறுவதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளும் தெரிகின்றன!), மண்டப தோரண வாயிலில் சயனித்திருக்கும் பெருமாள் என எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத் தன்மை. என்ன மிஸ்ஸிங் என்று தெரியவில்லை – ஒருவேளை ஆத்மார்த்தமோ?ஒரு மாதிரி துலா ஸ்நானம் செய்து, அம்மா மண்டபம் சுற்றி, ஶ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தோம்.

அப்போது மணி காலை 8.15. ‘பெருமாள 9.30 க்குத்தான் சேவிக்க விடுவாங்க, இப்போ பூசை நடக்குது. சும்மா கோயில சுத்திப்பார்த்துட்டு வேணா வாங்க’ என்றார் யூனிஃபார்மில் இருந்த அறநிலைய சிப்பந்தி.

பெருமாளுக்கு இம்முறை மனமில்லை போலும் என்றெண்ணியவாறு, ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று கோபுரத்தைக் கண்டு திரும்பினோம். கோயில் பிரகாரங்களும், சுவர்களும் ‘திருவரங்கன் உலா’ ஶ்ரீ வேணுகோபாலனையும், ஓட்டு வீடுகளும் தெருக்களும் ‘ஶ்ரீரங்கத்துத் தேவதைகள்’ சுஜாதாவையும் ஞாபகப் படுத்திய வண்ணம் இருந்தன!

டிரைவர் சமயபுரத்துக்காரர் – ‘அருகில் இருக்கும் திருவானைக்காவல் போகலாமா?’ என்றார். பஞ்சபூத தலங்களில் ‘அப்புத்தலம்’ (சமஸ்கிருதத்தில் அப்பு என்றால் ‘நீர்’) -தீர்த்தத் தலம் திருவானைக்காவல் – ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அருள் உறையும் கோயில். ‘போகலாம்’ என்றேன்

….தொடரும்…+2

One Comment on “துலா ஸ்நானமும் திருவானைக்கா பிரசாதமும்!”

Comments are closed.