எஸ் வி வேணுகோபாலன்

அவளது
பரிதவிப்பின் புரிதலில்
மேலும் தவிப்பில் நான்
சொல்லி விட வேண்டும்
சொல்லாமல் ஆகாது
சொல்லித் தொலைக்காமல்
நாள் கடத்த நியாயமில்லை
என்ன நினைத்துக் கொள்வாள்
இறங்கி வீழ்ந்து விடுவோமோ
இத்தனை நாள் மதிப்பீட்டில்?
சொல்லாமல் எப்படி-
எத்தனை பார்வைகள்-
எத்தனை கடந்து போன
நேருக்கு நேர் தருணங்கள் !
யாருமற்ற
யாருமே பார்த்திராத
யாருமினி அறிந்து விட முடியாத
வாய்ப்பான கணத்தில்
எதிரே தோன்றிய
அவளது கைப்பிடித்து
கண்கள் பிணைந்து
சன்னமான குரலில்
சொல்லத் தொடங்கினேன்
அன்பின் பரிமாற்றம் தான் அது
காதல் அல்ல
என்று
சொல்லிவிட்டதாக
நிமிர்ந்து பார்க்கையில்
கடந்து போய்க் கொண்டிருந்தாள் அவள் –
சொற்களை வடிகட்டிக்
காதலை மட்டும் பருகிவிட்டு!

அருமையான அனுபவம்!
வடி கட்டிய காதல் கள்வன் 💕
It is something unique.
சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை.
கவிதையான அனுபவம்
காதலின் பரிமாற்றம்
சொல்ல வந்ததை வெகு நேர்த்தியாக சொல்வதில் வல்லவர்
ஏனோ….
நிமிர்ந்து பார்க்கையில்………
அருமை……