ஆர். வத்ஸலா/இரண்டாம் தரம்


பக்தியுடன் பாடினாலும்
ஆசாரமற்றவள் என்பதால்
பஜனை வகுப்பில்

பொது அறிவு இருந்தாலும்
‘கான்வெண்ட்‘ உச்சரிப்பு இல்லாததால்
‘பார்ட்டி‘யில்

வருடத்திற்கைந்து ஆராய்ச்சித்தாள்
பிரசுரித்தாலும்
தாய்குலத்தினள் என்பதால்
பொறியியல் ‘ப்ராஜெக்ட்‘ விவாதக் கூட்டத்தில்

சுயசார்புடையவளானாலும்
நீள முடியை பின்னி பூ வத்திருப்பதினால்
பெண்ணிய கருத்தரங்கத்தில்

இப்படி ஒவ்வொரு இடத்தில்
ஒவ்வொரு காரணத்தால்
நான் இரண்டாம் தர பிரஜை.
மலர் மல்லிகை, செப்டம்பர் 1994
“சுயம்” தொகுப்பு