சசிகலா விஸ்வநாதன்/அறியாமல் கிட்டின விடுதலை

இனிய மாலை வணக்கம்.
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
ஞாயிற்றுக்கிழமை இணையகால கவியரங்கம்
மாலை மணி 6.15
கவிதையின் தலைப்பு

அறியாமல் கிட்டின விடுதலை

அறியா வயதில்
அம்மையும் அப்பனும்
அவ்வுலகம் ஏக;
அத்தையின் இல்லம்
அடைக்கலம் அடைந்தேன்.
அரசினர் பள்ளியில்
அனைத்தும் இலவசம்.
அழையா விருந்தெனில்
ஏவா அடிமைதானே!
நைந்த உடையிலிருந்து
சீருடை மாற்றி
பள்ளி போகையில்
துள்ளுமே என் மனது!
இறுதி தேர்வில்
பள்ளியில் முதல்.
பங்கஜம் டீச்சர் தயவில் விண்ணப்பம்
செய்து;
எப்படியோ நீட் பரிட்சை தேர்வில்
மருத்துவம் படிக்க
இடம் கிடைக்க;
கூடவே திருட்டு பட்டம்
அத்தையின் ஐந்து
பவுன் சங்கிலி
தொலைந்து போனதில்…
தயவின்றி வெளியேற்றம்
வீட்டை விட்டு;
பங்கஜம் டீச்சர்
வீட்டில் மூன்று
மாதம் அடைக்கலம்.
பயத்துடன் சென்னை
பயணம்…
அது
என் வாழ்க்கையின்
திருப்பம்.
கேட்க யாருமில்லை
சொல்ல யாருமில்லை
நல்லது- அல்லது
நானே முடிவு
எடுக்க;
கொஞ்சம் கொஞ்சமாய்
தெளிந்து எனக்கு, நான் அறியாமலே கிடைத்த விடுதலையை
உணர;
யாருமில்லை
எனக்கு என்ற எண்ணம் ;
கருத்தாய்வளரவும்
கவனமாய்வாழவும் கற்றுக் கொடுத்தது.
தனிமனித சுதந்திரம்
என்னை பக்குவமாக்க;
இன்று நான் அரசு மருத்துவர்
நான் படித்த கல்லூரியிலே…
இப்போது புது பட்டம்
எனக்கு…
பிடிவாதக்காரி !
ஏன் இன்னும் மணம்
முடிக்கவில்லை…
என்னும் வினாவுடன்.
நானோ என் விடுதலையை முற்றுமாக துய்த்துக்கொண்டு,
நலமாகவே இருக்கிறேன்



5-11-2023