அழகியசிங்கர்/அவள் வரவே இல்லை…

மழை. மழை பெய்து கொண்டே இருக்கிறது. மகாதேவன் குடையை எடுத்துக் கொண்டு. வழக்கமான இடத்தில் நின்று கொண்டிருக்கிறான். எப்போதும் போல். மழை பெய்தால் அந்த இடத்தில் போய் நின்று விடுவான். பவித்திராவிற்காகக் காத்திருப்பான். ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதெல்லாம் அவன் அங்க போய் நிற்பது நிச்சயம்.
பவித்ரா வருகிறாளா என்று காத்திருப்பதும் நிச்சயம்.
தீவிரமாக மழை பெய்த நாளில்தான் அவனை விட்டுப் போய்விட்டாள். ஞாபகம் இருக்கிறது. மழை பெய்து கொண்டே இருந்தபோதுதான் பவித்ரா அவனை விட்டுப் போய் விட்டாள். அவள் திரும்பி வரவே இல்லை.

கடந்த 5 ஆண்டுகளாக அவள் வீடு திரும்பி வரவே இல்லை.

இதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

அவன் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணி புரிந்து கொண்டிருந்தான். திடீரென்று ஒருநாள் இதுவரையில் சம்பாதித்தது போதுமென்று விட்டுவிட்டான்.

பொழுதுபோகப் புத்தகங்கள் படிப்பது நல்ல சினிமாக்களைப் பார்ப்பது. இசையை கேட்பது. சுற்றுலா செல்வது என்றெல்லாம் பொழுதைக் கழித்தான்.

அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. அது பெரிய குறையாக அவர்கள் இருவருக்கும் இருந்து வந்தது.

வேலை எதற்கும் போகாமல் வீட்டில் இருப்பது பவித்திரா விற்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை.

அவன் வீட்டில் இருக்கும் போது அவளை அதிகாரம் செய்து கொண்டிருப்பான்.

ஒரு நாள். தீர்மானித்தபடி அந்த வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாள் பவித்திரா.

அன்று மழை. பயங்கரமாகப் பெய்து கொண்டிருந்தது.

அன்று அவன் குடையை எடுத்துக் கொண்டு அவள் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தான்.

கடந்த 5 ஆண்டுகளாக மழை பெய்தால் அவன் அங்க போய் நின்று விடுவான்.

அவள் வரவிற்காகக் காத்துக் கொண்டிருப்பான்.
குடையை வைத்துக்கொண்டு. அவள் பஸ்ஸில் வந்து இறங்குவாளென்று காத்துக் கொண்டே இருப்பான்.

ஆனால் அவள் வரவே இல்லை.